நீங்களும் படிக்கலாம்..

.

அழகியசிங்கர்

இன்றோ நாளையோ 925 பக்கங்கள் கொண்ட நாவலைப் படித்து விடுவேன். ஒரு பங்களூர் பயணத்தின்போது ஆரம்பித்தேன். பின் இன்னொரு பயணம் போது தொடர்ந்து படித்தேன்.  800 பக்கங்கள் வரை படித்து முடித்தேன்.  கிட்டத்தட்ட இன்னும் 200 பக்கங்கள் வரை படிக்க வைத்திருந்தேன். பின் புத்தகக் காட்சியை முன்னிட்டு புத்தகங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக என் கவனம் திரும்பியது.  ஆனால் எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விடவேண்டுமென்று தோன்றியது.

இதோ இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வேண்டும்.  புத்தகத்தைப் படித்து விடலாம் ஆனால் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.  நீங்களும் படிக்கலாம் என்ற என் முதல் புத்தகத்தை ( 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்) எழுத்தாளர் அசோகமித்திரனிடம் கொடுத்தேன்.  அவர் அதைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.  ‘ஒரு புத்தகத்தைப் படித்துவிடலாம்.  ஆனால் அப் புத்தகத்தைப் பற்றி எழுதுவது சுலபமல்ல.  சமயத்தில் என்ன எழுதவேண்டுமென்று தோன்றாது,’ என்றார். 

உண்மைதான்.  ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு என்ன எழுதுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். பொதுவாக ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, பிரமாதம் இதில் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதலாம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஒரு புத்தகத்தைப் பற்றி என்ன எழுதுவது?  இதை இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது எதிர்கொள்ளாமலிருக்கப் போவதில்லை.  ஆனால் ஒன்றுமே எழுதாமல் விட்டுவிட்டால் இந்தப் புத்தகம் எந்தக் குறிப்பும் இல்லாமல் என் கவனத்திலிருந்து மறந்து விடும். அதனால் நான் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதாமல் இருக்க மாட்டேன்.  ஆனால் வாசிக்கிறவர்கள் இதை ரசிக்க முடியுமா? இப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்ன நினைப்பார் என்றெல்லாம் தெரியாது. இதோ இன்னும் ஒரு நாள் இரண்டு நாளில் எழுத வேண்டியதுதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன