அழகியசிங்கர்
சமீபத்தில் தடம் என்ற இதழ் இனி வரப்போவதில்லை என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகையைப் பார்த்தபோது சான்úஸ இல்லை என்று தோன்றியது. 130 பக்கங்கள் கொண்ட பத்திரிகை. ஆர்ட் தாளில் அட்டகாசமான படங்களுடன் தயாரிக்கப்பட்டிருந்தது. விளம்பரம் எதுவுமில்லை. விருட்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மலர் என்ற சாதாரண தாளில்தான் தயாரிக்கப்படுகிறது. அதற்கே விருட்சம் ஒரு இதழ் விலையைவிட அதிகமாகத் தர வேண்டி உள்ளது.
தடம் பத்திரிகை விலை ரூ.50 என்பது மிக மிகக் குறைவு. குறைந்தபட்சம் ரூ.300வது ஆகும் அந்தப் பத்திரிகையைத் தயாரிக்க. எத்தனைப் பேர்களின் உழைப்பு அந்தப் பத்திரிகை தயாரிக்க வேண்டி உள்ளது என்று நினைக்கும்போது, அது நின்று போவது தவிர்க்க முடியாதது. மேலும் கட்டுரை கதை எழுதுபவர்களுக்குச் சன்மானம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதுகிறார்கள். ஒரு சிலருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அதன் மீது வைக்கலாம். எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு சில எழுத்தாளர்கள்தான் தொடர்ந்து எழுதுவார்கள். சிலபேர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் ஒரு பத்திரிகையை நிந்திப்பது சரியில்லை என்று எனக்குப் படுகிறது.
ஒருமுறை காலச்சுவடு இலக்கிய மலர் சுந்தர ராமசாமியால் கொண்டு வரப்பட்டபோது, ஐராவதம், நாகர்கோவில் நவாப் என்று சுந்தரராமசாமியைக் கிண்டல் செய்தார். ஆனால் உண்மையில் ஐராவதம் அந்த மலரில் எழுதியிருந்தால் அதுமாதிரி சொல்லியிருக்க மாட்டார்.
சில எழுத்தாளர்களுக்கு ஒரு ராசி இருக்கும் எந்தப் புதுப் பத்திரிகைûயாக இருந்தாலும் அவர்கள் பெயர் வந்துவிடும். சில எழுத்தாளர்களுக்கு என்ன முயற்சி செய்தாலும் ஒரு பிட் எழுத்துகூட பிரசுரமாகாது. இது உலக நியதி. ஏன் இப்படி நடக்கிறது என்று யாராலும் கேள்வி கேட்கமுடியாது.
3ஆண்டுகளில் வெளிவந்த தடம் பத்திரிகையில் பல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலில்லை. சிலருக்கோ கிடைக்கவே இல்லை.
**********
இந்த முறை நவீன விருட்சத்தை விலை கொடுத்து வாங்குபவர்களுக்குத்தான் கொடுப்பது என்று முடிவு செய்தேன். விலை ரூ.20 தான். மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சரவணபவன் ஹோட்டலில் ஒரு காப்பி விலை ரூ.30. ஏன் மங்களாம்பிகா என்ற ஹோட்டலில் ஒரு காப்பி விலை ரூ.27. ஒரு நவீன விருட்சம் இதழை விட ரூ10 அல்லது ரூ.7 அதிகம். இலவசமாகத் தரக்கூடாது என்ற என் எண்ணம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தப் பத்திரிகையை வாங்குவார் என்று நம்பிய ஒரு இலக்கிய நண்பர் வாங்கவே இல்லை. சிறிது நகைக்கவும் செய்தார். நேற்று ஒருவர் வீட்டிற்குச் சென்று சில புத்தகங்களைக் கொடுத்தேன். (விற்பனைக்குத்தான்). நவீன விருட்சத்தை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டேன். அவர் மறுத்து விட்டார். இப்போது படிக்க முடியாது என்று சொல்லி விட்டார். என்னடா இது இருபது ரூபாய்தானே என்று தோன்றியது. அடுத்த இதழ் எப்போது வருமென்று தெரியாது. நித்திய கண்டம் பூர்ண ஆயுசுதான் இதுமாதிரி பத்திரிகைகள் எல்லாம். இதைப் படிக்க முடியாது என்கிறாரே? ஆனால் முகம் தெரியாதவர்கள் அறிமுகம் ஆகாதவர்கள் பத்திரிகையை வாங்குகிறார்கள். இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, இவர் என்னுடைய நண்பர், என் பத்திரிகையை வாங்க விரும்பவில்லை என்றுதான் பார்ப்பேன். வேற வழி இல்லை.
சனிக்கிழமை நடந்த ஒரு இலக்கிய அரங்கில் வாசிப்பை முன்நிறுத்தி நடந்தது. அங்கு சிறுபத்திரிகை நடத்தும் நண்பரொருவர் இலவசமாக அவருடைய இதழை (ஜøன் 2019ல் வெளிவந்த இதழ்) கொடுத்துக்கொண்டிருந்தார். என்னடா இது என்று தோன்றியது. நான் மேடையில் என்னுடைய சிறுபத்திரிகையை இலவசமாகக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது அபஸ்வரமாகப் பட்டது. யாரும் ரசித்திருக்க மாட்டார்கள்.
நான் ஒரு பழைய கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஆத்மாநாம் இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கையில் அப்போது அச்சாகியிருந்த ழ என்ற இதழ். எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து பத்திரிகை வாங்கியவர்கள் யாரும் பைசா எதுவும் கொடுக்கவில்லை. என்னமோ தெரியவில்லை அப்போது அவரைப் பார்க்கும்போது எனக்குப் பாவமாகத் தோன்றியது. நானும் இப்படி விருட்சத்தை இலவசமாகக் கொடுத்தபோது சிலருக்குப் பாவமாகத்தான் தோன்றியிருப்பேன்.