அதிர்ச்சியான தகவல்

அழகியசிங்கர்

நேற்று காலை பத்து மணி சுமாருக்கு ஒரு செய்தி வந்தது.  அந்தச் செய்தி என்னை திடுக்கிட வைத்தது.  என் தூரத்து உறவினரின் மனைவி இறந்த செய்திதான் அது.  வயது அதிகமாகவில்லை.  ஆனால் அந்த பெண்மணி இறந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது.  பத்தாவது நாளுக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சின்ன வயதில் ஒரு பெண் மரணம் அடைவதா?

இந்தச் செய்தியை அனுப்பியவருக்கு உடனே போன் செய்தேன்.  அப்போது அவர் சொன்ன தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது.

அந்தச் செய்தியை அனுப்பியவரின் சகோதரர் ராஜ கீழ்பாக்கத்தில் குடியிருக்கிறவர்.  அவர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  

அவர், அவர் மனைவி, அவர்களுடைய பேரன் மூவரும் ஒரு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்கள் இடத்திற்கு திரும்பும்போது எதிரில் வேகமாக வந்த ஒரு ஸ்போர்ட்ஸ் டூ வீலர் இவர்கள் மீது மோதியது.  இதில் அந்த இடத்திலேயே அவர் மனைவி இறந்து விட்டார்.  இவருக்கு தலையில் பலத்த காயம்.  அவர்களுடைய பேரனுக்கு காலில் எலும்பு முறிவு.  ஸ்போர்ட்ஸ் டூ வீலரில் வந்தவனுக்கு முதுகில் எலும்பு முறிவு.  இந்தச் செய்தியைக் கேட்டவுடன் என்னடா இது இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தருகிறாரே என்ற வருத்தம் அதிகமாக ஏற்பட்டு விட்டது.  

அடிக்கடி டூவீலரில் பயணம் செய்பவன் நான்.  இந்தச் செய்தியைக் கேட்டவுடன், டூ வீலரை ஓட்டுவதைக் குறித்து பல சந்தேகங்கள் வர ஆரம்பித்து விட்டன.  ஒரு டூ வீலர் இன்னொரு டூ வீலர் மீது மோதி உயிரையே பறிக்குமா என்பதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டன.  

நான் அடிக்கடி செல்லும் ஆர்யாகவுடர் தெருவில் டூவீலரை ஓட்டிக்கொண்டு போகும்போது இது மாதிரியான விபத்துக்கள் நடப்பதற்கு எல்லாவித நியாயமும் இருக்குமென்று தோன்றும்.  அவ்வளவு மோசமான தெரு.   தினமும் 10 முறையாவது அந்தத் தெருவில் டூ வீலரில் சென்று கொண்டிருப்பேன்.  பின்னால் மனைவியையும் உட்கார வைத்துக்கொண்டு. 

இறந்து போனவருக்கு ஐம்பது வயதுதான் இருக்கும்.    அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் இதுமாதிரியான மரணம் ஏற்படக்கூடுமென்று.   

நான் பொதுவாக செய்தித் தாள்களை வாங்குவதில்லை.  என்ன காரணம் என்றால் செய்தித்தாள்கள் முழுவதும் மரணம் பற்றிய தகவல்கள்தான் அதிகம்.  சிலர் கொலை செய்யப்பட்டு விடுவார்கள், சிலர் தற்கொலை செய்து கொண்டு விடுவார்கள், சிலர் விபத்தில் சிக்கி இறந்து விடுவார்கள்.  இதைத்தான் செய்தித்தாள்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும்.  

என்னுடன் நடைபயிலும் நண்பர் ஒருவர் இப்போதெல்லாம் கொலை செய்யப்படுவது அதிகப்படுகிறது என்று தெரிவித்தார்.  அதைக் கேட்டவுடன் மூட் ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

இந்தத் தருணத்தில் நகுலன் கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

இருப்பதற்கென்றுதான் வருகிறோம்

இல்லாமல் போய்விடுகிறோம்.

இறந்து போனவரின் ஆத்மா சாந்தியடைய இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன