நவீன விருட்சம் 110வது இதழ் வந்து விட்டது…


எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நவீன விருட்சம் 110வது இதழ் வந்தே விட்டது!  

109வது இதழ் முழுவதும் தீர்ந்து விட்டதால் இந்த இதழ் பிரதி எண்ணிக்கையைக் கொஞ்சம் கூட்டிவிட்டேன்.  (எத்தனைப் பிரதிகள் அச்சடித்தேன் என்பதை மட்டும் கேட்காதீர்கள்).  எனக்குள் ஒரு விசித்திரமான உணர்வு உண்டாகிறது.  இதழை ஆரம்பிக்கும்போது அது முடியவே முடியாது என்பதுபோல் தோன்றுகிறது.  முடித்தபிறகு இதை எளிதாக முடித்துவிடலாம் போலிருக்கிறது என்றும் படுகிறது.

அதேபோல் எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதுதான் பெரிய கவலையை உண்டாக்கக் கூடியது.  பலரையும் சந்தா அனுப்பும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருந்தேன்.  உற்சாகமான வரவேற்பு . என்னால் நம்ப முடியவில்லை.  பலர் சந்தாத் தொகையை விட பல மடங்கு அதிகமாக அனுப்பியிருந்தார்கள்.  

34 வயதில் இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  இப்போது வயது 65 ஆகிவிட்டது.  ஆனால் உற்சாகம் மட்டும் குறையவே இல்லை. சி சு செல்லப்பா கொண்டு வந்த எழுத்து 120 இதழ்களுக்கு மேல் போகவில்லை என்று நினைக்கிறேன்.  நான் அந்த எண்ணிக்கையைத் தாண்டி விட வேண்டுமென்று நினைக்கிறேன்.   இன்னும் 3 ஆண்டுகளாவது ஆகிவிடும்.    ஆனால் எழுத்து வேறு விருட்சம் வேறு.  

நீங்கள் விருட்சம் இதழை சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷனில் படிக்க ஆரம்பித்தால் தாம்பரம் போவதற்குள் முடித்துவிடலாம்.  அவ்வளவு சுலபமான இதழ். இந்த இதழில் 4 சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறேன்.  ஒரு மொழி பெயர்ப்பு கதையும்  மொழி பெயர்ப்பு கவிதையும் சேர்த்திருக்கிறேன்.  

மாயவரத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களைப் பற்றி சந்தியா நடராஜன் எழுதியிருக்கிறார்.  அதேபோல் நக்கீரன் எழுதிய கட்டுரையில் தமிழில் சொற்கள் காணாமல் போய்விடுமா என்ற பயம் ஏற்பட்டு விடும்போல் தோன்றுகிறது.  விமானப் பயணத்தைப்பற்றி கணேஷ் ராம் நகைச்சுவை உணர்வுடன் எழுதி உள்ளார்.

நான்கு கதைகளில் ‘அப்பா வேலை’ என்ற பா ராகவன் எழுதிய கதையில் கதையை எப்படி முடிக்கப் போகிறாரென்று படித்துக்கொண்டிருக்கும்போது கவலையாக இருந்தது.   நல்லகாலமாக நல்லவிதமாகக் கதையை முடித்துவிட்டார்.   

ஜெ பாஸ்கரன் கதையான ஓ வைப் படிக்கும்போது எனக்கு ஆத்மாநாமின் முத்தம் என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.   இப்போது அதிகமாக பத்திரிகைகளில் கதைகள் எழுதுபவர்களில் ஸிந்துஜா ஒருவர்.   சுலபமாகவும் படிப்பதற்கு எளிமையாகவும் ஒரு கதையைச் சொல்லும் திறன் அவருக்கு இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கிறது. 

தீர்ப்பு என்ற என் கதை வழக்கம்போல் விருட்சம் பத்திரிகைக்கான கதை.  நான் மொழி பெயர்த்த அந்நியர்கள் என்ற ஐ பி ஸிங்கரின் கதையில் வயதான கணவன் வேற ஊரில் போய் வசிக்க விரும்புகிறான்.  மனைவி வர மறுக்கிறாள்.  உடனே மனைவியை விவாகரத்து செய்து விடுகிறேன்.  இந்த வயதிலா என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  புதிய ஊருக்குப் போய் 16 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறான்.  அவன் மனைவியும் இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறாள்.  கணவன் மனைவியுமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்நியர்கள்தான என்கிறது கதை. நந்தாகுமாரன், வசந்த தீபன், பானுமதி தங்கள் திறமைகளைக் கவிதைகள் மூலம் காட்டி உள்ளார்கள். 

ஆக மொத்தம் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு திருப்திகரமான இதழை வாசித்தோம் என்று தோன்றும்.   இரு வேறு நிலைகள் என்ற தலைப்பில் பாவண்ணன், வண்ணதாசனின் மதுரம் புத்தகத்தை விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு கதையாக எடுத்து.  அட்டைப்படம் உமா பாலு என்பவர் வரைந்தது.  நான் என்னவோ நினைத்தேன்.  அது வேறு விதமாக வந்துவிட்டது.  இதோ இந்த இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம் தருகிறேன்.

1. அந்நியர்கள் – ஐ பி ஸிங்கர் – சிறுகதை                 

2. மீதிக் கவிதை – நந்தாகுமாரன்           

3. வசந்த தீபன் கவிதை-                         

4. தீர்ப்பு  –  சிறுகதை –  அழகியசிங்கர்                   

5. ந பானுமதி கவிதைகள்       

6. பிரயாணம் – கட்டுரை – கணேஷ்ராம்              

7. காவேரியோடு கரையும் சொற்கள் – கட்டுரை – நக்கீரன்  

8.முட்களைச்சிதைத்த மலர்-சிறுகதை-ஸிந்துஜா             

9. அன்றைய அரசியல் காட்சிகள் – கட்டுரை – நடராஜன்

10. இருவேறு நிலைகள் – பாவண்ணன் – பு விமர்சனம்      

11. üüஓýý – சிறுகதை – ஜெ பாஸ்கரன் 

12. அப்பா வேலை – சிறுகதை – பா ராகவன்     

14. புதிய  படையெடுப்பு – கவிதை – மொழிபெயர்ப்பு க்ருஷாங்கினி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன