அழகியசிங்கர்
இந்த முறை சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் விருது நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளது. மணல் வீடு ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் இதைச் சொன்னபோது என்னால் நம்ப முடியாமலிருந்தது.
1988ஆம் ஆண்டு ஜøலைமாதம்தான் நவீன விருட்சம் முதல் இதழ் வெளிவந்தது. கிட்டத்தட்ட 31ஆண்டுகள். ஆரம்பத்தில் விருட்சமாகவும் அதன் பின் நவீன விருட்சமாகவும் மாறிவிட்டது. தற்போது 109வது இதழ் வெளிவந்துள்ளது.
நவீன விருட்சம் பத்திரிகையில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை. முன்பின் பார்த்திராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் இதழில் பிரசுரமாகி உள்ளன.
ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் நவீன விருட்சத்தில்தான் வந்துள்ளன. ஞானக்கூத்தன் மட்டுமல்ல. அசோகமித்திரன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஆனந்த், காளி-தாஸ், ரா ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆர் ராஜகோபாலன் என்று பலர் படைப்புகள் வெளிவந்துள்ளன.
இந்தப் பத்திரிகையின் மூலம் நான் பல படைப்பாள நண்பர்களை சம்பாதித்துக் கொண்டேன். ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன். படிக்கக் கற்றுக்கொண்டேன். படைப்புகளை சரியாகக் கணிக்கக் கற்றுக்கொண்டேன்.
என்னுடைய திட்டம். ஒரு இதழுக்கு ஒரு கவிதை அல்லது ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை சிறப்பாக வந்திருந்தால் போதும். பத்திரிகைக் கொண்டு வருகிற நோக்கம் முடிந்து விட்டது என்று நினைத்தேன்.
அதிகப் பக்கங்களுடன் இதழைக் கொண்டு வரக்கூடாது என்பது என் நோக்கம். உண்மையில் விலை குறைவாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தால் அதிகப் பக்கங்கள் போகாமல் பார்த்துக்கொண்டேன்.
1988ஆம் ஆண்டு வெளிவந்த விருட்சம் இதழ் 16 பக்கங்கள்தான். ஒன்றிலிருந்து 16 பக்கங்கள் வரை கவிதைகள். இரண்டாவது மூன்றாவது இதழிலிருந்து பக்கங்கள் கூடிக்கொண்டே போயிற்று. 108வது இதழ் 108 பக்கங்கள். 109வது இதழ் 100 பக்கங்கள்.
100 பக்கங்கள் ஆனாலும் விலை ரூ.20தான். மாதம் ஒரு முறை வரும் இலக்கிய வேல் என்ற பத்திரிகை தவிர்க்க இயலாத காரணங்களால் தற்காலிகமாக நின்று விட்டது என்ற அறிவிப்பை இந்த மாதம் வெளியிட்டுள்ளது. இப்படித்தான் நவீன விருட்சம் வரும் காலத்திலிருந்து பல சிறுபத்திரிகைகள் நின்று விட்டன. அந்த இடத்தை வேறுசில பத்திரிகைகள் தொடரத் தவரவில்லை.
ஒருமுறை விருட்சத்தை நிறுத்தி விடலாமென்று நினைத்தேன். அப்போது பிரமிள், ‘நிறுத்தாதீர்கள். அதுதான் உங்களுக்குப் பெயர் கொடுக்கும்,’ என்று சொன்னார். விருட்சம் ஆரம்பத்தில், ஞானக்கூத்தன், ‘உங்கள் கைக்கு தங்கக்காப்பு போடவேண்டும்,’ என்று ஒரு மாலை வேளையில் கடற்கரையில் கூடியிருந்தபோது குறிப்பிட்டார். உயிர்மை புக் ஸ்டாலில் சுஜாதா கையில் விருட்சம் பத்திரிகையைப் பார்ப்பதுபோல் ஒரு புகைப்படம் உண்டு. இது உயிரிமை பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. ஒரு கல்கி தொடர்கதையில் சுஜாதா விருட்சத்தைப் பற்றி கணேஷ், வசந்த் பேசிக்கொள்வதுபோல் ஒரு உரையாடல் வரும். சிறந்த சிறுபத்திரிகை என்று சுஜாதாவும் அசோகமித்திரனும் சொல்லியிருக்கிறார்கள். ம ந ராமசாமி என்ற எழுத்தாளர் விருட்சம் எழுத்து பத்திரிகையை ஞாபகப்படுத்துகிறது என்று கடிதம் எழுதி உள்ளார்.
அஃக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பரந்தாமன் பேரில் இந்த விருது விருட்சத்திற்கு அளிக்கப்படுகிறது. சிறுபத்திரிகையின் முன்னோடி அஃக் பத்திரிகை. கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அஃக் பத்திரிகை அந்தக் காலத்தில் சிறுபத்திரிகை உலகில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அந்த அஃக் பத்திரிகையின் பேரில் இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதை அளிக்கும்
மணல் வீடு தேர்வுக்குழுவினருக்கு நன்றி.
மணல் வீடு மாதிரி ஒரு இதழ் என்னால் கொண்டு வர முடியாது. ஏன் கற்பனை கூட செய்ய முடியாது? அன்றைய நிகழ்வில் கலந்து கொள்கிற எழுத்தாள நண்பர்களுக்கு என் நன்றி. அஃக் விருது வழங்குதல் தவிர மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.