உலக சினிமா சில தரிசனங்கள்


அழகியசிங்கர்

செந்தூரம் ஜெகதீஷின் புத்தக வெளியீட்டு விழா நேற்று (07.12.2019) இக்சா மையத்தில் நடந்தது.  அவர் சினிமாவைப் பற்றி இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார்.  முதல் புத்தகம் உலக சினிமா சில தரிசனங்கள்.  இரண்டாவது  புத்தகம் இந்திய சினிமா சில தரிசனங்கள்.  இந்த இரண்டு புத்தகங்களையும் முழுவதும் படித்து கூட்டத்தில் பேச நினைத்தேன். ஒரு புத்தகம் 196 பக்கங்களும், இரண்டாவது புத்தகம் 92 பக்கங்களும் கொண்டவை.

நான் முதல் புத்தகத்தைத்தான் படித்தேன்.  இரண்டாவது புத்தகத்தை நுனிப்úபுல் மேய்ந்தேன். ஒருநாளில் படித்துவிட்டுப் பேச நினைத்தேன்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.  சினிமா என்பது ஒரு கலை.  அதில் பலருடைய ஈடுபாடு அவசியம்.  ஒவ்வொருவரும் அதில் எப்படி ஈடுபாடு கொள்கிறார் என்பது முக்கியம்.  

ஒரு வரியில் கதையைச் சொல்வதிலிருந்து பலர் உரையாடி கதையை உருவாக்குகிறார்கள்.  அந்தக் கதையை சினிமாவாக மாற்றுவதற்குள் கதை வடிவம் மாறிவிடும்.  பல நாட்கள் முயற்சி செய்கிறார்கள்.  இப்படி கதையாக சினிமாப்படம் உருவாகும்போது அதைத் திரையிட வேண்டுமென்றால் இன்னும் யத்தனம் வேண்டும்.

அதனால் சினிமாப்படம் தயாரிப்பதென்பது அசுரர்கள் உலகத்தைச் சார்ந்தது.  உழைப்பு, முதலீடு, எதிர்பார்ப்பு என்று வேற வழிக்குப் போய்விடும். அதிக முதலீடும் பலருடைய உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த எந்தக் கவலையுமில்லாமல் ரசனை அடிப்படையில் ஒரு சினிமாவை தியேட்டரில், டிவிடியில் பார்த்துவிட்டு அதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டி உள்ளது. 

ஒரு வரியில் சொல்லப்பட்டு ஆரம்பிக்கிற கதை எல்லோருடைய உழைப்பால் சினிமாவாக மாறுகிறது.  அதைத் திரும்பவும் எழுத்துத் திறமை கொண்ட எழுத்தாளன் புத்தகத்தில் கொண்டு வரும்போது முழுத் திரைக்கதையைச் எழுதுகிறான்.  அவன் பார்வையில் அந்தக் கதை எப்படி வந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறான்.

அந்த முயற்சியைத்தான் சினிமாவைப் பற்றி எழுதுகிற பலரும் செய்கிறார்கள். ‘வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்’ என்ற தலைப்பில் கோ.தனஞ்ஜெயின் எழுதியிருக்கிறார்.  அயல் சினிமா என்று எஸ் ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறார், உலக சினிமா 1,2,3  என்ற தலைப்பில் செழியன் 3 பகுதிகள் கொண்ட புத்தகங்கள் கொண்டு வந்துள்ளார். இப்படிப் பல எழுத்தாளர்கள் சினிமாவைப் பற்றி தான் ரசித்ததைப் புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளார்கள்.  

இந்தப் புத்தகங்களில் ஒரு சினிமாவை எப்படிப் பார்க்கிறோம்.  தாம் ரசித்த சினிமாக்களை எப்படி சொல்லியிருக்கிறோம் என்றெல்லாம் வருகிறது.  

செந்தூரம் ஜெகதீஷ் உலச சினிமா சில தரிசனங்கள் என்ற புத்தகத்தில் 40 படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இவையெல்லாம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்.    ஒவ்வொரு முறையும் தான் பார்த்து ரசித்தப் படங்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியபோது அவர் குறிப்பிடுகிற 40 படங்களையும் நான் பார்க்கவில்லை என்பது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.  சில நிமிடங்கள் இந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு யோசித்தேன்.  இந்தப் புத்தகத்தை இப்படிப் படிக்கக்கூடாது என்று தோன்றியது.  இதில் குறிப்பிடப்படுகிற படங்களை ஒவ்வொன்றாய் நாமும் பார்த்து அவர் எழுதியதை ரசிக்க வேண்டுமென்று பட்டது.  மேலும் அவர் குறிப்பிடுகிற படங்கள் எல்லாம் யூ ட்யுப்பில் எளிதாகக் கிடைக்கிறது.  அதையெல்லாம் பார்த்துவிட்டு செந்தூரம்ஜெகதீஷ் எழுதியதையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர் சொல்வது சரியா இல்லையா என்பது உள்ளே போகும். அதாவது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எழுத்தைத்தான் படிக்க முடிகிறது.  அதன் மூலம் சினிமாவை உணர முடியவில்லை.

உதாரணமாக பாப் டைலானின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் üஎதிர்ப்பே எனது பாடல்ý என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ü80களின் தொடக்கத்தில் பாப்டைலானின் பாடல் ஒன்றை கேட்க நேரிட்டது.  கேட்டதுமே அப்பாடல் மனதுக்குள் ஒரு மழைச்சாரல் போல பொழிந்து வசந்தமாக பரவசமூட்டியது.ý என்று பரவசமாக எழுதுகிறார்.  இந்தப் படத்தை 80களில் பார்த்து இதுமாதிரி எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.   ஆனால் இப்போது இந்தப் படத்தைத் திரும்பவும் பார்த்தால் எது மாதிரியான எண்ணம் அவருக்குத் தோன்றும்? üபாப்டைலன் தற்செயலாய் கிடைத்த ஒரு வைரக்கல்.ý  இப்படி பல வரிகளை உணர்ச்சிகரமாக செந்தூரம் ஜெகதீஷ் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் எழுதி உள்ளார். 

பல கட்டுரைகள் நீண்ட கட்டுரைகளாக இருக்கின்றன.  இன்னும் சுருக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.  சினிமா என்பது பார்ப்பதற்குத்தான்.  சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் சினிமாவைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்ட வேண்டும்.  ஒவ்வொரு சினிமா படத்தைப் பற்றியும் ஒரு அகராதி மாதிரி, மிகக் குறைவான வரிகளில் தயாரிக்க வேண்டுமென்று தோன்றியது.  இது சாத்தியமா என்பது தெரியவில்லை.    

செழியனின் உலக சினிமா என்ற புத்தகத்தைப் படிக்கும்போது உணர்ச்சி வசப்படாமல் கதையை விவரிக்கிறார்.  படிப்பவரை அந்தச் சினிமா படத்தை எப்படியாவது பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்குகிறார்.  ஆனால் ஜெகதீஷ் தரிசனத்திற்குப் போய்விடுகிறார.  

40 படங்களை தன் புத்தகம் மூலம் அறிமுகப்படுத்திய செந்துரம் ஜெக்தீஷை நான் வரவேற்கிறேன்.  நான் இதுவரை அறிந்துகொள்ளாத 40 படங்கள் என்று அதிசயிக்கிறேன்.  இந்தப் புத்தகத்தை அவரே வெளியீட்டுள்ளார்.  புத்தகத்தின் விலை ரூ.150. தொலைபேசி எண் : 9444090037

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன