நீங்களும் படிக்கலாம் – 49

அழகியசிங்கர்

படிக்க வேண்டிய கதைகள் – 2

அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1963ல் ஐந்திணை பதிப்பகம் மூலம் வந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. ஆறாம் பதிப்பு 1990ல் வந்துள்ளது.  அதன்பின் எத்தனைப் பதிப்புகள் வந்துள்ளன என்பது தெரியாது.

11 கதைகள் கொண்ட தொகுப்பில் முதல் கதை அக்பர் சாஸ்திரி.  அவநம்பிக்கையுடன் முன்னுரை எழுதி இருந்தாலும் ஜானகிராமன் எழுத்துக்கு வாசகரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு மறுப்பதிற்கில்லை.  இந்தப் புத்தகத்தின் 6வது பதிப்பைததான் வாங்கியிருக்கிறேன்.  புததகம் வாங்கிய ஆண்டு 1990.   தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் பார்க்கலாம்.  பொதுவாக கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.  ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஒரே மையம் இல்லை. அதாவது ஒன்றின் தொடர்ச்சி இன்னொன்றில் இல்லை.

முதல் கதை அக்பர் சாஸ்திரி என்றால் இரண்டாவது கதை

‘துணை’  இப்படி விதம் விதமாய் கதைகள் அமைத்ததால் வாசகர்கள் கதைகளை வாசிக்கும்போது போரடிக்காது.  இதோ üதுணைý கதையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்

ஐந்து தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தில் எல்லோரும் பென்சன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் பென்சன் மாஸ்டர் டே க்கு அந்த வீட்டிலுள்ள வயதானவர்கள் கையெழுத்துப் போட போவார்கள். வீட்டில் உள்ள புதல்வர் அவர்களை அழைத்துப்போவார். அவரும் பென்சன்காரர்.  தாத்தா கொள்ளுத்தாத்தா என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு  போவார்.  ஆனால் இந்த முறை காசிக்குச் சென்று விட்டதால், அவரால் வரமுடியாது. வயதானவர்களை கஜானாவிற்கு அழைத்துக்கொண்டு போகப் பக்கத்து வீட்டில் இருக்கும் சப்ரெஜிஸ்டார் பையன் கிருஷ்ணமூர்த்தி வருகிறான். உண்மையில் நான் இந்தக் கதையைப் படித்துக்கொண்டு வரும்போது வயதானவர்களுக்கு எதாவது நடக்கப் போகிறது என்று நினைத்துக்கொண்டு படித்தேன்.   ஆனால் கதை முடிவு வேறு மாதிரியாக இருந்தது.  

மாட்டு வண்டியில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் கிழவர்களை அழைத்துக்கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு அடி. எலும்பு முறிவு. இதுதான் இந்தக் கதையின் வேடிக்கை.  கிழவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. 

இன்னொரு கதை.  ‘மரமும் செடியும்’ என்ற பெயர்.  மூங்கில்காரர், ஈயக்காரர் பற்றிய கதை.  இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதில்லை.  பேசினாலும் அவ்வளவாய் நெருக்கமாகப் பேசுவதில்லை.  கீழைச்சேத்தி நாட்டாண்மைக்காரரால் மூங்கில் காரரும் ஈயக்காரரும் பிரசிடென்ட் தேர்தலில் நிற்கிறார்கள்.  வந்தது வினை.  மூங்கில் காரரின் தேர்தல் சின்னமாக மரம் கிடைக்கிறது.  ஈயக்காரரின் சின்னமாக செடி.   மரத்திற்கும் செடிக்கும் போட்டி.  இந்தத் தேர்தலால் பாதிக்கப்படுவது மூங்கில்காரர்.  அவர் தேர்தலில் வெற்றிபெற அதிகமாகப் பணம் செலவு செய்கிறார்.  ஆனால் எப்படியோ ஈயக்காரர்தான் வெற்றி அடைகிறார். 

தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்கிறார் மூங்கில் காரரைத் தூண்டியவர்.  மரமும் செடிக்கும் ஓட்டுச் சீட்டில் பார்க்க வித்தியாசமாகத் தெரியாது.   அதனால் மூங்கில்காரரின் மரச் சின்னத்திற்குப் பதிலாக ஈயக் காரருக்கு ஓட்டு விழுந்து  விடுகிறது.  குமைந்து குமைந்து போகிறார் மூங்கில்காரர்.  மூங்கில்காரர் கீழைச் சேத்தியில் எலுமிச்சைக் கொல்லை ஒன்று வைத்திருக்கிறார்.  மிகவும் பிரயாசைபட்டு 400 எலுமிச்சைக் கன்றுகள் தோண்டி இறைத்தும்,  பலன் மூக்கழுகை.  எலுமிச்சை வெம்பி விழுந்து கொண்டிருந்தது.  அந்தக்  கொல்லையை ஈயக்காரர்  மகன் வாங்கிக்கொண்டான்.  அவனுக்கு 3  மடங்கு அதிகமாக விலைக்கும் விற்று விட்டார் மூங்கில் காரர். அவர் ஏமாற்றி விற்றதாகத்தான் நினைக்கிறார்.  ஆனால் வேறு எதோ  நடக்கிறது.  இதுதான் கதை. 

“நல்லகாலம் எலெக்ஷன் வந்தது. கொலலையும் கிடைத்தது,” என்று சந்தோஷப்படுகிறான் ஈயக்காரர் பையன். அதனால்தான் வசதி கிடைக்கிறது.  மூங்கில்காரர் ஏமாந்து கொல்லையை விற்று விடுகிறார்.  அதுவும் 3 மடங்கு விலை ஏற்றி விற்றதாக அவருக்கு எண்ணம்.  எலெக்ஷன் ஒரு தில்லுமுல்லு என்று புலப்படுத்துகிறார் ஜானகிராமன். 

இன்னொரு கதையான ‘காட்டு வாசம்’ இப்படிச் செல்கிறது.  சுந்தரரரஜன் என்பவன் அவன் நண்பன் ராமசாமியைப் பார்க்க கிராமத்திற்கு வருகிறான்.  ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு.  இருவரும் பேசுகிற பேச்சுதான் இந்தக் கதை.  சுந்தரராஜன் ஒரே பையன்.  சாகும்வரை அவன் அப்பா செய்த கொடுமையைப் பற்றி சொல்கிறான்.  ராமசாமி அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று புகழ்கிறான்.  என் அப்பாவும் கோபக்காரர் வெளியே பார்க்கத்தான் சாதுவாக இருப்பார் என்கிறான் ராமசாமி.  ராமசாமி அப்பாவுக்கு அவனைத் தவிர ஒரு அண்ணன் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.  எல்லார் வீட்டிற்கும் அவன் அப்பாவும் அம்மாவும் சென்று விடுவார்கள்.  இந்த முறை கோபத்தில் ஒன்றும சொல்லாமல் இன்னொருவர் வீட்டிற்குப் போய்விடுகிறார். 

இந்த இடத்திலிருந்து கதை வேறு பாதைக்குச் சென்று விடுகிறது.   ஆசிரமம் கட்டிக்கொண்டு தனியாக வசிக்கும் சக்கரபாணியிடம் போய்விடுகிறது கதை.  பரதேசி கோலம் போட்டுக்கொண்டு வானப்பிரஸ்தம் எடுத்துக்கொண்டு மனைவியுடன் வந்து விடுகிறார் சக்கரபாணி.  அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும். எல்லார் மீதும் உள்ள கோபத்தால்.  இப்படித் தனியாக வந்தும் அவரால் காப்பி சாப்பிடுவதையும் புகையிலை போடுவதையும் விட்டுவிட முடியவிலலை. 

உள்ளூரிலே இப்படி ஒரு ஆள் இருக்கும்போது அவருடன் பழகாமல் நையாண்டி செய்கிறாயே என்று நண்பனை கிண்டல் செய்கிறான் சுந்தரராஜன்.

பேச்சுவாக்கில் கதை சொல்வது போல் நகர்ந்தாலும் பிள்ளைகளுடன் பெற்றவர்கள் சேர்ந்து வாழ முடியவில்லை என்பதைச் சொல்வதுபோல் உள்ளது கதை.

                                                                               (இன்னும் வரும்) 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன