மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 127
பாம்புகளற்ற மகுடிகள்
சௌந்தர மகாதேவன்
அவன் விதவிதமாய்
மகுடிகளோடு மண்டியிட்டு
அமர்ந்திருக்கிறான்.
படமெடுக்கும் பாம்புகளை
ஆசையாய் அடக்க
அவன் முன்னால்
அழகழகாய் மகுடிகள்.
மொழியாய் ஒரு மகுடி
வண்ணமயமான மாயாஜால
ஜிகினாவாய் ஒரு மகுடி
விவாதக்கூச்சல்களோடு
ஒலிவாங்கியாய் ஒரு மகுடி
விசும்பல் ஒலியோடு ஒரு மகுடி
ஒவ்வொரு மகுடியையும்
அவன் எடுத்தெடுத்து ஊதினான்
பிடாரனின் ஓசை காற்றில் கிளம்பியதைக்
கேட்டன செவியில்லாப் பாம்புகள் அனைத்தும்
மகுடி மயக்கம் மரணத்தொடக்கமென
ஆடுதல் விடுத்து அப்பால் நகன்றன
பாம்புகள் இல்லாப் பிடாரன்
அன்றிலிருந்து வாசித்தலை
நிறுத்தினான் யோசித்தலுடன்
நன்றி : தண்ணீர் ஊசிகள் – சௌந்தர மகாதேவன் – மேலும் வெளியீட்டகம், 9 இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை 627002 – பக்கங்கள் : 118 – விலை : ரூ.120