அழகியசிங்கர்
பகிர்வு
ஆர். ராஜகோபாலன்
பக்கத்துக் கோயிலில் தமிழ்த்தலைவன்* பற்றிய பொழிவு
ஒரு நூறு பேருக்கும் மேல் வருகை சுவரோரத்தில்
நெகிழி நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு ஒவ்வொனறாய்
வெள்ளை சிகப்பு நீல வண்ணங்களில் எடுத்துப்
போட்டுக்கொள்கிறார் வருபவர் ஒவ்வொருவரும்
ஒன்று மட்டும் கடைசியில் தேறவேயில்லை ஒரு கால்
முறிந்து தள்ளாடுகிறது இப்பக்கமும் அப்பக்கமும்
கடைசி வரிசைக்காரர் எச்சரிக்கிறார் இதைச்சொல்லி
இப்போது வருவோரையெல்லாம் மீண்டும் மீண்டும்
யாரேனும் உடல் பருமனானவர் உட்கார்ந்திருப்பாரோ
கீழே விழுந்திருப்பாரோ மேற்கொண்டு என்ன ஆயிற்றோ
நல்ல வேளை இப்போது அதற்கு தேவையில்லை
உடல் சுருக்கி கண்களை மூடிமூடித்திறந்து
உடைந்த நாற்காலிக்குள் படுத்திருக்கிறது
ஒரு பழுப்புநிறக் குட்டிப்பூனை
*தமிழ்த்தலைவன்: பேயாழ்வார்
நன்றி : கால்நடைக் கவிதைகள் – ஆர்.ராஜகோபாலன், வித்யுத் பப்ளிகேஷன்ஸ், மனை எண்.10 மேட்டுத்தெரு, நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை, பேசி : 900 310 76 54 பக். 64 – விலை : ரூ.100