அழகியசிங்கர்
நான் ஒரு புத்தக விரும்பி. எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி விடுவேன். பெரும்பாலும் பிளாட்பாரத்தில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கிக் குவித்துவிடுவேன். அதே சமயத்தில் பதிப்பகத்திற்கும் சென்று புது புத்தகங்களை வாங்குவேன்.
இப்படி நான் புத்தகங்களை வாங்கி சேர்ப்பதில்தான் எனக்கு ஆபத்தாக இருக்கிறது. சிலர் என்னிடம் புத்தகம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனக்குப் பெரிய மனது கிடையாது. அவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க.
நான் எத்தனையோ சிரமப்பட்டு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலிருந்து அசோக் நகர் பேப்பர் கடை வரைக்கும். பங்களூர் சென்றால் ப்ளாசம்ஸ் போய்ப் புத்தகங்கள் வாங்கி வருகிறேன். என் மனைவி என்னுடன் வரும்போது புத்தகம் எதுவும் வாங்கக் கூடாது என்று கட்டளை இடுவாள். புத்தகக் காட்சி வந்தால் இன்னும் குதூகலமாகி விடுவேன். தேடித்தேடிப் போய் புத்தகங்கள் வாங்குவேன்.
நான் புத்தகமும் அச்சிடுகிறேன். என் புத்தகங்களையும் விற்கிறேன். நான் விற்பதை விட வாங்கி சேகரிக்கும் புத்தகங்கள் அதிகம். நான் புத்தகம் வாங்குவதைக் கண்டு ஒரு குற்ற உணர்ச்சி. ஒரு நண்பரிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். üநீங்கள் புத்தகம்தான் வாங்கி சேகரிக்கிறீங்க..பணம் சேர்க்கவில்லையே?ý என்று என் புத்தகம் சேகரிப்பதற்கு ஆதரவு அளித்தார்.
நான் புத்தகம் வாங்குவதோடல்லாமல் படிக்கவும் செய்கிறேன். மிக மிகக் குறைவான பக்கங்கள் மட்டும். நான் படிக்கிற புத்தகங்கள் சில நாட்களில் மறந்தும் விடுகிறது. இப்படி எத்தனையோ புத்தகங்கள் படித்தும் மறந்து விடுகிறது. அதனால்தான் அதைப் பற்றி எதாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன் எழுதவும் செய்கிறேன்.
நான் இங்குச் சொல்ல வருகிற விஷயம் வேறு. என்னிடம் புத்தகம் கேட்டு வருபவர்களிடம்தான் எனக்குக் கவலை. ஏன் இரவல் கேட்கிறார்கள்? அவர்களும் புத்தகம் வாங்கலாமே என்று எனக்குப் படுகிறது.
நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தி ஜானகிராமனின் மரப்பசு என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து முடித்துவிட்டேன். உண்மையில் திருவல்லிக்கேணியில் உள்ள மீனாட்சி புத்தக நிலையத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். நான் வாங்கிய ஆண்டு 1978 ஆம் ஆண்டாக இருக்குமென்று நினைக்கிறேன். எப்போது படித்து முடித்தேன் என்பது தெரியாது. ஆனால் இதைப் பற்றி வங்கியில் பணிபுரிகிற இலக்கிய நண்பரிடம் பகிர்ந்து கொண்டேன். வந்தது வினை. அவர் தானும் படிக்கப் புத்தகத்தைக் கேட்டார். வந்தது வினை. உடனே நான் அவரும் படிக்கட்டும் என்று கொடுத்து விட்டேன்.
நான் இப்படி ஒரு புத்தகத்தை ஒருவருக்குக் கொடுத்துவிட்டால், என் மனம் பரபரக்கும். எப்போது அவரிடம் கேட்பது என் புத்தகத்தை என்று யோஜனை போய்க் கொண்டிருக்கும்.
வாங்கியவரும் எப்போது படித்துவிட்டுக் கொடுப்பார் என்று சொல்ல மாட்டார். நானும் அவரிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி கேட்பதற்கு சங்கோஜப்படுவேன். ஒருவழியாகத் தயங்கித் தயங்கி அவரிடம் என் புத்தகத்தைக் கேட்டேன். அவரும் அந்தப் புத்தகத்தை இன்னொருவரிடம் படிப்பதற்குக் கொடுத்துவிட்டார்.
நான் பலமுறை கேட்டு அலுத்து விட்டேன். ஒரு வழியாக மறந்தும் விட்டேன். இதுமாதிரி இன்னும் பலரிடம் நான் கொடுத்தப் புத்தகங்கள் திரும்பியே வந்ததில்லை. படிக்கிறேன் என்று வாங்கிக் கொள்பவர்கள் தங்களுடைய புத்தகமாக அதை மாற்றிக்கொண்டு விடுகிறார்கள். கேட்டால் துச்சமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கேட்டதே தப்பான விஷயமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.
அந்த நண்பரிடம் கொடுத்தப்புத்தகம் ஒரு வழியாக என்னிடம் வந்து சேர்ந்தது. திரும்பி வருவதற்கு ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது.புத்தகம் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில் புத்தகத்தைப் பார்த்தேன். நான் கொடுத்த புது புத்தகம் அட்டை நாசமாகி இருந்தது. உள்ளே பக்கங்கள் எல்லாம் தாறுமாறாக இருந்தன. இரவல் வாங்கிப் படித்தவர்கள் புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்து எனக்குத் தண்டனையே கொடுத்து விட்டார்கள்.
நான் புத்தகங்களை இரவல் வாங்குவதையே விரும்ப மாட்டேன். கிடைக்காத புத்தகம் என்றால் ஜெராக்ஸ் எடுத்துக்கொள்வேன். நான் ரொம்பவும் பயப்படுவது என்னிடம் புத்தகம் இரவல் வாங்குபவரிடம்தான். இரவல் வாங்குபவர்கள் எல்லோரும் சேர்ந்து புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினால் புத்தகம் பதிப்பித்தவர்கள் மகிழ்வார்கள்.
ஏன் இதை எழுதுகிறேன் என்றால் என் லைப்பரரியிலிருந்து மரப்பசு புத்தகத்தைத் திரும்பவும் பார்த்தபோது இந்த எண்ணம் ஏற்பட்டதால்தான். இந்தப் புத்தகம் வாங்கி 41 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் புத்தகமாவது மீண்டு வந்தது. இன்னும் எத்தனையோ புத்தகங்கள் மீண்டே வரவில்லை.