அழகியசிங்கர்
வேணு வேட்ராயன் கவிதை
யாரையும் குறை சொல்வதற்கில்லை
சம்பவங்களால் ஆனது வாழ்வெனில்
எச்சம்பவத்தின் தலைமேல்
எவ்வளவு பொறுப்பை சுமத்துவது?
எக்கணத்தில் எத்திசையில் எடுத்துவைத்த
காலடி
என்னை இங்கு கொண்டு சேர்த்தது?
பிரிந்தும் சேர்ந்தும் மாறிமயங்கும்
வண்ணப்பிரிகைகளான உறவுகளில்
எந்நிறத்தை தொட்டெடுத்து பூசிக்கொள்வது?
இயல்பென்றும் இருப்பென்றும்
மெய்யென்றும் பொய்யென்றும்
அறிந்ததும் அறியவொண்ணாததுமாய்
பெருமரமாய் கிளைத்து பரவி
விழுதில் வேரூன்றிக் கிடக்கிறது அது.
சிறுமனக்கூட்டில் கூச்சலிட்டபடி
ஆயிரம் அலகுகளால்
தீராத எண்ணங்களை
தின்றுகொண்டிருக்கின்றன குருவிக்குஞ்சுகள்.
மரக்கிளையில் தனித்துவிடப்பட்ட
பறவைக்கூடொன்று
தரையில் விழுகிறது சத்தமின்றி.
நன்றி : அலகில் அலகு – வேணு வேட்ராயன் – விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – 9444113205 – பக் : 82 – விலை : ரூ.60