துளி : 40 – அவர்கள் நாகரீகமானவர்கள்

அழகியசிங்கர்

ஆரம்பத்தில் நான் அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது, அமெரிக்கா ஒரு பணக்கார நாடு.  பிச்சைக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.  பிச்சைக்காரர்கள் இல்லாத உலகமே இல்லை.  என் கற்பனை முட்டாள்தனமானது.  ஏன் அப்படி நினைத்தேன் என்றால் செல்வ செழிப்புள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால்.  

2011 ல் நான் வந்தபோது நியூயார்க் என்ற இடத்தில்தான் ஒன்றிரண்டு பிச்சைக்காரர்களைப் பார்த்தேன்.  அப்போது நான் ப்ளோரிடாவில் இருந்தேன்.  இப்போது பினீக்ஸ்.  சில தினங்களுக்கு முன்னால் நான் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் தட்டியை வைத்துக்கொண்டு இருந்தாள்.  தட்டியின் வாசகம் இப்படி எழுதியிருந்தது.  எதாவது உதவி செய்ய முடியுமா என்று.  

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  பிச்சை எடுப்பவர்கள் கூட நாகரீகமான முறையில் ஒரு தட்டியில் வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக் கிறார்களே என்று.

சென்னையில் காலையில் சரவணபவன் அருகில் வந்தால் குறைந்தது நாலைந்து பேர்களாவது தென்படுவார்கள்.  அவர்களிடம் ஒரு ரூபாய் காசைப் போட்டால், முறைத்துப் பார்ப்பார்கள்  ஏன் வாங்குவதற்குக் கூட யோசிப்பார்கள்.  குறைந்தது ஐந்து ரூபாயாவது வேண்டும்.  ஒரு மாதிரியாக நம்மை முறைத்துப் பார்ப்பார்கள்.

திரும்பவும் இன்னொரு முறை ஒரு ஆண் பிச்சைக்காரரைப் பார்த்தேன்  தட்டியுடன் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.  தட்டியில் எந்தவிதத்திலும் உதவி செயலாம் என்ற வாசனம் எழுதப்பட்டிருந்தது.  அவரைக் கூப்பிட்டு ஒரு டாலர் கொடுத்தேன்.  வாங்கிக்கொண்டு, கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என்றார் அவர்.

சென்னையில பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது நமக்குப் பச்சாதாப உணர்வு ஏற்படாமல் இருக்காது.  ஆனால் இங்கே பிச்சை எடுப்பவர்கள் வாட்டசாட்டமாக இருக்கிறார்கள். 

அமெரிக்காவில் பார்த்து ரசித்தது.  சுத்தம்.   இங்குக் காணப்படுவதுபோல் சுத்தம் வேறு எங்கும் காண முடியாது.  இதே சென்னையில் நடந்து போகும்போது  பல பேர்கள் தெருவில் காறி உமிழாமல் செல்வதில்லை.  நமக்கே அருவெறுப்பாக இருக்கும்.  அமெரிக்காவிலோ எதாவது குப்பையைப் போடுவதாக இருந்தாலும் அதற்கான குப்பைத் தொட்டியில்தான் போடுகிறார்கள்.

இன்று காலையில் வ்ரைஸ் என்ற கடை வாசலில் வாகனம் வைத்திருக்கும் இடத்தில் சிகரெட் துண்டு ஒன்றைப் பார்த்தேன்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒரு இந்தியர்தான் வாகனம் ஓட்டும் இடத்தில் சிகரெட் துண்டைப் போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதுவும் குறிப்பாக தமிழர்கள்தான் இருக்க வேண்டுமென்றும் யோசித்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன