க நா சுதான் கூட்டம் நடத்தச் சொன்னார்

அழகியசிங்கர்

கநாசு வை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பார்த்தேன்.  கூட்டம் ஒய்எம்சியில் நடந்தது.  அரங்கநாதன் புத்தக விமர்சனக் கூட்டம்.  பாரிமுனையில் அந்தக் கட்டிடம் இருந்தது.  அங்கேதான் க நா சுவைப் பார்த்தேன்.  üüநீங்கள் ஏன் கூட்டம் நடத்தக் கூடாது,ýý என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம்.  அப்போது நான் கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கவே இல்லை.  அவர் சொன்னபிறகு பல மாதங்கள் ஓடி விட்டன.  நான் கூட்டம் போடுவதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன்.

பின் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  என் நண்பர் சீனிவாசன் அவர் தயாரித்த காயின் பவுடருக்கான  விளம்பரம் இந்து நாளிதழில் வெளி வர விரும்பினார்.  சின்ன விளம்பரம்.  ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விளம்பரம் கொடுத்துவிட்டு பின் அவருடைய தயாரிப்பைப் பற்றி விளம்பரம் தர வேண்டும்.  அந்தச் செலவை அவர் ஏற்றுக்கொண்டு விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முதல் கூட்டம் ஏற்பாடு செய்தார்.   தி நகரில் ஒரு பள்ளியில்.  முதல் கூட்டம் காசியபனை வைத்து நடத்தினேன்.  அந்த சமயத்தில் க நா சு உயிருடன் இல்லை.  

இப்படித்தான் நான் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன்.  1988லிருந்து.  சில கூட்டங்களுக்கு சீனிவாசன் உதவி செய்தார்.  பின் உதவி செய்வதை நிறுத்திவிட்டார்.   அப்போதெல்லாம் ரூ.100 போதும் கூட்டம் நடத்த.  ஒரு லேடீஸ் ஹாஸ்டல் மாடியில் திருவல்லிக்கேணியில் கூட்டம் நடந்தது.  வாடகை ரூ.50.  கார்டு செலவு ரூ.25.  டீ, காப்பி வரவழைப்பதற்கு ரூ.25.  பேச வருகிற இலக்கியவாதிகளுக்கு பணம் எதுவும் கிடையாது.  அவர்களும் எதிர்பார்க்க மாட்டார்கள். 

பல கூட்டங்கள்.  இரங்கல் கூட்டங்கள்.  புத்தக வெளியீட்டுக்

கூட்டங்கள்.   எந்த இலக்கியவாதியும் என் கூட்டத்தில் பேசுவதிலிருந்து தப்பித்ததில்லை.  ஒரு முறை என் கவிதைப் புத்தகமான  üயாருடனும் இல்லைý என்ற புத்தகத்திற்கு அறிமுகக் கூட்டம் வைத்தேன்.  தலைமை ஞானக்கூத்தன்.  என்  4 நண்பர்களை அழைத்தேன்.  பேசுவதாக சொன்னார்கள்.  ஆனால் நால்வரும் பேச வரவில்லை.  உண்மையில் அவர்கள் ஒப்புக்கொண்டதால்தான் அழைத்தேன்.  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு வரவில்லையா என்பது தெரியவில்லை.  ஞானக்கூத்தனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.   ஆனால் கூட்டத்திற்கு எப்போதும் வருகிறவர்கள் வந்தார்கள்.

அதுதான் முதல் தடவை ஒருவித சங்கடமான நிலைக்கு  நான் ஆளானது.    பொதுவாக கூட்டத்திற்கு கலந்துகொள்பவர்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வர மாட்டார்கள்.  ஆனால் பேசுபவர்களே வரவில்லை என்றால்? அதுவும் நாலு பேர்களும் வரவில்லை என்றால்? அதில் ஒருவரைத் தவிர  மூன்று பேர்களுக்காக எத்தனையோ கூட்டம் நடத்தியிருக்கிறேன். 

பொதுவாக கூட்டம் அதிகமாக வராது.  கொஞ்ச பேர்கள்தான் வருவார்கள்.  கலந்து கொள்ள வருபவர்களுக்காக நான் இரக்கப் படுவேன்.  அவர்கள் எங்கிருந்தோ வருவார்கள்.  ஒருமுறை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒருவர் விபத்தில் சிக்கிக்கொண்டு, பல மாதங்கள் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

இந்தக் கூட்டம் நடத்துவதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு.  ஒரு பயனும் இல்லை.  எழுத்தாளர்களைச் சந்திப்பது.  புத்தகங்களைப் பற்றி பேசுவதுதான்.   இந்தக் கூட்டம் நடத்துவதால் அலுக்கவே இல்லையா என்ற கேள்வி என்னைக் கேட்கலாம்.  அலுக்கவே இல்லை. சரி கூட்டத்திற்கு வருகிறவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும.  உண்மையில் நான் நடத்தும் கூட்டத்திற்கு 100 பேர்கள் வந்துவிட்டால் நான் தடுமாறிப் போய்விடுவேன்.  எப்படி நடத்துவது என்று தெரியாமல் போய்விடும்.  பத்து பேர்கள் வந்தால் போதும்.  கேட்பவரும் பேசுபவரும் இருந்தால் போதும்.  ஆனால் பேசுபவர்கள் அதிகமாக பேர்கள் வர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.  என்னைப் பொறுத்தவரை கேட்பதற்கு நான், பேசுவதற்கு ஒருவர் இருந்தால் போதும்.  பெண்கள் பொதுவாக் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். அவர்கள் கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போவதற்குள் அதிக தாமதம் ஆகும்.  என் அலுவலகத்தில் உள்ள பெண்கள் ஐந்து மணி ஆனவுடன் வீட்டிற்கு ஓடுவார்கள்.  அவ்வளவு வேகமாகப் போய்விடுவார்கள்.  இலகக்கியக் கூட்டம் என்றால எக்ஸ்டிரா முயற்சி வேண்டும்.  

நான் கூட்டம் நடத்தியது பெரும்பாலும் லேடீஸ் ஹாஸ்டல் மாடியில், தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணியில் அது இருக்கிறது. ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஒரு பெண்மணி மட்டும் வருவார்.  கூட்டத்திற்கு வருபவர்களின் வயது?  எனக்கு அப்போது வயது 35.  கூட்டத்திலும் பெரும்பாலும் 35லிரந்து இருப்பார்கள்.  இப்போது 65. அதனால் கூட்டத்திற்கு வருபவர்களும் 65 வயதிற்கு மேல் இருப்பார்கள். 

நான் மாற்றிக்கொண்டு பந்தநல்லூருக்குப் போனபோது கூட்டம் போட முடியவில்ûல்.  ரொம்ப நாள் விட்டுப் போய்விட்டது. திரும்பவும் சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தேன்.  திருவல்லிக்கேணி பிராஞ்சில் பணி.  

அசோகமித்திரனுக்கு 82வது வயது கொண்டாட்ட கூட்டம் நடத்த முடிவு செய்தேன்.  அப்போது கூட்டம் நடத்தியே அதிக ஆண்டுகள் ஆகிவிட்டன.  எனக்குப் பெரிய சந்தேகம்.  கூட்டத்திற்கு வருவார்களா என்று.  ஏனென்றால் கூட்டத்தை பாரதியார் இல்லத்தில் வைத்திருந்தேன்.    எனக்கு நடுக்கம்.  கூட்டத்திற்கு யாரும் வராமல் இருந்துவிட்டால் என்ன செய்வது?  அதனால் பேச வருபவர்களை அதிகப்படுத்தி விட வேண்டுமென்று தோன்றியது.  20 பேர்களுக்கு மேல் பேச அழைத்தேன்.  நிச்சயமாக கூட்டத்திற்கு 20 பேர்கள் வந்து விடுவார்கள் என்று எனக்குத் தோன்றியது.

உண்மையில் அன்று அதிகமான பேர்கள் வந்தார்கள்.  கூட்டம் சிறப்பாக நடந்தது.  அதை வீடியோ எடுத்தேன். இன்னும் கூட நான் நடத்திய கூட்டத்தில் அது ஒரு சிறப்பான கூட்டம். நான் இதுவரை 200  300 கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  சரி, ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சும்மாதான் நடத:துகிறேன்.  க.நா.சு கூட்டம் நடத்தச் சொன்னதால் நடத்துகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன