அழகியசிங்கர்
நான் காந்தியை என்னுடைய கல்லூரி நாட்களிலேயே விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். அவருடைய சுயசரிதம்தான் படித்த புத்தகம். ஆனால் காந்தியைப் பற்றி எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொள்வேன். அதேபோல் பாரதியார். காணும் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துவிடுவேன். இப்படி வாங்கும் புத்தகங்களைத் தொட்டுப் படிக்க மாட்டேன். அப்படியொரு நல்ல பழக்கம் எனக்கு.
கடந்த 17ஆம் தேதி காந்தி நிலையத்திலிருந்து காந்தியைப் பற்றிப் பேச ஒரு அழைப்பு. 1 மணி நேரம் பேச வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.. என்னால் ஒரு மணி நேரம் பேச முடியுமா? காந்தி புத்தகத்தைப் படித்துவிட்டு. இது பெரிய சவால். நான் பெரும்பாலான புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் 5 நிமிடம் பேச எடுத்துக்கொள்ள முடியும். உண்மையில் 5 நிமிடம் போதும் ஒரு புத்தகம் பற்றிப் பேச.
அதனால் காந்தியைப் பற்றிப் பேச ஒப்புக்கொண்ட பிறகு, புத்தகத்தை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சொல்ல முடியாது என்று தோன்றியது. குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டு சிலர் பேசுவார். அதுமாதிரியும் எனக்குத் திறமை இல்லை. வேற வழியில்லை கட்டுரை தயாரித்துப் பேசி விடலாமென்று நினைத்தேன். ஆனால் கட்டுரை தயாரிக்கவும் நேரமில்லை. 5 அல்லது 6 பக்கங்கள் டைப் அடித்து விட்டேன். அது போதாது ஒரு மணி நேரம் பேச. வேற வழியில்லை புத்தகத்தைப் பார்த்துதான் படிக்க வேண்டும். பார்த்துப் படிக்கும்போது பார்வையாளர்களைப் பார்த்துப் பார்த்துப் படிக்க வேண்டும். அப்படிப் படித்தால்தான் சரியாக வரும். இல்லாவிட்டால் மெஷின் மாதிரி ஒப்பிக்கிற மாதிரி ஆகிவிடும். நான் பார்த்துப் பார்த்துப் பேசினேன். ஒரு மணி நேரத்திற்கு.
நான் எடுத்துக்கொண்ட புத்தகம் 21ஆம் நூற்றாண்டில் காந்தி என்ற புத்தகம். எழுதிய ஆசிரியர் காந்தியவாதி லா சு ரங்கராஜன். இவர் காந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கயத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் அதிகாரியாக பணிபுரிந்தார். அதைப் படித்தபோது காந்தி ரொம்பவும் பிடிவாதக்காரராக இருந்திருப்பார் என்று தோன்றியது. முதல் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளாமல் கல்கத்தா போய்விட்டார் காந்தி. அங்கேயும் கலந்துகொள்ள வில்லை.
அங்கேயும் அவர் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. உபவாசம் இருந்தார். ஏன்? அதேமாதிரி தேசிய கொடியில் ராட்டை சின்னம் வரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். மற்ற தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் தேசிய கொடிக்கு மரியாதை தர விரும்பவில்லை காந்தி.
அதேபோல் தேசிய சீதம். வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக ஒலிக்கப் படவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். தாகூரின் ஜனகனமன ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி வரை தேசியகீதத்திற்கும் மரியாதைத் தரவில்லை. இதெல்லாம் லா சு ரவின் புத்தகத்தில் படித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே எனக்குத் தோன்றியது காந்தியின் இன்னும் சில புத்தகங்களைப் படிக்கவேண்டுமென்று.