01.08.2019
அழகியசிங்கர்
போன மாதம் விருட்சம் 110வது இதழ் கொண்டு வந்துவிடலாமென்று நினைத்தேன். பின் அவசரப்பட வேண்டாம் என்று தோன்றியது. சந்தாதாரர்களுக்கு கடிதம் தயார் பண்ணி அனுப்பி உள்ளேன். பலர் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். 109வது இதழ் விருட்சம் ஒருபிரதிதான் உள்ளது. ஆச்சரியம். மிகக் குறைவாக பிரதிகள் அச்சடித்ததால் இந்த நிலை. இதற்கு முன்னால் எண்ணிக்கையில் அதிகமான பிரதிகள் அச்சடித்து விடுவேன். அவை என்னைவிட்டு அகலாமல் இருக்கும்.
எப்போதும் பேப்பர் கடைகளில் அவற்றைப் போட மாட்டேன். அட்டைப் பெட்டியில் கட்டி கட்டி வைத்துவிடுவேன். அட்டைப் பெட்டியில் ஒரு மாஜிக் இருக்கிறது. அட்டைப் பெட்டியைத் திறந்து விருட்சம் இதழைப் பிரித்தால் போதும் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு கதை சொல்லும்.
சி சு செல்லப்பாவின் புதல்வரை சந்தித்தபோது, எழுத்து இதழ் பிரதிகள் கிடைக்குமா என்று கேட்டேன். üநானும் அப்பாவும் ரேர்ந்து எல்லாவற்றையும் பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,ý என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு பேப்பர் கடையாக ஏறி இறங்குகிறேன். எழுத்து பிரதி கண்ணில் தட்டுப்படுகிறதா என்று பார்க்க. ஒரு முறை குமரி மலர் ஒரு இதழ் கிடைத்தது திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடையில். தேடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எழுத்து கிடைக்கவில்லை.
அட்டைப்பெட்டியில் உள்ள விருட்சம் இதழ்கள் பத்திரமாக இருக்கின்றன. எல்லா இதழ்களும் இல்லை. அதிகமாக அச்சடித்த இதழ்கள் மாத்திரம் பத்திரமாக இருக்கின்றன. நீங்கள் திறந்து அதைத் தொட்டால் போதும். உங்களைப் பிடித்துக்கொண்டு விடும். எதாவது கதை சொல்ல ஆரம்பித்து விடும். கவிதையை முணுமுணுக்கும். ஆனால் பேப்பர் கடைக்கும் மட்டும் போகாது. சோர்வடைந்து மக்கிப் போனாலும் சரி. அதன் குரல் உற்சாகமாக ஒலிக்கும். நான் எப்பவாவது அட்டைப் பெட்டியைத் திறந்து ஒரு இதழைப் பிரித்துப் படித்தால் கதை சொல்ல ஆரம்பித்துவிடும். ஓ. இப்படியெல்லாம் விருட்சம் வந்திருக்கிறதா என்ற ஆச்சரியம் என்னுள் தென்படும்.
நவீன விருட்சம் சந்தா கட்டியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு கடிதம் அனுப்பினாலும், அந்த வேண்டுகோளை முகநூலிலும் தெரிவிக்க விரும்புகிறேன். இதோ.
அன்புடையீர்,
வணக்கம்.
நவீன விருட்சம் 109வது இதழ் கிடைத்திருக்கும். நவீன விருட்சம் 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரு சிறுபத்திரிகை.
தற்போது 110வது இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆண்டுச் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியன் வங்கிக் கணக்கில் ஆண்டுச் சந்தாவாக ரூ.80ஐ சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
NAVINA VIRUTCHAM ACCOUNT
INDIAN BANK,
ASHOKNAGAR BRANCH
ACCOUNT No. 462584636
IDIB Number. IDIB000A031
நவீன விருட்சம் மாதிரி ஒரு பத்திரிகைக்கு உதவி செய்ய நினைத்தால் இன்னும் சிலரை சந்தாதாரர்களாக மாற்ற முயற்சி செய்யலாம். பணம் கட்டியபிறகு இத்துடன் இணைத்துள்ள கார்டில் உங்கள் முகவரியைத் தெரிவிக்கவும்.
அன்புடன்
அழகியசிங்கர், சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 செல் எண் : 9444113205
3ஆம் தேதி மணல் வீடு அளிக்கும் அஃக் பரந்தாமன் சிற்றிதழ் பரிசு வாங்குவதற்கு இங்கிருந்து நாளை கிளம்புகிறேன் மனைவியுடன். டாக்டர் பாஸ்கரனும் விருட்சம் குறித்துப் பேச வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.