நீங்களும் படிக்கலாம் – 47  

ஆல்பெர் காம்யுவின் அந்நியன்..

அழகியசிங்கர் 

ரொம்ப நாட்கள் கழித்து இந்தப் புத்தகத்தைத் தூசித்தட்டிப் படிக்க ஆரம்பித்தேன். 1980 ஆண்டு க்ரியாவில் வாங்கியது.   எல்லாம் மறந்து விட்டது.  ஆனால் கொஞ்சமாக ஞாபகத்தில் அம்மா   முதியோர் இல்லத்தில் இறந்ததை ஒட்டி மெர்சோ என்பவன் ஊருக்குச் செல்வான் என்று படித்திருந்தேன்.

அந்த ஊரில் அம்மாவை சவ அடக்கம் செய்யும் வரை அம்மாவின் இறந்த தோற்றத்தைப் பார்க்க விரும்ப மாட்டான்.  ஏன்? இயல்பாக இருப்பான்.  அம்மா இறந்து விட்டாள் என்று அழ மாட்டான்.  

இப்படி மெர்சோ நாவல் முழுவதும் வருகிறான்.  அவன் காதலி மேரி அவனிடம் கேட்கிறாள்.  தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று. அதற்கு மெர்சோ, திருமணம் செய்துகொள்வது கொள்ளாதது எல்லாமே ஒன்றுதான் என்கிறான்.

வேலை மாற்றமாக பாரிஸில் செல்ல விருப்பமா என்று கேட்கிறார் மெர்சோவின் முதலாளி.   மெர்சோ இதற்குப் பதில் அளிக்கும்போது அவனைப் பொருத்தவரை இப்போது இருக்குமிடத்தில் இருப்பதாகக் கூறுகிறான்.  உண்மையில் இது குறித்து அவனுக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.என்று தெரியப்படுத்துகிறான்.  ஏன்என்றால் இப்போதைய வாழ்க்கையில் எதுவும் மகிழ்ச்சி குறைவு இல்லை என்று நினைக்கிறான்.

மெர்சோ ஒரு அரேபியனை சுட்டு விடுகிறான்.  அவனுக்கு அந்த அரேபியனுக்க நேரிடையாக எந்தப் பகையுமில்லை.  மெர்சோவின் நண்பன் ரேமோனுக்கும் அரேபியனுக்கும்தான் பகைமை.   இதற்குக் காரணம் வைப்பாட்டியாக வைத்திருந்த பெண்ணை ரோமன் துர்த்தி விடுவதால் ஏற்படுகிறது.   அந்த அரேபியன் அவள் சகோதரனுக்கு வேண்டியவன் என்று கதை போகிறது.    

மெர்சோ சுட்டு விடுகிறான்.  இந்த இடத்தில் இப்படி எழுதப் பட்டிருக்கிறது.   ‘அதுவே நான் என் துரதிருஷ்டத்தின் வாயிற் கதவில் நான்கு முறை தட்டியதுபோலிருந்தது.’ ஆனால் கொலை செய்துவிட்டோமே என்ற பதைப்பு வெளிப்படவில்லை. அதுவும் தேவையில்லாத கொலை.  தவிர்க்கப்பட வேண்டிய கொலை.

கொலை செய்ததால் கைதாகிறான்.  இந்த நாவலில் இரண்டாவது பாகத்தில் எல்லாம் வருகிறது.  கொலை குற்றவாளி எப்படி தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்கிறான்.  சிறையில் சிகரெட் பிடிக்க முடியாது.  சிகரெட் பிடிக்காமல் தன்னை எப்படிப் பழக்கப்படுத்தி கொள்வது என்று தன்னை மாற்றிக்கொள்கிறான்.

மெர்சோ கடவுளை மறுப்பவன்.  இது அவனுக்கு எதிராக செயல்படுகிறது.  அவன் ஒரு முறை கூட கொடூரமாக கொலை செய்த தன் குற்றத்திற்காக வருத்தப்படவில்லை.  

இந்த நாவலில் முக்கியமான பகுதி பாதிரியாரைச் சந்திப்பது.  

பாதிரியார் அவனைப் பார்த்துப் பேசுகிறார் :”இல்லை அன்பரே, நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன்.  ஆனால் உங்களுக்கு அது தெரியவில்லை.  ஏனெனில் உங்கள் இதயம் இருளில் ஆழ்ந்திருக்கிறது.  நான் உங்களுக்காகப் பிரார்த்திப்பேன்,” என்றார். 

ஆனால் பாதிரியாரை திட்டி அனுப்பி விடுகிறான் மெர்சோ. மெர்சோ யார்?  அவன் ஏன் இதுமாதிரி நடந்து கொள்கிறான்?  அவன் காமுவின் மனசாட்சியா?  இது மாதிரியான கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது.  

மெர்சோவைப் பொறுத்தவரை மரணத்தண்டனையும் ஒன்றுதான் ஆயுள் தண்டனையும் ஒன்றுதான்.  இந்த நாவலைப் படிக்கும்போது ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும்.  அவ்வளவு நுணுக்கம் நிறைந்த நாவல். மெர்சோ எல்லாவற்றையும் வாங்கிக்கொள்பவனாக இருக்கிறான்.  அவனுக்கென்று எந்த அபிப்பிராயமும் இல்லை.  அம்மா இறந்து போய்விட்டாளென்று அறிந்தும் அவள் முகத்தைப் பார்க்க விரும்பாதவன், ஆனால் நாவலின் பல இடங்களில் அம்மாவை ஞாபகப்படுத்திக் கொள்கிறான்.  

பின்னுரையாக வெ ஸ்ரீராமன் அவர்கள் எழுதியதை ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டும். 

நான் ஒரு முறை இந்த நாவலை இப்போது படித்திருக்கிறேன்.  இன்னும் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.  அல்லது எதாவது ஒரு பகுதியைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் படிப்பேன்.  

அந்நியன் – ஆல்பெர் காம்யு – பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ ஸ்ரீராம். – வெளியீட்டாளர் : க்ரியா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன