அழகியசிங்கர்
அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் ‘குழந்தைக்கு சுரம்’ என்ற கதை.
எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை எழுத்தாளனின் கதை என்று இதைக் குறிப்பிடலாம். அந்த எழுத்தாளனின் குழந்தை சுரம் வந்து அவதிப்படுகிறது. ஜானகிராமன் கதையை இப்படி ஆரம்பிக்கிறார்:
‘மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ûஸப் பார்த்தார். புத்தகம்போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைத்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது.’
இந்த ஒரு பாராவிலேயே கதையின் முழு வடிவத்தைக் கொண்டு வந்து விடுகிறார்.
குழந்தைக்கு சுரம். டாக்டரைப் பார்க்க வேண்டும். கையில் பணம் இல்லை. அந்தத் தருணத்தில் கடவுளைத் திட்டுகிறார். ஏன் இது மாதிரி வியாதியை குழந்தைக்குக் கொடுத்தாய் என்று.
பஞ்சபகேசன் இவருடைய புத்தகங்களை அச்சிட்டு விற்பவர். அவனை பாவி என்று குறிப்பிடுகிறாள் மனைவி. அவனிடம் போய் நின்றாலும் பணம் கிடைக்காது என்பது இவருடைய எண்ணம். உண்மைதான். பள்ளிக்கூட மாணவர்களுக்கு எழுதிக்கொடுக்கும் புத்தகங்கள் எல்லாம் சின்னராஜா என்ற பெயரில் வெளிவருகிறது. சரவணா வாத்தியார் என்கிற இவர் எழுதிக் கொடுக்கிற புத்தகங்கள்தான். 4 வருடங்களாக இது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு புத்தகத்திற்கு ரூ.50 விதம் 20 புத்தகங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.400 வரை தர வேண்டும்.
400 ரூபாய் தர வேண்டும் என்கிறார் சரவணன் வாத்தியார். பஞ்சபகேசனோ 300 ரூபாய்தான் தர வேண்டும் என்கிறான். இரண்டு பேருக்கும் வாக்குவாதம். இப்போது பணம் இல்லை கொடுத்து அனுப்புகிறேன் என்கிறான். இருவருக்கும் பேச்சு தடித்து விடுகிறது. இந்தப் பேச்சில் கடுப்பாகி விடுகிறார் சரவண வாத்தியார். பின் ஒரு கடுதாசியைக் கேட்டு வாங்கி எல்லாப் புத்தகங்களுக்கும் உரிய தொகையான ரூ.1000 வாங்கிக் கொண்டதாக எழுதி பஞ்சுவிடம் கொடுக்கிறார். இதைப் பார்த்துத் திகைக்கிறார் பஞ்சு.
இனிமேல் இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவேனா என்று முறைத்துவிட்டு வந்து விட்டார் சரவணா வாத்தியார்.
இப்போது குழந்தைக்கு சுரம். பாவி பஞ்சாபகேசனைப் பார்த்து வரச் சொல்கிறாள் மனைவி. அவனிடம் அச்சடிக்க இன்னொரு புத்தகம் எழுதிக்கொடுத்திருக்கிறார் சரவண வாத்தியார். அதை வாங்கி வருவதற்குப் போய் கொடுக்க வேண்டிய பணத்தையும் வாங்கி வரச்சொல்கிறாள். குழந்தைக்குச் சுரம். வேற வழியில்லை மனைவியின் தொந்தரவால் பஞ்சுவை திரும்பவும் பார்க்கப் போகிறார். கையில் 1 ருபாய் 40 காசுக்கள் எடுத்துக்கொண்டு போகிறார். பஸ் டிக்கட் பத்து பைசாக்கு வாங்கிக்கொண்டு போகிறார்.
இக் கதையைப் படிக்கும்போது பணம் கிடைக்குமா குழந்தையின் சுரம் சரியாகி விடுமா என்ற எண்ணமெல்லாம் ஏற்படுகிறது. ஆனால் ஜானகிராமன் வேறு விதமாகக் கதையைத் திருப்புகிறார். இதுதான் அவருடைய கற்பனைத் திறன். ஆற்றல்.
சரவண வாத்தியார் பஞ்சபகேசன் வீட்டிற்குப் போனபோது, பஞ்சபகேசன் மனைவி உடல் நிலை சரியில்லாமல் படுத்துக கிடக்கிறாள். அன்று மாலை 5 மணியிலிருந்து ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறாள். பிரஞ்ஞை இல்லாமல் படுத்துக் கிடக்கிறாள். தத்ரூபமாக இந்த நிகழ்ச்சியை ஜானகிராமன் அசால்டாக விவரித்துக்கொண்டு போகிறார். ஒருவர் கட்டாயமாக இந்தக் கதையைப் படிக்க வேண்டும்.
சரவணா வாத்தியார் பஞ்சு மனைவி உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடப்பதைப் பார்த்து பதட்டம் அடைகிறார்.
ஒரு டாக்டரை அழைத்து வர ஓட்டமாய் ஓடுகிறார். எப்படியோ ஒரு டாக்டரை அழைத்து வந்து பஞ்சுவின் மனைவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்கிறார்கள். சரவணா வாத்தியார் இதற்கு உதவியாக இருக்கிறார். இந்தத் தருணத்தில் தன் குழந்தை சுரத்தில் அவதிப்படுவது மறந்து விடுகிறது அவருக்கு.
எல்லாம் முடிந்து அவர் தன் வீட்டுக்கு நடந்தே போகிறார்.
ஜானகிராமன் கடைசியாக இப்படி எழுதுகிறார் : ‘நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக் கொண்டிருந்தன.’
இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன், என்னடா இது இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.