அழகியசிங்கர்
நேற்று என் பேரன் பிறந்தநாள். மாம்பலத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்தேன். சரியாக 10.30 க்கு அன்னதானம் ஆரம்பமாகிவிடும். 200 பேர்களுக்கு மேல் அன்னதானத்தைப் பெற்றுச் செல்வார்கள். ஒரு பொட்டலமதான். நேற்று வெத்தக் குழம்பு சாதம்.
அன்னதானம் செய்பவர்களுக்கு 2 பொட்டலங்கள் கிடைக்கும். நானும் மனைவியும் ஒரு பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகும் இன்னும் ஒருவர் சாப்பிடும்படி மீந்தது.
அதனால்தான் சொல்கிறேன் மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர்கள் வீட்டில் சமையலே செய்யாமல் பொழுதைப் போக்கலாம். சாப்பாட்டிற்காக ஹோட்டலுக்குப் போய் செலவு செய்ய வேண்டாம்.
ஒரு நாளைக்குக்குறைவாக ரூ.30 மட்டும் செலவு செய்தால் போதும். காலையில் எழுந்தவுடன் வெங்கடேஸ்பரா போளி ஸ்டாலுக்குப் போய் ரூ.15க்கு காப்பி சாப்பிடலாம். பின் அனுமார் கோயிலுக்குப் போனால் பொங்கல் தானமாகக் கிடைக்கும். தானமாகக் கிடைக்கும் பொங்கல் ஒட்டலில் காசு கொடுத்து வாங்கும் பொங்கல் அளவை விட அதிகமாக இருக்கும்.
பத்துமணி சுமாருக்கு சாய்பாபா கோயிலுக்குப் போனால் ஒரு பொட்டலம் சாதம் தானமாகக் கிடைக்கும். தக்காளி சாதம், புளியஞ்சாதம், சாம்பார் சாதம் என்றெல்லாம் கிடைக்கும். ஒருவருக்கு அதிகம். இரவு நேரத்தில் கூட வைத்திருந்து சாப்பிடலாம்.
மாலை நேரத்தில் திரும்பவும் அனுமார் (மாம்பலத்தை ஒட்டி
அசோக்நகரில் உள்ளது) கோயிலுக்குச் சென்று தயிர் சாதம் வாங்கிக் கொள்ளலாம். திரும்பவும் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் ஒரு காப்பி ரூ.15 க்கு வாங்கிக் குடிக்கலாம். இரவு நேரத்தில் அனுமார் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். இரவு நேரத்தில் நடை சாத்தும் சமயத்தில் பருப்பு சாதமும் கொடுப்பார்கள். எல்லாம் கடவுள் பிரசாதம். இலவசம்.
இப்படி பெரிய செலவு செய்யாமல் (ரூபாய் 30வரைதான் செலவு) வீட்டில் யாரும் சமைக்க இல்லாவிட்டால் ஒருநாள் பொழுதை நீங்கள் கழித்து விடலாம். அதனால்தான் மாம்பலத்தில் வீட்டில் யாரும் சமையல் செய்ய வேண்டாமென்கிறேன்.