அழகியசிங்கர்
படிக்க வேண்டிய கதைகள்
சென்னையிலிருந்து அமெரிக்கா வரும்போது 4 தமிழ்ப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன்.
கிட்டத்தட்ட 30 புத்தகங்களுக்கு மேல் எடுத்துவர தீர்மானித்திருந்தேன். இங்கே பொழுது போவது கடினமாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் கடைசி நிமிடத்தில் என் மனைவியின் அதைரியத்தால் புத்தகங்களை எடுத்துவரும் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை. முக்கியமாக ஜோல்னாப் பையையும் எடுத்து வரவில்லை.
ஆனால் அதற்குப்பதில் 2011ல் வாங்கிய கின்டல் இருந்தது. இதில் ஏகப்பட்ட புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறேன். அதைப் படிக்கலாம் என்று தோன்றியது. மேலும் பிடிஎப் ஆக சில புத்தகங்களை டௌன் லோட் செய்து லாப்டாப்பில்.
ஆனால் இங்கே வந்தபிறகு அமெரிக்கன் நூலகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வரலாமென்று தெரிந்தத. அதிலிருந்து 10 புத்தகங்களை எடுத்து வந்திருப்பேன்.
புத்தகம் படிப்பதும் அது குறித்து எதாவது எழுத முடியுமா என்று பார்ப்பதும்தான் என் பொழுதுபோக்கு. அந்த வகையில் தி ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி என்ற இப்புத்தகத்தைப் பற்றி எழுதலாமென்று தோன்றியது.
இந்தச் சிறுகதைத் தொகுதியை ஐந்திணைப் பதிப்பகத்திலிருந்து ரூ.13.50 க்கு 1990 ஆண்டில் வாங்கியிருக்கிறேன் என்று நினைககிறேன் பொதுவாக ஒரு புத்தகத்தை வாங்குவதாக இருந்தால் அந்தப் புத்தகத்தில் எந்தத் தேதியில் எந்த ஆண்டு வாங்கியிருக்கிறேன் என்று குறித்து வைத்திருப்பேன். ஏனோ இந்தப் புத்தகத்தில் அதைக் குறித்து வைக்கவில்லை. நம் வாழ்க்கை கடந்து போகிறது. நம் கையில் உள்ள இந்தப் புத்தகமும் கடந்து போய்விடும்
தி ஜானகிராமன் கதைத் தொகுதியான அக்பர் சாஸ்திரியில் 11 கதைகள் உள்ளன.
இங்கு தி ஜானகிராமன் தொகுதியில் எழுதி உள்ள முன்னுரையைக் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.
“இத் தொகுதியில் வெளியாகியுள்ள கதைகள் வெவ்வேறு ஆண்டுகளில் மணிக்கொடி, கலைமகள், சுதேசமித்திரன், கல்கி, ஆனந்தவிகடன், உமா, காதல் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை.
இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை நான். சிறுகதைகள் என்றுகூடச் சொல்லவில்லை.
அசல் சிறுகதைகள் எழுதுகிறவர்கள் உலக இலக்கியத்திலேயே பத்துப் பேருக்குள் இருந்தால் அதிகம். எனவே சாட்சிகள், அல்லது வேறு எதாவது சொல்லி இவற்றை அழைக்கலாம்., ” என்கிறார் தி ஜானகிராமன்.
ஏன் இப்படி எழுதி உள்ளார் ஜானகிராமன் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு ஆகஸ்ட் 1963. அப்போது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தாம் எழுதுவது சிறுகதை இல்லை என்ற குழப்பம் இருந்திருக்கும். ஜானகிராமனுக்கும் இது மாதிரியான குழப்பம் இருந்திருக்கிறது. இந்த 11 கதைகளை ஒரு முறை இல்லை 2 முறை 3 முறைகள் படித்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாய் கட்டமைத்து உள்ளார். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக எடுத்துப் பேச வேண்டும்.
முதல் கதையான அக்பர் சாஸ்திரி எனற கதையை எடுத்துக்கொள்வோம்.
அந்தக் கதையை இரண்டு மூன்று முறைப் படித்து ஆச்சரியப்பட்டேன். அப்படி ஒரு கதையை எழுதுவதற்குப் பெரிய திறமை வேண்டும். அது ஜானகிராமன் போன்ற மேதையால்தான் முடியும்.
கதை நடக்குமிடம் ஓடும் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்டில். அதில் கூடியிருக்கிற மனிதர்களிடையே நடக்கிற உரையாடல்தான் இக் கதை. கதையில் தென்படுகிற கோவிந்த சாஸ்திரி ஒரு அலட்டலான நபராகக் காட்சிப்படுத்தப் படுகிறார். அவரைப் பற்றி தி ஜானகிராமன் இப்படி விவரிக்கிறார்.
‘சாட்டை மாதிரி முறுக்கு ஏறிய உடம்பு. நேரான உடம்பு. உட்கார்ந்திருந்தபோது கூட வளையா நேர் முதுகு.’ இப்படிப் போகிறது இந்தக் கதை. எக்ûஸஸ் இலாக்காவில் சூப்பிரண்டாக இருக்கும் நபருக்கு இரண்டு பிள்ளைகள். நோயாளி மனைவி. கோவிந்த சாஸதிரி என்று அறியப்படுகிற அக்பர் சாஸ்திரி எதிர் சீடடில இருக்கிறார். அக்பர் சாஸ்திரக்குப் பதில் சொல்லிக்கொண்டு வருகிறார சூப்பிரண்டு பயபக்தியுடன். அக்பர் சாஸ்திரி ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறுகிறார். உடம்பை எப்படிப் பேண வேண்டுமென்று. அக்பர் சாôஸ்திரி, அவருடைய வாழ்நாளில் ஒரு முறைகூட மருத்துவரைப் பார்த்ததில்லை என்று பெருமை அடித்துக்கொள்கிறார். உலகத்திலே இருக்கிற நல்லதெல்லாம் சேர்த்துத் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திக்கொண்டவன் அக்பர். அதனால் கோவிந்த சாஸ்திரி யைப் பார்த்து அக்பர் சாஸ்திரி என்ற பெயரை வைத்தவர் அவருடைய சம்பந்தி.
சூப்பிரண்டின் இரண்டு புதல்வர்களைப் பார்த்து இப்படிச் சொல்கிறார் அக்பர் சாஸ்திரி என்கிற கோவிந்த சாஸ்திரி :
‘மலேரியா அடிச்சுக் கிடந்தாப்ல இருக்கே ரண்டும்.’ என்று. பின் பையன்கள் உடம்பைப் பற்றி விஜாரிக்கிறார். குதிரைக்கு வைக்கிற கொள்ளை கொடுக்கச் சொல்கிறார். அவர் பாட்டி வைத்தியம் செய்து கொள்வதைப் பற்றி பெரிதாகத் தற்பெருமை அடித்துக்கொள்கிறார். அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சூப்பிரண்டு வருத்தத்துடன் சொல்கிறார் : üநான் தலையெடுத்த நாளையிலேருந்து பாருங்கோ டாக்டர் வராத நாளே கிடையாது,ý என்று. தன் மனைவியைப் பற்றி மனம் வருத்தத்துடன் பேசிக்கொண்டு போகிறார்.
இந்த இடத்தில் சூப்பிரண்டு மனைவியைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார். ‘வயதுக்கு மீறிய மூப்பு. முகத்தில் சோகை. வாயில் குழறல். அழகாகக இருந்த அம்மாள் இப்போது விகாரமாக மாறி விட்டிருந்தாள்.’
இப்படி தத்ரூபமாகப் படிப்பவர் கவனத்திற்கு ஒரு கதாபாத்திரத்தை ஜானகிராமன் எளிதாகக் கொண்டு வந்து விடுகிறார். அந்த அம்மாளின் தீராத தலைவலியைத் தீர்க்க இயற்கை மருத்துவத்தை அக்பர் சாஸ்திரி சொல்ல, அதை ஒரு நோட்டில் குறித்துக்கொள்கிறார் சூப்பிரண்டு.
இந்தக் கதையில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நபர் ஒருவர் ஜன்னல் பக்கத்தில் உள்ள இருக்கையை விட்டுக்கொடுக்காமல் அமர்ந்திருப்பவர் வேறு யாருமில்லை ஜானகிராமன்தான்.
68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.
இப்படிப் பேசிக்கொண்டு வந்தவர் இறங்கும் இடமான கும்பகோணம் வரும்போது எதிர்பாராதவிதமாய் மார்பைப் பிடித்துக்கொண்டு இறந்தும் விடுகிறார்.
கதையின் முடிவில் ஜானகிராமன் இப்படி முடிக்கிறார்.
‘டாக்டர் உதவியில்லாமல் அக்பர் சாஸ்திரி மனிதன் செய்கிற கடைசி காரியத்தையும் செய்துவிட்டார் என்று அவருக்குப் புரிந்தபாடில்லை.’
இனி இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் புரட்டிப் பார்க்கலாம்.
(இன்னும் வரும்)