துளி : 48 – இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தேன் – 2
அழகியசிங்கர்
உலக அதிசயங்களில் ஒன்றான இடமாகத்தான் நான் கிரான்ட் கென்யான் என்ற இடத்தைக் காண்கிறேன். இந்த இடத்தின் முடிவில் முழுக்கக் கல்லால் ஆன காப்பி குடிக்கும் இடம். 100 வருடங்களுக்கு முன்னால் இந்த இடத்தைச் சுற்றிக்காட்டும் வழிகாட்டி இறுதியில் இந்தக் கல்லால் ஆன ஓட்டலில் காப்பி குடிப்பாராம். அதனால் இந்த இடம் பிரபலமானது என்று சொல்கிறார்கள்.
கிராண்ட் கென்யானில் உள்ள ஓட்டலில் இரவு தங்குவது அதிக அளவிற்கு வாடகைத் தரவேண்டும் என்பதால் வ்ளாக் ஸ்டாவ் என்ற இடத்தில் உள்ள டேஸ் இன் என்ற ஓட்டலில் தங்கினோம். கிôôன்ட் கென்யான் கிட்டத்தட்ட 100 மைல் தூரத்தில் இந்த ஓட்டல் இருந்தது.
அங்கிருந்து நாங்கள் கிளம்பி சென்ற இடம் லாஸ் வேகாஸ் என்ற இடம். 24 மணி நேரமும் ஒரு நகரம் விழித்துக்கொண்டிருக்குமென்றால் அது லாஸ் வேகாஸ் என்ற இடம்தான்.
பெரிய பெரிய ஓட்டல்கள். மேல்நாட்டு இசையின் சப்தம். கூடவே சூதாட்டம். 110 மாடிகள் கொண்ட ஸ்டாராட்ஸ்பியர் என்ற 5 நட்சத்திர ஓட்டல். நாங்கள் 7வது மாடியில் உள்ள அறையில் இருந்தோம். பிரமிப்பாக இருந்தது. அன்று இரவு 108வது மாடிக்குச் சென்று வேகாஸ் என்ற ஊரைப் பார்த்தோம்.
குடிப்பது, சூதாட்டம் ஆடுவது என்று முழுவதும் ஒரு ஓட்டல். அதேபோல் இங்குள்ள வேறு சில ஓட்டல்களிலும் சூதாட்டம். இங்கு தெருவில் தென்பட்ட வேன்களில் ஒரு விளம்பரம். இரவு நேரத்திற்கு உங்கள் துணைக்குப் பெண் வேண்டுமென்றால் அணுகவும் என்று எழுதியிருந்தது. இங்கே சில பிச்சைக்காரர்களைக் கண்டேன். அவர்கள் பீர் குடிக்க, கஞ்சா அடிக்க பிச்சைப் போடும்படி கேட்கிறார்கள்.
நாங்கள் வீட்டிலிருந்தே சாப்பிடுவதற்கு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வந்ததால், அமெரிக்கன் ஓட்டல்களில் எதுவும் சாப்பிடவில்லை. தெருவில் அரைகுறை உடைகளுடன் பெண்கள் எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
இன்னும் சில ஓட்டல்களில் வெனீஸ் நகரத்திற்குப் போவதுபோல் ஓட்டலை உருவாக்கியிருந்தார்கள். ஒரு ஓட்டலில் பாரீஸ் நகரில் செல்வது அமைத்திருந்தார்கள்.
திரும்பவும் பீனிக்ஸ் வருவதற்கு முன் ஒரு டாலரை வைத்து நானும் சூதாட்டம் ஆடினேன். 30 டாலர்கள் வரை ஜெயித்தேன். நாங்கள் திரும்பி வரும்போது யூவர் அணையைப் பார்த்துவிட்டு வந்தோம். இரவு 11.30 ஆகிவிட்டது. வீட்டைத் திறக்கலாமென்று சென்றால் வீட்டைப் பூட்டாமல் போய்விட்டோம் என்பதைத் தெரிந்துகொண்டோம். வீட்டில் உள்ள எந்தப் பொருளும் திருடு போகவில்லை.
121 மாடியிலிருந்து நான் கண்ட காட்சிகளைச் சிறிய காணோலி மூலம் இங்கு அளிக்கிறேன்.