சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
அழகியசிங்கர்
வழக்கமாக நான் புத்தகங்கள் அதிகமாகப் படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம். ரயிலில் பயணம் செய்யும்போதுதான். அதனாலேயே பகலில் ஒரு இடத்திற்குப் பயணம் செய்வதையே விரும்புவேன். அப்படிப் பயணிக்கும்போது கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.
இந்த முறை மயிலாடுதுறைக்குப் போனபோது விஜய் மகேந்திரனின் üசாமானிய மனிதரின் எதிர்க்குரல்,ý என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனேன். முகநூலில் எழுதிய விபரங்களின் ஒரு பகுதி, பத்தரிகையில் எழுதிய புத்தக மதிப்புரை என்று எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. உண்மையில் ஒவ்வொரு முகநூலிலிருந்து புத்தகமாக வரும்போது அந்தப் பகுதியை எழுதிய படைப்பாளியைத் தவிர்த்து தொகுப்பதற்கு யாரையாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
விஜய் மகேந்திரனே இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் சொலல வேண்டுமென்ற எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும். இதைத் தவறு என்று சொல்ல வரவில்லை.
முதலில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு சாமானிய மனிதனின் எதிர்க்குரல். உண்மையில் இந்தப் புத்தகத்தை ஒருவர் படித்தால் இது எதிர்க்குரல் என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஆதரவு குரல் என்றுதான் சொல்லியிருப்பார்.
பெரும்பாலும் நண்பர்களைப் பற்றியும் நண்பர்களின் படைப்புகளைப் பற்றியும் மனம் உருகி எழுதியிருக்கிறார். நான் இந்தப் புத்தகத்தை இரண்டு விதமாகப் பார்க்கிறேன்.
ஒன்று சினிமாகலைஞர்களுடன் அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடு. இரண்டாவது எழுத்தாளர்களுடன் அவருக்கு உண்டான நட்பு.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. உதாரணமாக ‘விழித்திரு’ என்ற படத்தை இயக்கித் தயாரித்த மீரா கதிரவனைப் பற்றி. அதேபோல் களஞ்சியம் என்ற இயக்கினரைப் பற்றி. ஆனால் விஜய் மகேந்திரன் புத்தகத்தைப் படிக்கும்போது அவர்கள் எல்லோரும் எனக்கும் அறிமுகமாகிறார்கள்.
எனக்கும் அவர்கள் இயக்கியப் படங்களைப் பார்க்க ஆர்வம் ஏற்படுகிறது. உதாரணமாக மீரா கதிரவன் படமான விழித்திருவை யூ ட்யூப்பில் தேடிக் கண்டுபிடித்து பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.
இந்தத் தொகுதியில் முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப் பார்வை என்ற கட்டுரையைப் படித்தேன். ப்ரியாதம்பி என்ற பெயரில் முகநூலில் எழுதி வருபவரைப் பற்றி தெரிய வந்தது. புதிய செய்தியாக இருந்தது. இந்த ப்ரியாதம்பி அவர்கள்தான் இப்போது ஆனந்தவிகடனில் எழுதி வருபவர் என்று நினைக்கிறேன். ஆனால் விஜய் மகேந்திரன் குறிப்பிடும் மற்றவர்களைப் பற்றி எனக்கும் ஒருவித அறிமுகம் உண்டு.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது விஜய் மஹேந்திரனின் பரவசப்படும் தன்மை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விஜய் மஹேந்திரன் ஒரு படைப்பாளி. அப்படி ஒரு படைப்பாளியாக இருப்பவர் சகப் படைப்பாளியின் படைப்புகளைக் குறித்துப் பரவசமாக எழுத மாட்டார்கள். ஆனால் விஜய் மஹேந்திரன் வித்தியாசமானவர். அவர் எல்லோரைப்பற்றியும் பரவசத்தன்மையில் எழுதுகிறார்.
உதாரணமாக ஷோபாசக்தி என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது கட்டுரை என்பதை விட கதைபோல் எழுதியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. இந்தப் பரவசப்படும் தன்மைதான் விஜய் மஹேந்திரனின் பலம்.
இன்னொரு விஷயத்தையும் இந்தப் புத்தகத்தில் கண்டேன். புத்தக விமர்சனம். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய புத்தக விமர்சனம் எழுதி உள்ளார். துணிச்சலாக மனதில் படுகிற பல கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
சென்னைக்குப் புதியதாக வரும்போது படுகிற அவஸ்தையைத் தெரிவிக்கிறார். சில கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு சிறுகதையைப் படிக்கிற எண்ணம் எழாமல் இல்லை. இதற்குக் காரணம் விஜய் மஹேந்திரன் ஆரம்பத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளர்.
ரஜினிகாந்த், ஏ ஆர் ரஹ்மான், ஸ்ரீதேவி போன்ற திரை உலகப் பிரமுகர்களை அறிமுகப்படுத்துகிறார்.
பிட்டாக இருக்க செய்ய வேண்டியவை, முருங்கைக் கீரை படிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள். குமரகுருபரன் என்னும் ஆளுமை என்ற கட்டுரை உருக்கமாக உள்ளது. நண்பர் நரனும் நானும்தான் தேநீர் சந்திப்புகளை அவர் நினைவுகளைப் பேசி வருகிறோம் என்று முடிக்கிறார்.
இத் தொகுதியில் கடைசியாக உள்ள கட்டுரையின் தலைப்பு நாய்கள் ஜாக்கிரதை. தெரு நாயை எப்படி நடத்தவேண்டும் என்று எழுதியிருக்கிறார். ஆனால் நாய் குரைக்கும் போது தேவையில்லாத பயம் ஏற்படாமல் இல்லை. என் நண்பர் ஒருவர் வீட்டில் நாய் வைத்திருக்கிறார் என்பதால் அவர் வீட்டிற்கே போகவில்லை.
இத் தொகுப்பைக் குறித்து சில கருத்துக்களையும் சொல்ல விரும்புகிறேன்.
இத் தொகுப்பில் என்னன்ன கட்டுரைகள் எந்தந்தப் பக்கங்களில் வெளிவந்திருக்கினறன என்ற அட்டவணை வேண்டும்.
விஜய் மகேந்திரனின் சுயவிபரக் குறிப்புகள் வேண்டும். மற்றபடி இது வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.
நன்றி : சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – விஜய் மகேந்திரன் – வெளியீடு : புலம், 332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005 – தொலைபேசி : 9840603499