அழகியசிங்கர்
கடந்த இரண்டு நாட்களாக நான் எந்தப் புத்தகத்தையும் படிக்க வில்லை. தினமும் புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப்பற்றிக் குறிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்த எனக்கு, புத்தகமே படிக்க முடியவில்லை. சனிக்கிழமை முழுவதும் என் பரபரப்பு அடங்கவில்லை. புத்தகத்தைத் தொட முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முழுவதும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. அன்று மாலை விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 50வது கூட்டம்.
அடுத்த நான் ஞாயிற்றுக்கிழமை. அன்றும் என்னால் புத்தகம் படிக்க முடியவில்லை. வீட்டில் விருந்தினர்கள் வருகை. அன்றும் என்னால் படிக்க முடியவில்லை. தெளிவான மனநிலையில்தான் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியும் என்று தோன்றியது.
ஒருவழியாக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதும் படித்து முடித்தேன். இதோ நான்கு மணி வரை அந்தப் புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத முடியவில்லை.
கூடவே நான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகங்களையும் படித்துக்கொண்டு வருகிறேன். எல்லாம் நத்தை வேகத்தில்.
இப்போது நான் எடுத்துக்கொண்டு பேசப்போகிற புத்தகம் üகடலும் கிழவனும்ý என்ற எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய புத்தகம். இந்தப் புத்தகத்திற்காக ஹெமிங்வேவிற்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ச சு சு யோகியார்.
தன்னுடைய சின்னஞ்சிறு படகில் தன்னந்தியாகஅவ்வளை குடாவில் மீன் பிடிப்பவன் ஒரு கிழவன். எண்பத்து நான்கு நாட்களாக அவனுக்கு ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை. முதல் 40 நாட்களாக அவன் கூட ஒரு பையன் இருந்தான். கிழவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி அந்தப் பையனை வேற ஒரு படகிற்கு அனுப்பி விட்டனர் அவன் பெற்றோர்கள்.
ஒவ்வொரு நாளும் கிழவன் மீன் கிடைக்காமல் சோர்வோடு வருவான். அதைப் பார்த்த பையன் அவனுக்கு உதவியாய் மீன் குத்தி ஈட்டியையும், கயிற்றுப் புரிகளையும், பாய் மரப் படுதாவையும் சுமந்து வருவான். ஒட்டுத் தையல்கள் போட்ட மரக்கோணிச் சாக்குகளைப் பார்க்கும்போது பாரிதாபமகத் தோற்றம் தரும் என்று வர்ணிக்கிறார் ஆசிரியர்.
பையனுக்குக் கிழவனிடம் அலாதியானதொரு பிரியம். ஏன் எனில் அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்ததே அந்தக் கிழவன்தான்.
உண்மையில் பெரிய மீன்களைப் பிடிக்கச் சக்தி இருக்கிறதா? என்று கிழவனைப் பார்த்து பையன் கேள்வி கேட்கிறான்.
அப்படித்தான் நினைக்கிறேன். மீன் பிடிப்பதில் எத்தனையோ தந்திரங்கள் உண்டு என்கிறான் கிழவன்.
கிழவனுக்கும் பையனுக்கு நடக்கும் உரையாடலைப் படிக்கும்போது கிழவனுடன் தன்னை விடப் பலமடங்கு வயதில் பெரியவனுடன் பேசுகிறோம் என்று பேசுவதில்லை. நீ நான் என்பதைப்போல் பேசுகிறான்.
ச து சு யோகியார் மொழிபெயர்க்கும்போது எனக்குப் பெரிய குறையாகத்தான் படுகிறது.
இந்த நாவலைப் படிக்கும்போது நானே கடலுக்குப் போனதுபோல் ஒர் உணர்வு ஏற்பட்டது.
85வது நாள் மீன் பிடிக்கப் போகிறான் கிழவன். அது ஒரு அதிர்ஷ்டமான நாள் என்கிறான். ஒரு லாட்டிரி சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்கிறான் கிழவன் பையனிடம். ஆனால் அது வாங்க இரண்டரை டாலர்கள் பணம் வேண்டும். ஆனால் இல்லை.
இந்தக் கதை ஒன்று கிழவன் தனக்குதானே பேசுகிறான். இன்னொன்று அவன் சிறுவனுடன் பேசுகிறான். உரையாடல் மூலமாகவே கதை வெகுவாக நகர்கிறது. ஒரு இடத்தில் கிழவன் இப்படிக் கூறுகிறான்.
“வயதே என் அலாரம் கடிகாரம். கிழவர்கள் ஏன் சீக்கிரம் எழுந்திருக்கிறார்கள் தெரியுமா? உள்ள கொஞ்ச நாட்களாவது நீண்ட நாட்களாக இருக்கட்டுமே என்றுதான்,” என்கிறான் கிழவன்.
கிழவன் பையனோடு பேசும்போது பேஸ் பால் விளையாட்டைப் பற்றி அடிக்கடி பையனிடம் பேசுகிறான். பையனுக்கு அந்த விளையாட்டின் மீது தீவிர காதல்.
பலவகைப்பட்ட மீன்களைப் பற்றிய குறிப்புகள் இப் புத்தகத்தில் வெளிப்படுத்தப் படுகின்றன. கிழவனுக்கு கடல் எப்போதுமே ஒரு கன்னிகைதான். காதலிப்பவர்களுக்கு அது பெரிய வரங்களைத் தரும், அல்லது மறுக்கும்.
கிழவன் தன்னந்தனியாக கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனக்குதானே பேசிக்கொண்டு செல்கிறான். சிலசமயம், கடற் பன்றி பெரிய கடற்பன்றி என்று கத்தவும் செய்கிறான்.
கிழவன் எதிர்பாராதவிதமாய் ஒரு பெரிய மின் மாட்டிக்கொண்டு விடுகிறது. அதை அசையாமல் கவனிக்கிறான் கிழவன். அது தப்ப வேண்டுமென்றால் படகையே கவிழ்த்துவிடும் என்று நினைக்கிறான் கிழவன். இந்தத் தருணத்தில் பையன் தன் அருகில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது.
அந்த மீன் ஒரு முறை சுண்டி இழுத்த இழுப்பில் கிழவன் குப்புற விழுந்துவிட்ôன். கண்ணுக்கடியில் ஒரு கீற்றுக் காயம். கன்னத்தில் ரத்தம் வழிந்தது. அது எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சரி, முடிவில்லாமல் இப்படகை இழுத்துக்கொண்டு போக முடியாது என்று நினைக்கிறான்.
வடக்கிலிருந்து ஒரு சிறிய பாடும் பறவை படகை நோக்கிப் பறந்து வந்தது. அது படகின் முன்புற விளிம்பில் உட்கார்ந்தது. அப்புறம் கிழவன் தலைக்கு மேல் சுற்றிச்சுற்றி வந்தது. பின் தூண்டிற் கயிற்றின் மேல தங்கியது.
கிழவன் அதைப் பார்த்து கேட்கிறான் : “உன் வயதென்ன? நீ முதல் முதலாகக் கடலின் மேல் பறப்பதா?”
கிழவன் எத்தனையோ பெரிய மீன்களைப் பார்த்திருக்கிறான். ஆயிரம் பவுண்டு எடையுள்ள மீன்களையும் கண்டிருக்கிறான். இரண்டைப் பிடித்துமிருக்கிறான். ஆனால் தனியாயல்ல. இப்போது தனியாக மாட்டிக்கொண்டு விட்டேன். அதுவும் கடல் நடுவில் கண்டும் கேட்டிமிராத மகாப் பெரிய மீனோடு தன்னந்தனியாகப் போராடுகிறான்.
கருணை நிறைந்த கன்னியம்மனை வணங்குகிறான். புனிதக் கன்னியே இந்த மீன் சாக வரம் கொடு – அதிசயமான மீனானாலும் இது சாககத்தான் வேண்டும் என்று வணங்குகிறான்.
“நானோ ஓய்ந்துபோன ஒரு கிழவன். இருந்தாலும், என் சகோதரனான இந்தப் பெரிய மீனைக் கொன்றுவிட்டேன். இனி சதி வேலையைச் செய்தாக வேண்டும்,” என்று கிழவன் சத்தமாகச் சொல்கிறான்.
இன்னொரு இடத்தில், கிழவன் கூறுகிறான் : இப்போதோ நானும் மீனும் சரிநிகர் சமானமாகப் பக்கம் பக்கமாய் நீந்திச் செல்கிறோம். வேண்டுமானால் அதுவே என்னைக் கரைக்கு அழைத்துச் செல்லட்டும். பாவம். அது எனக்கு யாதொரு கெடுதியும் செய்யவில்லை. எனக்கும் அதற்கும் வித்தியாசமென்ன – நான் அதைவிடத் தந்திரசாலி – அவ்வளவுதானே?
பெரிய மீனின் புண்ணிலிருந்து ரத்தம் வழிகிறது. அதை மோப்பம் பிடித்து சுறாக்கள் தாக்க வருகின்றன. அதையும் எதிர்கொள்கிறான் கிழவன்.
இன்னொரு இடத்தில் கிழவன் இப்படி கூறுகிறான்: üஅந்த மீனைக் கொன்றது பாவமாயிருக்கலாம். என் உணவுக்கும், பிறபலர் உணவுக்குமாகத்தான் அதைக் கொன்றேன் என்றாலும் அவ்வாறு கொன்றதென்னமோ பாவந்தான்.ý
தன்னிலை விளக்கமாக இவ்வாறும் கூறுகிறான் : நீ ஒரு வலைஞன். உன் தற்பெருமைக்காகவே அதைக் கொன்றாய். உயிரோடிருந்தது போதும், இறந்தபிறகும் கூட நீ அம்மீனை அன்புடன் பாராட்டினாய். அன்பு கொண்ட ஒன்றைக் கொல்வது பாவமல்ல, அல்லது லாபந்தானா? என்று.
அவன் கரைக்கு வரும்போது, அவன் எடுத்துக்கொண்டு வந்த பெரிய மீன் பாதியாகத்தான் இருக்கிறது. மற்ற சுரா மீன்கள் அதைக் கொத்தி தின்று விடுகிறது. திரும்பத் திரும்ப கொத்துகிறது.
இறுதியில் படகின் முன்புறம் தூக்கிய வாலோடு அம்மீன் கூடு வீதி விளக்கின் வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. அதன் வெளுத்த நீண்ட முதுகெலும்பையும். சரியா குத்தீட்டிக் கொண்டைத் தலையையும் இடையிலுள்ள வெறுமையும் கண்டான். என்கிறார்.
கிழவன் நீண்ட நேரம் தூங்கி எழுந்தபின், üஅவை என்னை முறியடித்துவிட்டன என்கிறான்.
கிழவன் திரும்பவும் அவன் குடிசையில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். பக்கத்தில் பையன் அவனைக் கண்காணித்தவாறே உட்கார்ந்திருந்தான். கிழவனது தூக்கம் சிங்ககங்களைப் பற்றி கனவுகளால் நிரம்பி இருந்தது என்று கதையை முடிக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே.
பெரிய மீனைப் பிடித்த கிழவனுக்கு இது வெற்றியா தோல்வியா என்று தெரியவில்லை. ஏன்என்றால் அந்தப் பெரிய மீனû மற்ற மீன்கள் தங்கள் உணவாக சாப்பிட்டு விடுகின்றன. வெறும் எலும்புக்கூடுதான் மிச்சமிருக்கிறது.