அழகியசிங்கர்
இன்று குளிர் போய்விட்டது. வெயில் தொடங்கிவிட்டது. பீனிக்ஸ்ஸில் வெயில் தாங்க முடியாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே தலை காட்ட முடிôதாம். இதன் உக்கிரம் மே மாதத்தில்தான் இருக்குமென்று நம்புகிறேன். பேர்ன்ஸ் அன்ட் நோபல் என்ற புத்தகக் கடையைப் பார்த்து அசந்து விட்டேன். நாம் விருப்பப்படி தேடும் புத்தகம் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு புத்தகம் கிடைத்து விட்டது. நான் ரொம்ப நாட்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம். எர்னஸ்ட் ஹெமிங் வேவின் முழு சிறுகதைத் தொகுதி. இப் புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என்னிடம் படிக்கும்படி கூறுபவர் என் நண்பர் ஆர் ராஜகோபாலன் (ஆங்கிலப் பேராசிரியர்). அவர் சொன்ன நாளிலிருந்து எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். இப் புத்தகம் இன்றுதான் இங்குக் கிடைத்திருக்கிறது. 650 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 22 டாலர்கள். நான் இங்கே வந்தபோது ஒவ்வொரு டாலரையும் இந்தியன் பணமாகக் கணக்குப் போடுகிறேன். இது ஆபத்தானது. அப்படியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது. அதனால்தான் முதன் முறையாக நான் இப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டாமென்று வைத்துவிட்டேன். திரும்பவும் இன்னொரு முறை வந்தபோது வாங்கிவிட்டேன். இதைப் படிப்பதோடல்லாமல் இதில் உள்ள எதாவது ஒரு கதையைத் தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்க வேண்டும். இந்தக் கடையின் தோற்றத்தைப் படம் பிடித்திருக்கிறேன்.