அழகியசிங்கர்
இன்று தினமலரில் நான் எழுதிய புத்தகமான üபிரமிளும் விசிறி சாமியாரும்ý புத்தகத்திற்கான விமர்சனம் வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. நான் விசிறி சாமியாரைச் சந்தித்தது ஒரு தற்செயலான விஷயம். அதற்குமுன் சாமியார்களைச் சந்தித்தது இல்லை. உண்மையில் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. யாரையும் தேடி சந்திக்க வேண்டுமென்றும் தோன்றியதுமில்லை.
ஆனால் பிரமிள் ஒரு சாமியார் பைத்தியம். அவருடன் நட்பு ஏற்பட்டபோது எனக்கு சாமியார் பற்றிய கவனம் ஏற்பட்டது. எங்கள் அலுவலகம் ஒட்டி இருந்த பீச் ரயில்வே ஸ்டேஷனலில் ஒரு பெண் சாமியார் இருக்கிறார் என்று பிரமிள் சொன்னார். எனக்கு ஆச்சரியம். அந்தப் பெண் சாமியாரையும் அவர் ஒருநாள் சுட்டிக் காட்டினார்.
தினமும் அலுவலகம் போகும்போதும் வரும்போதும் அந்தச் சாமியாரைப் பார்ப்பேன். அவர் ஒரு பிச்சைக்காரியாக எனக்குத் தென்பட்டார். பர்மா பஜார் கடை வாசலைப் பெறுக்குவார்.
“அவர் பிச்சைக்காரி இல்லை. சாமியார் என்றார் பிரமிள்.”
உண்மையில் அந்தப் பெண்மணி கை நீட்டி யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாராவது பெறுக்குவதைப் பார்த்து காசு கொடுத்தால் வாங்கிக்கொள்வார். பின் சுரங்கப் பாதையில் அவர் இருப்பிடத்தை வைத்துக்கொண்டார். அவர் ஒரு வடநாட்டைச் சார்ந்தவர். பின் ஒருநாள் அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.
விசிறி சாமியாரைப் பார்க்க இப்படித்தான் ஒரு முறை பிரமிள் அழைத்துப் போனார். விசிறி சாமியாரை நெருக்கமாகப் பார்த்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அதன்பின் அதுமாதிரியான நெருக்கத்தில் விசிறி சாமியாரைப் பார்க்க முடியவில்லை. இன்னும் பிரமிள் எனக்கு அறிமுகப்படுத்தியது சாய்பாபா கோயில். அதேபோல் அடிக்கடி கீரின்வேஸில் உள்ள ஜே கிருஷ்ணமுர்த்தி இடத்தில் பிரமிளைச் சந்திப்பேன்.
இன்றைய தினமலரில் வெளிவந்த என் புத்தக விமர்சனத்தில் எல்லாம் சரியாக எழுதியிருந்தார். இதை விமர்சனம் செய்திருப்பவர் பின்னலூரான். ஆனால் புத்தகம் எங்கும் கிடைக்கும் என்ற விபரத்தில் தொலைபேசி எண் குறிப்பிடப்படவில்லை. முகவரியும் சரியாகக் கொடுக்கவில்லை.
இதை சரியாகக் கொடுத்திருந்தால் சில பிரதிகள் இந்தப் புத்தகம் விற்றிருக்கும். அதுதான் எனக்கு அதிர்ஷ்டமில்லை என்று குறிப்பிட்டேன்.