அழகியசிங்கர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை. எதுவும் படிக்க முடியவில்லை. பேரன், பேத்தியைப் பார்த்துக்கொள்ளும்படி ஆயிற்று. உண்மையில் தப்பாகச் சொல்கிறேன். அவர்கள்தான் என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.
ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். 796 பக்கங்கள் 600க்கும் மேற்பட்ட கவிதைகள். முதலில் முன்னுரையைப் படித்தேன். அந்த முன்னுரை எழுதியவர் என் நண்பர்தான். முன்னுரை வருத்தத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தக் கவிதைப் புத்தகத்தைத் தனியாக வைத்துவிட்டேன். அந்த முன்னுரை குறித்து எழுத வேண்டும். பின் கவிதைகளைப் படித்துத் தனியாக எழுத வேண்டும்.
184 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைப் படித்தேன். எஸ்வி.வி என்ற எழுத்தாளர் எழுதிய ஹாஸ்யக் கதைகள். இந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து முடித்தேன். ஹாஸ்யக் கதைகள் என்பதைவிட ஹாஸ்யக் கட்டுரைகள் என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். லா.ச.ரா வின் குருநாதர் எஸ்.வி.வி. 1993ல் வாங்கிய இந்தப் புத்தகத்தை இப்போதுதான் எடுத்துப் படித்து முடித்தேன்.
பதிப்புரையில் எஸ்.வி.வி ஒரு சகல கலா வல்லவர் என்று பதிப்பகத்தார் குறிப்பிடுகிறார். அவருக்கு ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் போன்ற பல மொழிகளிலும், ஜோசியம், வைரம் பார்ப்பது, மாடு வாங்குவது, பாட்டு, வீணை வாசிப்பது போன்ற இன்னும் பல கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். 1933 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்து, ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 1952ல் மறைந்து விட்டார். ஆனால் இன்னும் கூட இவர் கட்டுரைகளைப் படிப்பதில் ஒரு வித அலுப்போ சலிப்போ ஏற்படுவதில்லை. 11.8.1940ல் எஸ.வி.விப்பற்றி கல்கி இப்படி எழுதியிருக்கிறார்.
‘நான் சென்னைக்கு வந்த புதிதில் , ‘இந்த எஸ்.வி.வி யார்?’ உங்களுக்குத் தெரியுமா?’ என்று சென்னையில் சந்தித்தவர்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கேட்கும்படியாக செய்தது, எஸ்.வி.வி ஆங்கிலத்தில் எழுதிய கோவில் யானை என்ற கதைதான். இதைப் படித்தபோது நான் சிரித்ததை நினைத்தால் இப்போது கூட வயிற்றை வலிக்கிறது.’ என்கிறார் கல்கி.
ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த எஸ்.வி.வி தமிழில் எழுதச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தார் கல்கி. நண்பர்கள் சிலருடன் இரவு பதினோரு மணிக்கு எஸ்.வி.வி யை திருவண்ணாமலையில் போய்ப் பார்க்கிறார். அப்போது எஸ்.வி.வியை தமிழில் எழுதும்படி வற்புறுத்துகிறார் கல்கி.
‘தாக்ஷôயணியின் ஆனந்தம்’ என்ற கதையை 1.7.1933ல் ஆனந்தவிகடனில் எஸ்.வி.வி எழுதியிருக்கிறார். அதைப் பாராட்டியவர்கள் ராஜாஜி, டி கே சி.
கிட்டத்தட்ட இந்தப் புத்தகத்தில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாம் கதைகள் என்று குறிப்பிட்டாலும் கட்டுரைகள் என்ற வகைமையில்தான் அடங்கும் என்று தோன்றுகிறது. காந்தாமணி போன்றது கதையாகவும் வந்திருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் எஸ்.வி.வி ஹாஸ்யத்தை பலர் காப்பி அடித்து எழுதுவதாகத் தோன்றுகிறது. என் கண் முன்னே ஒரு உதாரணம். ராகவன் என்பவர் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் ஒரு முறை எழுதுவது எஸ்.வி.வியை ஞாபக மூட்டுகிறது.
ஏண்டிக்குத் தலைமுழுக்கு என்ற தலைப்பில் ஒரு கதை அல்லது கட்டுரை. சாரஙக்பாணி வீட்டில் அவரும் அவர் மனைவி கோமளமும் உபசரிப்பதில் வல்லவர். குறிப்பாக அவர் மனைவி கோமளமும் வல்லவள். கதைசொல்லியைப் பார்த்தவுடன் ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்று கேட்காமல் இருக்க மாட்டாள். சாரங்கபாணிக்கு சம்சாரம் பெருமையே அடங்காப் பெருமை. கோமளம் பத்திரிகைகளுக்கு ருசிகரமான கட்டுரைகள் எழுதுவாள். கட்டுரைகள் எழுதுவதோடலலாமல் பொது ஜனத் தொண்டிலும் ஈடுபட்டுப் பிரஸித்து பெற்றிருப்பவள். கோமளத்தின் தொண்டு மாதர்கள் சம்பந்தமானது. அவர்கள் அந்தஸ்தை உயர்த்தும் இயக்கத்தில் அவள் மிகவும் ஆழ்ந்திருக்கிறவள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டிற்கு வெளியே எங்காவது போக வேண்டுமென்று தோன்றுகிறது. “எங்கே திரும்பிப்போவேள்? எப்பொழுது திரும்பி வரும்படி யிருக்குமோ?” என்று கேட்டாள் கதைசொல்லியின் மனைவி மீனா.
“போகும்போது எங்குப் போகிறாய்?” என்று கேட்காதேன்
என்று உனக்கு எதத்னைத் தரம் சொல்லியிருக்கிறேன்? சமுத்திரத்தில் போய் விழப்போகிறேன்,ýý என்கிறார் கதைசொல்லி.
“அதெற்கெல்லாம் தைரியம் வேண்டாமா?” என்று கிண்டலாகக் கேட்கிறாள் மனைவி கதைசொல்லி சாரங்கபாணி வீட்டிற்கு வருகிறார். சாரங்கபாணி மணிலாகொட்டையை கொடுத்துவிட்டு உபசரிக்கிறார். பின், உள்ளே பார்த்து, “கோமளம்மா, இங்கே யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்,” கோமளம் காதிற்கு விழும்படி கூப்பிடுகிறார். சாரங்கபாணி பெண்ஜாதியை வாங்கள் போங்கள் என்று மரியாதையாய்ப் பேசினது அச்சரியமாக இருக்கிறது கதைகொல்லிக்கு.
எதிரில் வந்த கோமளம், கதைசொல்லி யைப் பார்த்து அவர் மனைவியை எப்படி அழைக்கிறார் என்று கேட்கிறாள். அடி போடி என்று அழைப்பதாகக் கூறுகிறார். “இனிமேல் அப்படி அழைக்காதீர்கள்?” என்கிறாள் கோமளம். ‘பெண்மணிகளே. சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்?’ என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் அச்சடித்திருக்கிறாள் கோமளம். அந்தத் துண்டுப் பிரசுரத்தில் 40, 50 பிரதிகள் கதைசொல்லியிடம் விநியோகம் செய்ய கொடுக்கிறாள். ஏற்கனவே அவர் மனைவியிடமும் கொடுத்திருக்கிறாள்.
வீட்டிற்கு வந்தவுடன் கதைசொல்லியுடன் அவர் மனைவி நடத்தும் உரையாடல் நகைச் சுவை ததும்ப.
“இனிமேல் அடிபோட்டுக் கூப்பிடக்கூடாது,” என்று மிரட்டுகிறாள் அவர் மனைவி.
ஆனால் கோமளம்மாள் சொல்வதிலும் முழுதும் நியாயம்தானே என்கிறார் கதைசொல்லி.
இதில் உள்ள 23 கதைகளையும் தானே சொல்வது போல் நகர்த்திக்கொண்டு போகிறார் எஸ் வி வி. சம்சாரத்திற்குத் தேக அசௌக்கியம் என்ற கட்டுரையில் மனைவியின் தேக அசௌக்கியதால் ஏற்படும் பாதிப்பை நகைச்சுவையாக சொல்லி சென்றிருக்கிறார்.
கிராம அனுபவம் என்ற கதையில் துக்கம் விஜாரிக்க ஒரு கிராமத்திற்குப் போய் படுகிற அவஸ்தையை விவரிக்கிறார். இது மாதிரியான அனுபவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.
கிறிஸ்துமஸ் என்ற தலைப்பில் உள்ள கதையில் வீட்டிற்கு எதிர்பாராதவிதமாய் விருந்தாளிகள் வந்திருந்து தொந்தரவு செய்வதுபோல் கதை.
அசட்டுப் புளுகு என்ற கதையில் எதாக இருந்தாலும் புளுகு சொல்லிக்கொண்டிருப்பான். மத்தியானம் டிபன் சாப்பிட்டீர்களா? என்று மனைவி கேட்டால், டிபன் சாப்பிட்டிருப்பான் ஆனால் அவளிடத்தில் இல்லை என்று புளுகுவான். எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான் அவன் வேலை. கதையைப் படித்தப்பிறகு நானும் அப்படி இருக்கலாமென்று தோன்றுகிறது.
விருந்துண்ணல் என்ற கதையல் வீட்டில் சாப்பிடுவது பற்றியும், ஓட்டல்களில் சாப்பிடுவதைப்பற்றியும், மற்ற நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுவதைப்பற்றுயம் நகைச்சுவை உணர்வோடு படிப்பவரை கவர்ந்திழுக்கிற நடையில் வெளிப்படுத்துகிறார்.
இதையெல்லாம் எப்படி விவரிக்கிறது என்று தெரியவில்லை ஒருவர் புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் ரசிக்க முடியும். நமக்கும் இதுமாதிரி எழுத வேண்டுமென்று தோன்றுகிறது.
அல்லயன்ஸ்தான் எஸ்.வி.வி கதைகளை வெளியிட்டுள்ளார்கள். எஸ் வி வி எழுதிய மற்ற நூல்களையுû; வாங்கிப் படிக்க வேண்டும்.