துளி – 66 திருப்பதி பயணம்.

அழகியசிங்கர்

எனக்கு திருப்பதி பயணம் என்றாலே நடுக்கமாக இருக்கும்.  அவ்வளவு எளிதாக ஏழுமலையானைப் பார்த்து விட முடியாது.  நான் கடவுள் பக்தி உள்ளவனா நாத்திகனா என்று எனக்குத் தெரியாது.  கோயிலுக்குள்ளேயே போகாமல் நான் நண்பர்களுடன் கோதண்டர் ராமர் கோயிலுக்குள் உட்கார்ந்து பேசிவிட்டு வந்து விடுவேன்.

இந்த முறை காரில் கோயிலுக்குப் போவதாக முடிவு எடுத்தோம்.  குடும்பத்தோடு எல்லோரும்.  பேத்திக்கு மொட்டை அடிக்க வேண்டுதல்.  காலை 7 மணிக்கே கிளம்பிவிட்டோம்.

ஒரு இடத்தில் நின்று இட்லி சாப்பிட்டோம்.  நான் இரண்டு இட்லி மட்டும் எடுத்துக்கொண்டேன்.  முன்பெல்லாம் 5 அல்லது 6 இட்டிலிகளை உள்ளே தள்ளுவேன்.  வயிற்றை நம்ப முடியாது. பயம். 

ஒரு முறை 10 நிமிடத்தில் 20 இட்லிகளைச் சாப்பிட வேண்டும்.  நோ சட்னி. நோ சாம்பார். வெறும் இட்லி மட்டும்.  நான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு 9 நிமிடங்களில் சாப்பிட்டேன்.  எழுத்தாளர் நா பார்த்தசாரதி ஒரு ரயில் பயணம் போது, ‘இட்டிலிக்குண்டோ இணை,’ என்ற ஈற்றடி கொடுத்த வெண்பா எழுதச் சொன்னாராம்.

கீழ்த் திருப்பதியில் அலர்மேல் மங்கம்மாள் கோயிலுக்குச் சென்றோம்.  அங்கும் கூட்டம் அதிகம்.  க்யூவில் நின்றோம்.  எனக்குக் கூட்டம் கண்டாலே பிடிக்காது.  ஆனால் கூட்டத்தைப் பார்த்து ரசிப்பது என்று கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நல்ல ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கினோம்.  அடுத்தநாள் காலையில்தான் மேல் திருப்பதி. பேத்தி மொட்டை அடிக்கும்போது அழவில்லை.  ஆச்சரியம்.  ஒரு ஓட்டலில் போய் டிபன் சாப்பிட்டோம்.  மினி டிபன்.  ஏகப்பட்ட ஐட்டம்களை வைத்தவிட்டான்.  திணறினேன். ரூ.300க்கு டிக்கட் வாங்கியிருந்தோம்.  ஆனால் காலை பத்து மணிக்குமேல்தான் உள்ளே போக விட்டார்கள்.  பிரேக் தர்சன் என்ற பெயரில் 600 பேர்களை விட்டார்கள்.  எம்எல்ஏ, எம்பி சிபாரிசு கடிதம் வாங்கி ரூ.500 பணம் செலுத்தினால் இந்தத் தரிசனத்திற்கு உள்ளே விடுவார்கள்.  

சாமி சந்நிதானத்தை எட்டிப்பிடிக்க 2 மூன்று மணி நேரங்கள் போய்விடுகின்றன.  பிடித்துத் தள்ளுகிற மாதிரி கூட்டம்.  உள்ளே போனால் சில வினாடித் துளிகள்தான் சாமியைப் பார்க்க முடிகிறது.  கூட்டத்தை விட்டு வெளியே வந்தால் போதும் போதுமென்றாகி விடுகிறது.  உண்டியில் காணிக்கைச் செலுத்துமிடத்தில் அடிதடி சண்டையே நடக்கும் போல் தோன்றுகிறது.  

ஒரு நாளைக்கு காணிக்கையாக கோடி ரூபாய்க்கள் வருவதாக சொல்கிறார்கள். ஜே கிருஷ்ணமூர்த்தி இதைக் கிண்டல் செய்து பேசியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி இங்கே க்யூவில் நின்று தரிசனம் செய்திருக்க முடியாது. எங்கள் குழுவிற்கு பத்து லட்டுகள் கிடைத்தன. பீமவிலாஸில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது மணி 2 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்தபிறகு திருப்பதி போய் வந்தது பயங்கர கனவுபோல் தோன்றியது.    

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன