துளி : 56 – சிறுகதையை கொண்டாடுவோம்
அழகியசிங்கர்
கடந்த இரண்டாண்டுகளாக தினமணி சிவசங்கரி போட்டி வைத்து பரிசுக்குரியவார்களுக்கு நேரிடையாக பரிசு வழங்குகிறார்கள்.
சிறுகதைப் போட்டி வைக்கும் எந்தப் பத்திரிகையாவது இதுமாதிரி செயல்படுகிறதா? இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும். இன்று இரண்டாவது காட்சி அரங்கமானது. பரிசுக்குரியவர்கள் எல்லோரையும் அழைத்து கவிக்கோ அரங்கத்தில் பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள். இதை வரவேற்க வேண்டிய ஒன்று என்று எனக்குத் தோன்றியது. உண்மையில் சிறுகதைகளை கொண்டாடுகிறார்கள்.
ஒரே ஒருவரைத் தவிர பரிசுக்குரியவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். கவிக்கோ அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது. சிறப்புரை மாலன். பாராட்டுரை நீதியரசர் ஆர் மகாதேவன். போன ஆண்டு விட கதைகள் எண்ணிக்கை அதிகமாக வந்திருந்தாலும், குறிப்பிடும்படியான கதைகள் வரவில்லை என்றார் மாலன். ஆனால் உலகம் முழுவதும் கதை சொல்லும் முறையை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்.
தினமணிகதிர் ஆசிரியர் வைத்தியநாதன் பேசும்போது பள்ளி வகுப்பிலிருந்து எல்லாம் கதை சொல்லும் முறை வரவேண்டுமென்றார்.
நீதியரசர் ஆர் மகாதேவன் காஃப்கா, காம்யு, நபக்கோ என்றெல்லாம் கூறிவிட்டு, புதுமைப்பித்தன் கதையை உதாரணம் காட்டினார்.
போ.ன ஆண்டு பரிசுப்பெற்ற கதைகளைப் புத்தகமாக வானதி பதிப்பகம் கொண்டு வந்துள்ளது. போன ஆண்டு பரிசுப் பெற்ற எழுத்தாளர்களில் பெரும்பாலோர் இந்த ஆண்டு பரிசுப் பெறவில்லை.