துளி – 61 அந்தக் கல்கண்டும் இந்தக் கல்கண்டும்…

அழகியசிங்கர்

தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பின் கீழ் 24.07.2019 வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்வாணனைப் பற்றி கூட்டம். வவேசுவும், லேனா தமிழ்வாணனும். 

நான் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது (அறுபதுகளில்) எனக்கு கல்கண்டு என்ற பத்திரிகை அறிமுகமாயிற்று.  அதன் ஆசிரியர் தமிழ்வாணன். கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்துகொண்டு பத்திரிகையில் போஸ் கொடுப்பவர்.  துணிவே துணை என்ற தாரக மந்திரத்தை பத்திரிகை மூலம் உச்சரித்துக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அவர் கிருஷ்ணா குளம் கிரவுண்டில்(சென்னை 1 ல் உள்ளது) பேச வருகிறார் என்று விளம்பரப்படுத்தினார்கள்.  நான் சிறுவன்.  எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன்.  தமிழ்வாணன் கூட்டத்திற்குப் போனேன்.  இப்போது அவர் என்ன பேசினார் என்று ஞாபகமில்லை, எப்படி இருந்தார் என்று ஞாபகமில்லை.  ஆனால் அவர் பேசி முடித்தவுடன், அவர் இறங்கி வரும்போது, என் கையில் உள்ள காகிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்கியது ஞாபகத்திலிருக்கிறது.  இப்போது அந்தத் தாள் இல்லை.  

என் மாமாதான் கல்கண்டு பத்திரிகையை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் குமுதம் வாங்காதே, அது ஆபாசமாக இருக்கும் என்று கூறினார்.  தமிழ்வாணன் பத்திரிகையான கல்கண்டை நான் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிப்பேன். 

எனக்கு துப்பறியும் கதைகள் மீது ஆர்வமிருந்தது.   உயிரே உயிலா என்ற தொடர்கதை அப்போது கல்கண்டு இதழில் வந்திருந்தது.  நான் ஆர்வமாக எடுத்துப் படிப்பேன்.  தமிழ்வாணன் எழுதியது.  

அன்றைய கூட்டத்தில் தமிழ்வாணன் 500 புத்தகங்கள் எழுதியிருக்கிறாரென்ற தகவல் கூறினார்.  அவர் கல்கண்டு பத்திரிகையில் அவர்தான் எல்லாம் எழுதுவார்.  கேள்வி பதில் பகுதி இருக்கும்.  சின்ன சின்ன தகவல்கள் இருக்கும்.  அரோக்கியமாக இருப்பது எப்படி? என்று கட்டுரை எழுதியிருப்பார்.  நூறு வயதுவரை வாழ்வது எப்படி? என்றெல்லாம் எழுதியிருப்பார். ஆனால் அவர் இதயநோயால் இறந்து விட்டார்.  51வயதிலேயே.  நான் அவரைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நானும் துப்பறியும் நாடகம் எழுதினேன்.  

அதை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடித்தோம்.  எல்லோரும் ஆண் பாத்திரங்கள்.  ஒரு பெண் பாத்திரம் கூட கிடையாது.  வில்லியே கிடையாது.  இப்போது நடக்கும் சீரியல்களில் வில்லிகள்தான் அதிகம்.  வில்லன் கிடையாது.  என் நாடகம் அரங்கேறியபோது நிறையா தமாஷ் நடந்தது.  நாடகம் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நாடகம் எழுதியதுகூட தமிழ்வாணனின் கல்கண்டு படித்ததால்தான்.  

நன்றாக கையெழுத்து வரவேண்டும் என்பதற்காக கோடுபோட்ட நோட்டில் ஒரு பக்கம் எழுதிவந்து பள்ளிக்கூடத்தில் காட்டவேண்டும்.  அப்போது எனக்குத் தோன்றிய துப்பறியும் கதையை (கற்பனையில்) எழுதிக்கொண்டு காட்டுவேன்.  தமிழ்ஆசிரியர் பார்க்காமல் ரைட் போடுவார்.  நான் மர்ம நாவல்கள் எழுதி ராஜேஸ்குமாருடன் போட்டி போட்டிருக்க வேண்டும்.  தவறிப்போய்விட்டது. 

அந்தத் தமிழ்வாணனையும் கல்கண்டையும் என்னால் மறக்க முடியாது.  ஆரம்பத்தில் படிக்கும் பழக்கத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன்தான்.  ஆனால் அதன் பின் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.  தொடர்கதைகள் பத்திரிகைகளில் படிக்கும் பழக்கமிருந்தது. பட்டம் பூச்சி என்று ஹென்ரி ஷாரியர் தொடர்கதையை விடாமல் குமுதத்தில் படிப்பேன். சாண்டில்யனைப் படிப்பேன்.  கல்கியில் பொன்னியின் செல்வன் படித்து சோர்ந்து விட்டேன்.  ஆனால் ஜெகசிற்பியன, ரெங்கநாயகி தொடர்கதைகளைப் படிப்பேன்.  அப்படி படிப்பதும் மாறி கணையாழி, தீபம் என்று போய்விட்டது.  

இந்தக் கால கட்டத்தில் கல்கண்டு படிப்பதில் ஆர்வம் குறைந்து போய்விட்டது.  அன்றைய கூட்டத்தில் எனக்குத் திரும்பவும் தமிழ்வாணன், கல்கண்டு என்று ஞாபகம் வந்தது.  ஒரு இதழாவது பழைய தமிழ்வாணன் கல்கண்டு இதழை சேகரித்து வைத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்.  சேகரிக்கும் பழக்கம் இப்போதுதான் வந்துள்ளது.  ஏகப்பட்ட புத்தகங்கள், சிறு பத்திரிகைகள் சேகரிக்கத் தொடங்கி உள்ளேன்.  சமீபத்தில் வந்துள்ள கல்கண்டு இதழை வாங்கிப் பார்த்தேன்.  கல்கண்டு முழுவதும் மாறி விட்டது.  தமிழ்வாணன் இல்லை.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன