துளி – 64 எங்கள் வீட்டுக் கொலுவில் காந்தி பொம்மை இல்லை..

அழகியசிங்கர்

நான் இந்த ஆண்டுதான் காந்தியைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கிறேன்.   சிந்திக்கச் சிந்திக்க எனக்கு பல விஷயங்கள் புரிகின்றன.   காந்தி யுகத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு காந்தி ஒரு உகந்த மனிதர். ஒப்பற்ற தலைவர்.  எனக்கோ? காந்தியை இந்த வருடம்தான் படிக்கிறேன்.  இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன். காந்தி என்னதான் எழுதியிருக்கிறார் என்று படித்தது கூட கிடையாது.  பள்ளிக்கூட வயதில் காந்தி சுயசரிதத்தை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.  

ஆனால் காந்தியை முழுவதும் படிக்கவில்லை.  எனக்கு அக்டோபர் 2ஆம் தேதியைப் பிடிக்கும்.  அன்று ஒருநாள் அலுவலக விடுமுறை விட்டுவிடுவார்கள்.  அலுவலகக் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் நாள்.  ஆனால் இப்போதோ பதவி மூப்பு அடைந்து விட்டேன்.  எல்லாம் நாளும் அக்டோபர் 2தான்.  ஒரு முறை பெ சு மணி,  லா சு ரங்கராஜன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்.  லா சு ரா  காந்தியைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டு வந்தேனே தவிர, படிக்கவில்லை.  உடனே ஒரு புத்தகத்தை படிக்க முடியவில்லை என்றால் படிக்கவே தோன்றாது.  படிக்கவும் முடியாது. அது என்னைப் பொறுத்தவரை உண்மை.  

ஆனால் காந்தியைப் படிக்கவில்லை என்றாலும் அவரைப் பத்தி எழுதப்படுகிற எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துவிடுவேன். கண்ணில் காந்தி பட்டால் போதும் வாங்கி வைத்துவிடுவேன்.  காந்தி தர்ஷன் என்ற பெரிய புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டேன்.

ஜே கிருஷ்ணமூர்த்தி காந்தியைப் பற்றி உயர்வாகச் சொல்லவில்லை.  ஆனால் நான் கிருஷ்ணமூர்த்தி ரசிகன்.  அவருடைய சத்தியாகிரகத்தை அவர் கிண்டல் செய்திருக்கிறார்.  ஓஷோ காந்தியைப் பற்றிச் சொல்லும்போது அவர் சிக்கனமாக வாழ்வதற்கு ஏராளமாகப் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது என்கிறார்.  இன்னும் பலரும் காந்தியைப் பற்றி ஏதேதோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். 

ஒரு சமயம் சென்னைக்கு காந்தி வந்தபோது அவர் ரமணரை சந்திக்க விரும்பினார்.  ஆனால் சிலர் தடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.  ரமணர் எந்த இடத்திற்கும் போகாமல் திருவண்ணாமலையிலேயே வசித்திருக்கிறார்.  ஆனால் காந்தி இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சுற்றி மக்களை நேரிடையாகப் பார்த்துப் பேசியிருக்கிறார்.  ரமண ஆசிரமத்தில் இருக்கும் ஒரு அன்பர் காந்தியைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்.  ரமணர் அவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார்.  காந்தியைப் பற்றி உயர்வாக ரமணர் குறிப்பிடுகிறார்.

அதேபோல் காந்தியை பாரதி பார்ப்பதில் ஏதோ சரியில்லாதது மாதிரி தோன்றுகிறது.  காந்தியை இன்னும் நெருங்கிப் பழக பாரதிக்கு அனுமதி மறுத்து விட்டார்களென்று நினைக்கிறேன். 

காந்தி இருக்கும் மேடையில் சின்ன அண்ணாமலை பேசும்போது தமிழில் ஹரிஜன் பத்திரிகையைக் கொண்டு வர விருப்பம் தெரிவிக்கிறார். உடனே காந்தியிடமிருந்து அனுமதி கிடைத்துவிடுகிறது. 

காந்தியைப் பற்றி ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.  இவை எல்லாவற்றையும் ஒருவர் படித்துப் பார்க்கவேண்டும்.  அப்படிப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை.  

இன்று காந்தி ஜெயந்தி.  என்னிடம் உள்ள பத்திரிகைகளில் காந்தியைப் பற்றி எந்தப் பத்திரிகையிலும் இல்லை.  ஏன் என்று தெரியவில்லை.  ஆனால் கணையாழி அக்டோபர் மாத இதழில் காந்தி படத்தை அட்டையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.  உள்ளே விவேக் கன நாதன் கட்டுரை உள்ளது.  அதேபோல் எல்லா தினசரிகளிலும் காந்தியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார்கள்.  வேற யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.  துக்ளக் இதழில் காந்தியைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. சோ ராமசாமி ஆசிரியர் பொறுப்பிலிருந்தால் எதாவது எழுதியிருப்பார்.  இந்த முறை சந்தியா பதிப்பகம் காந்தியைப் பற்றி ஐந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை வரவேற்க வேண்டும்.  

1. அ பிச்சையின் üகாந்திய சுவடுகள்,ý 2. காந்தியின் இந்திய சுவராஜ்ஜியம்- தமிழில் ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் 3. கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு – ஆங்கிலத்தில் சுசிலா நய்யார் – தமிழில் பாவண்ணன் 4. மகாத்மா காந்தியும் பகத் சிங்கும் – எஸ் என் தத்தா – தமிழில் அக்களூர் ரவி 5. காந்தி படுகொலை – பத்திரிகைப் பதிவுகள் – தொகுப்பு: கடற்கரை மத்தவிலாச அங்கதம். 

நான் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்தேன்.  அதில் காந்தி பொம்மை, பாரதி பொம்மை இல்லை. 

இதோ நான் உடனே அந்தப் பொம்மைகளை வாங்கி கொலுவில் சேர்க்க வேண்டும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன