இருபத்தேழாம் நாள் வாசிப்பனுபவம் (28.09.2019)



அழகியசிங்கர்

சங்கரராமின் காணிக்கை என்ற சிறுகதைத் தொகுப்பு தற்செயலாக என் கண்ணில் தட்டுப்பட்டது.  உடனே அதைப் படித்து அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  சங்கரராம் புத்தகமெல்லாம் தேடத் தொடங்கியபோது சங்கரராமன் நாவலான காரியதரிசி என்ற நாவல் கிடைத்தது.  அது கலைமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது.  முதல் பதிப்பாக அந்தப் புத்தகம் 1949ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பாக 1964ஆம் ஆண்டு வந்துள்ளது.

காலையில் நடராஜனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்தான் மண்ணாசை என்ற சங்கரராமின் நாவல் ஒன்றையும் குறிப்பிட்டார்.

சிறுவாணி வாசகர் மையம் மூலம் 2018 இந் நாவல் என் கைக்கு வந்திருக்கிறது.  திரும்பவும் தேடிப் பார்த்தபோது என் புத்தகக் குவியலில் இது கிடைத்தது.  அதேபோல் லயம் வெளியீடாக வந்த புத்தகமும் கிடைத்தது.

மண்ணாசை என்ற நாவல் பிரபலமாக இருந்தாலும் என்னால் சங்கரராம் என்ற பெயருடன் அதை யோசிக்கத் தோன்றவில்லை. மேலும் காரியதரிசி என்ற நாவலையாவது அல்லது மண்ணாசை என்ற தலைப்பில் உள்ள நாவலையாவது படித்திருக்க வேண்டும்.  நான் இதுவரை படித்ததில்லை. இனிமேல்  அவற்றைப் படித்துவிட்டு பிறகு எழுதுவதாக உத்தேசித்துள்ளேன்.

காணிக்கை என்ற சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கலாம்.  இதில் 11 கதைகள் அடங்கிய தொகுப்பு.  மண்ணாசை என்ற நாவலில் கால சுப்ரமண்யம் சங்கரராமின் பல சிறுகதைத் தொகுப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.  அதெல்லாம் இப்போது கிடைக்குமாவென்று தெரியவில்லை.   மேலும் அவர் குறிப்பிடும்போது, பாசம், பொன் படைத்த மனம், தண்டனையே வெகுமானம், பரிசலோட்டி, ரத்தவாகம், பணம் பாஷாணம், கடவுளுக்கு வைத்தியம் போன்ற சில சிறுகதைகள் மட்டும் இலக்கியத்தரம் வாய்ந்தவை என்றும் மற்றெல்லாம் வெகுஜன பத்திரிகைக் கதைகள் என்பதுபோல் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருத்துப்படி பார்த்தால் நான் படித்திருக்கும் காணிக்கை யில் உள்ள கதைகள் அனைத்தும் வெகுஜன இதழ் கதைகளாகத்தான் தோன்றுகின்றன. முதலில் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.  ஆனால் சங்கரராமன் கதைகள் இப்போது படிக்க எப்படி உள்ளன என்ற குறிக்கோளுடன்தான் படித்தேன். எல்லாவற்றையும் என்னால் படிக்க முடிகிறது.  ஆர்ப்பாட்டமில்லாத நடையில் வெகு சுலபமாகக் கதைகளை எழுதிச் செல்கிறார்.  முப்பது இறுதியில் அவர் தமிழில் கதைகள் எழுதி வருவதாகத் தெரிவதாக கால சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட 1940களிலிருந்து சங்கரராம் கதைகள் வெளிவருவதாகக் கொள்ளலாம்.  எல்லாக்  கதைகளும் இப்போது வாசிக்கும்போது எப்படி தோன்றுகிறது?  காணிக்கை என்ற தொகுப்பில் உள்ள கதைகளை எந்த ஆண்டில் எழுதி உள்ளார் என்ற குறிப்பும் எதுவும் என் புத்தகத்தில் இல்லை.

1978ஆம் ஆண்டு பழனியப்பா பிரதர்ஸ் இந்தப் புத்தகத்தை அச்சடித்துள்ளார்கள்.  இன்னும் கூட அங்கு இந்தப் புத்தகப் பிரதி விலைக்குக் கிடைக்கலாம்.  விலை ரூ.4 தான்.  வாசகர்களைப் பிடித்து இழுப்பதுபோல் ஒரு நடையில்  கதைகளை சங்கரராம்  ஆரம்பிக்கிறார்.  உதாரணமாக:

காணிக்கை என்ற கதையின் ஆரம்ப வரிகளைப் பார்ப்போம்

.’வாசுதேவனும் பத்மாவதியும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக விரும்பி மணந்துகொண்டவர்கள்.  ஊரே கண் போடும்படியான தம்பதிகளாக அவர்கள் அமைந்தனர்.’

இவ்வாறு ஆரம்பிக்கும் போது நமக்கு உடனே கதையைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது.  இந்தக் கதை மட்டுமல்ல பெரும்பாலான கதைகளில் துடிப்பான ஆரம்ப வரிகள்.  எது கடமை என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.

‘பகல் சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். கடுமையான வெயில்.  பெரிய குளத்திலிருந்து கோடைக்கானலுக்குச் செல்லும் காட்டுப்பாதையில் காளியம்மாள் வந்து கொண்டிருந்தாள்.’

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளும் நாலைந்து பக்கங்களுடன் முடிந்து விடுகின்றன.   ஆபாசமாக எழுதப்படவில்லை.   கதைகளைப் படிக்கும்போது அந்தக் காலத்து மனசாட்சியைப் படம பிடித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

மனம் ஒரு புதிர் என்ற தொகுப்பிலுள்ள கடைசிக்கதையை எடுத்துக்கொள்வோம்.  விநாயத்திற்கு பதினைந்து வயதுதான்.  அவனை திருவண்ணாமலையில் வீடு கட்டியிருக்கும் அக்காவின் வீட்டு கிரஹப் பிரவேசத்திற்கு அனுப்புகிறாள் அவன் தாய்.  வண்டிச் செலவு போக தனியாக ரூ 100 பணம் கொடுத்து அனுப்புகிறாள்.  அவள் அக்காவிற்கும் கணவருக்கும் புத்தாடைகள் வாங்கிக்கொடுக்க.

பஸ் ஒரு இடத்தில் நிற்கிறது.  அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு வரும்போது நூறு ரூபாய் பணத்தை விட்டுவிடுகிறான் விநாயகம்.  அவ்வளவுதான் துடியாய் துடித்துப் போய்விடுகிறான்.  என்ன செய்வது என்று தெரியவில்லை. தற்கொலை பண்ணிக்கொள்ளலாமா என்றும் யோசிக்கிறான்.  அம்மா வீட்டிற்கும் அக்கா வீட்டிற்கும் போக முடியாத நிலை.  பஸ் பயணத்தை ரத்து செய்துவிடுகிறான்.

யார் அந்தப் பணத்தைத் திருடினார்களோ அந்தப் பணமே திரும்பவும் கிடைப்பதுபோல் நாடகம் ஆடுகிறார்கள்.  விநாயகத்திற்கு பணம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சி.  வருகிற இன்னொரு பஸ்ஸில் திருவண்ணாமலைக்குக் கிளம்புகிறான்.  பணத்தை எடுத்துக்கொண்டவன் மனம் மாறி திரும்பவும் விநாயகத்திற்கு பணம் கிடைக்கும்படி செய்கிறான் இதுதான் கதை.

‘ஆனால் இந்தக் கதையின் முடிவில் ஒரு வரி வருகிறது.  மனம் ஒன்றுதான். ஆனால் அதற்கு இரண்டு குணமா? இது ஒருபுதிர்தான்.’

திருட்டைப் பற்றி இரண்டு மூன்று கதைகள் இத் தொகுதியில் வருகின்றன. பணம் இல்லாதவனிடம்தான் பணம் பறிபோகிற மாதிரி கதைகளில் வருகின்றன.

தனிப்பிறவி என்ற கதையும் அப்படித்தான்.  திருடுப் போவதைப் பற்றி கதை.

‘ஆறுமுகத்துக்குச் சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும் சிறுவயதிலிருந்து அவன் கற்றுக்கொண்ட தொழில், தென்னைமரம் ஏறுவது ஒன்றுதான்.ý என்று ஆரம்பிக்கிறது கதை.  உடனே கதையை கடகடவென்று படிக்கத் தோன்றுகிறது.   ரேஷன் அரிசி வாங்கச் செல்லும்போது ஆறுமுகத்தின் மனைவி தனம் ஐந்து ரூபாய் பணத்தைத் தொலைத்துவிடுகிறாள்.  அன்றைய காலத்தில் ஐந்து ரூபாய் பணம் பெரிய தொகை.  அங்கு குப்பன் என்கிறவன் பரிதாபத்துடன் பணத்தைத் தொலைத்த தனத்தைப் பார்க்கிறான்.  அவள் அவன் அக்கா போல் தோன்றுகிறாள். அவளுக்கு உதவி செய்ய அவன் பணத்தையே ஒரு நாடகமாடிக் கொடுத்து விடுகிறான். இதுதான் கதை.  முன் கதைச் சுருக்கமாக இத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தையும் விவரிப்பது வேண்டாமென்று தோன்றுகிறது.

கடவுளுக்குக் காணிக்கை அளிப்பதால் தீராத நோய் தீர்ந்து விடும் என்பதுபோல் சங்கரராமிற்கு நம்பிக்கை இருக்கிறது.  அதன் அடிப்படையை வைத்து இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.   எது எப்படி இருந்தால் என்ன? கதையின் வடிவம் பிடித்துப் போய் விடுகிறது.  படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூன்டுகிறது.

இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்தவுடன்தான் அவருடைய காரியதரிசி என்ற நாவலையும் மண்ணாசை என்ற நாவலையும் வாசிக்க வேண்டுமென்று எடுத்து வைத்திருக்கிறேன்.  கூடிய சீக்கிரம் வாசித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன