அழகியசிங்கர்
2007-ஆம் ஆண்டு தீராநதியில் அசோகமித்திரன் பேட்டி வந்துள்ளது. அதேபோல் ஞானக்கூத்தன். இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் இல்லை. இதை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது.
இந்தப் பேட்டியை எடுத்தவர் கடற்கரை. இதை இப்போதுதான் எடுத்துப் படிக்கிறேன். பொதுவாக நான் எல்லாப் பத்திரிகைகளையும் எடுத்துப் பவுண்டு செய்துவிடுவேன்.
பின் மெதுவாக எடுத்துப் படிப்பேன். எனக்கு அவ்வப்போது எடுத்துப் படிக்கும் கெட்ட பழக்கமில்லை. சிலசமயம் என் கண்ணில் படாமலயே பவுண்டு வால்யூம் போய்விடும். இப்படி ஒரு தவற்றைச் செய்கிறேன். உடனே உடனே எடுத்துப் படித்துவிடவேண்டும்.
நான் ஒன்றும் அப்படிக் குடி மூழ்கிப் போகிற காரியமெல்லாம் செய்யவில்லை. படித்திருக்கலாம். அப்போது வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்தேன். பந்த நல்லூரில். சனிக்கிழமைப் போய் ஞாயிற்றுக்கிழமை திரும்புவேன். கவனமெல்லாம் பயணத்திலேயே இருக்கும். ஆனால் படித்திருக்கலாம்.
இதில் இரண்டு மூன்று தீராநதி இதழ்களை பைன்ட் செய்யவில்லை. எப்படித் தொலைந்தது என்று தெரியவில்லை?
இந்தப் பேட்டி எடுக்கும்போது அசோகமித்திரன் தண்டீஸ்வர் நகரிலிருந்தார். அசோகமித்திரன் பேட்டி என்றால் நகைச்சுவை உணர்வோடு சொல்லிக்கொண்டு போவார். இந்த உரையாடலில் ஒரு இடத்தில் என்ன யோசிக்க வைத்தது.
அவர் சொன்னதைக் கேளுங்கள் :
‘அமுதசுரபியில் இப்ப ஒரு கதை வந்தது. அதுல கிழவர் ஒருத்தர் இலந்த பழம் விற்பார். இலந்த பழம் விற்குறவருன்னா நாம் வந்து அவரை பரம ஏழைன்னு நெனைப்போம். அதெல்லாம் இல்ல. பெரிய ஒரு பங்களாவுக்கே அவர்தான் ஓனர்னு கதைபோகும். நல்ல கதை. ஆனா யாருமே அதப்பத்தி சொல்லல. அந்தப் பத்திரிகை ஆசிரியரே கூட சொல்லல…’
அது என்ன கதை என்று தெரியவில்லை. இப்போது எடுத்துப் படிக்கலாமென்றால் கதைத் தெரியவில்லை. பெரும்பாலோர் பத்திரிகையில் வருகிற கதைகளைப் படிப்பதில்லை. இது என் குற்றச்சாட்டு. அசோகமித்திரன் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.