அழகியசிங்கர்
இன்றைய அரசியல் கட்சிகளை ஒருவர் கூர்ந்து பார்த்தால் வாரிசு இல்லாத கட்சி எதாவது இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் அரசர்கள் ஆட்சியைப் பார்க்கும்போது ஒருவர் ஆட்சி முடியும்போது அந்த அரசரின் வாரிசுதான் ஆட்சி செய்வார். வாரிசு இல்லையென்றால் யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள். முகலாயர்கள் ஆட்சி செய்யும்போது இது இன்னும் தெளிவாகவே தெரிகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியில் இது வாரிசு ஆட்சி இல்லை என்று மறுத்தாலும் வாரிசு ஆட்சிதான் மறைமுகமாகவோ நேரிடையாகவே நடைபெறாமலில்லை.
நேருக்குப் பிறகு இந்திரா காந்தி, இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, இவர்களுக்குப் பிறகு ராகூல் காந்தி என்று இது தொடரத்தான் செய்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர் பதவியை வகுத்துள்ளார். இதற்குத் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் தேர்தலில் கலந்துகொள்ளும் பல அரசியல்வாதிகளின் வாரிசுகளின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் தேர்தலில் போட்டி இடுகிறார்கள்.
இது தவறு என்று யாராவது வாதிட்டால் தவறு இல்லை என்பதைத்தான் சொல்வேன். ஏன் அரசியலை மட்டும் இந்த வாரிசு குறித்து குறை சொல்கிறோம். எல்லா இடங்களிலும் இந்த வாரிசு இல்லாமல் இல்லை.
எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவர் புதல்வன் மருத்துவராகவும், ஒரு வழக்குரைஞரின் புதல்வன் வழக்குரையராகவும் காலம் காலமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சினிமாவில் கூட வாரிசுகள் உருவாகாமல் இல்லை. மூத்த நடிகர் நடிகைகளின் வாரிசுகளின் புதல்வரோ புதல்வியோ சினிமாவில் நடிக்காமல் இல்லை. அல்லது சினிமாப்படங்கள் தயாரிப்பாளர்களோ இயக்குநர்களாகவோ இல்லாமல் இல்லை. இதையெல்லாம் நாம் மறுப்பதில்லை. ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம்.
இசையை எடுத்துக்கொள்வோம். இசையில் பிரபலமானவர்களின் சில வாரிசுகள் அதே இசையில ஈடுபாடு கொண்டு புகழ் அடைகிறார்கள்.
இதில் ஒன்றே ஒன்று கவனிக்க வேண்டும். யார் இதில் உறுதியாக கடைசி வரை நிற்க முடியும். இன்று வாரிசு அரசியல்வாதி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் மக்களின் தயவு வேண்டும். மக்கள் மனதில் இடம்பெறாதவரை வாரிசுகள் ஆட்சியில் இடம் பெறுவது கடினம்.
இந்த வாரிசுகள் ஏன் இதிலெல்லாம் ஈடுபடுகிறார்கள். காரணம் ஒன்றுமில்லை பணமும், புகழும்தான்.
ஆனால் ஒரு வாக்கியம் மட்டும் என்னைச் சிந்திக்க வைக்காமல் இருக்காது. உதாரணமாக வாத்தியார் பையன் மக்கு என்று சொல்வார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதைப் பற்றி யோசிப்பேன்.
அதேபோல் எழுத்தாளர்களின் வாரிசுகள் யாரும் எழுத்தாளர்களாக வர மாட்டார்கள். ஏன்என்றால் அதன் மூலம்
எதுவும் கிடைக்காது.
ந பிச்சமூர்த்தி என்ற எழுத்தாளர் இருந்தார். அவர்தான் தமிழ் புதுக்கவிதைக்கு முன்னோடி. அவருடைய வாரிசுகள் யாரும் எழுத்தாளர்களாக வரவில்லை. உண்மையில் ந பிச்சமூர்த்தியின் பெருமையை அறியாதவர்கள்தான் அவர்கள். காரணம் பணம் சம்பாதிக்க முடியாது. வறுமையில் வாட வேண்டும். யார் இருப்பார்கள் அப்படி இருக்க?
பாரதியைப்போல ஒரு வாழ்க்கையை பாரதியைத் தவிர அவர் குடும்பத்தில் உள்ள வாரிசு இருக்க விரும்ப மாட்டார்கள். இது மாதிரியான அவதி அரசியல்வாதியின் வாரிசுக்கு வரப் போவதில்லை. எல்லாம் பண மயம். புகழ் மயம்.
அதனால் அரசியலில் வாரிசு இருக்கட்டும். மக்கள் மனதில் அவர்களால் இடம் பெற முடிகிறதா என்று பார்ப்போம்.