துளி : 38 – அசோகமித்திரனின் நினைவுகள்



அழகியசிங்கர்

2017ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி அப்பா இறந்து விட்டார்.  அசோகமித்திரன் துக்கம் விஜாரிக்க ரவியுடன் வந்திருந்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அந்தத் தள்ளாத வயதில் துக்கம் விஜாரிக்க வந்திருக்கிறார் என்று தோன்றியது.  சில நிமிடங்கள் இருந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.  ஆனால் அசோகமித்திரனால் மாடி ஏறுவது சிரமம்.  அதனாலேயே அவர் டிஸ்கவரி புக் பேலஸில் கூட்டம் என்றால் மாடி ஏறி வர விரும்ப மாட்டார். என் வீட்டிற்கு மாடி ஏறி துக்கம் விஜாரித்ததை மறக்க முடியாத அனுபவமாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   சிலசமயம் அசோகமித்திரன் போன் செய்யும்போது நான் வீட்டில் இல்லாதத் தருணத்தில் அப்பாதான் போனை எடுப்பார்.  ஹோமியோபதி மருந்துகளை அவருக்குச் சிபாரிசு செய்வார்.  கான்சரே ஹோமியோ மருந்துகளால் தீர்க்க முடியும் என்ற அளவிற்கு நம்பக் கூடியவர். 

  என் டேபிளில் அசோகமித்திரனின் மொத்தக்  கதைகளையும் உள்ள புத்தகத்தை (கவிதா பதிப்பகம்) வைத்திருந்தேன். அப்பா எடுத்துப் படித்துவிட்டார். 

கூட்டம் நடத்தும் நான் கூட வயதானவர்களின் அவதியை உணராமல் இருப்பேன்.  டிஸ்கவரியில் மாடிப்படிக்கட்டுளில் ஏறும்போது சுவரைப் பிடித்துத்தான் ஏற வேண்டும். அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு வருவது சிரமம் என்பதை நான் கூட யோசிக்காமலிருந்திருக்கிறேன்.

ஒவ்வொரு கூட்டத்தில் அசோகமித்திரன் பேசும்போது நான் இனிமேல் அதிக நாட்கள் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டிருப்பார்.  அவர் கடைசியாகக் கலந்துகொண்ட விருட்சம் 100வது இதழ் விழாவின்போது கூட இதைக் குறிப்பிடாமல் இல்லை. அப்படிப் பேசினாலும் அசோகமித்திரனுக்கு ஒன்றும் ஆகாது என்றுதான் நினைப்பேன். 

பெண் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து அசோகமித்திரன் பல கதைகள் எழுதியிருக்கிறார்.  புதுமைப்பித்தன் குறித்து ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, அசோகமித்திரன்தான் தன் கதைகள் மூலம் பெண் பாத்திரத்தை சிற்ப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.   அசோகமித்திரன் பெண் பாத்திரங்கள் மீது நமக்கு ஒருவித பச்சாதாப உணர்வு ஏற்பட்டுவிடும். மானசரோவர் என்ற அவர் நாவலில் வெளிப்படும் அவருடைய பெண் பாத்திரங்கள் மீது ஏதோவித பரிதாப உணர்வும் அந்தப் பெண் பாத்திரங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற கவலையும் ஏற்படாமல் இருக்காது.  இதேபோல் உணர்வை வேறு எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் அசோகமித்திரன் புதுமைப்பித்தன் குறித்து அன்று பேசியதால் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.  

எனக்கு விமோசனம் என்ற அவருடைய கதை ஞாபகத்திற்கு வருகிறது.  சரஸ்வதி என்ற பெண் பாத்திரம் குறித்து.   படிக்கிறவர்களுக்கு அழுகை வராமல் இருக்காது.  அவ்வளவு உருக்கமாக யாராலும் எழுதியிருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

மரணம் அடையும் வரை அசோகமித்திரன் எழுதிக்கொண்டிருந்தார்.  வயதாகிவிட்டால் பலர் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.  அப்படியே எழுத முயற்சி செய்தாலும் எழுத்து சரியாக எழுத வராது.  ஆனால் அசோகமித்திரன் விஷயத்தில் வேறு விதமாக இருந்தது.  இன்னொரு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர் வாழ்நாளில் ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பே எழுதுவதை நிறுத்திவிட்டார். 

அசோகமித்திரனின் இரண்டாவது நினைவு நாளில் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன