அழகியசிங்கர்
வாழ்க்கை
சுகந்தி சுப்ரமணியன்

வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?
நான் கேட்டேன் அந்தப் பெண்களை.
இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.
எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.
ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.
வெள்ளிக்கிழமையும், வியாழனும்
விரதமிருக்கிறேன் அம்மனுக்கு,
தீரும் என் கவலைகள் என்றாள்
மற்றுமொருத்தி.
இவர்களின் அனுபவங்கள் என்னுள் அடங்க மறுத்து அதிர
மௌனமானேன்.
வாழ்வின் தாக்குதல்கள் புரியாமலும்
வலுவுடன் எதிர்க்க முடியாமலும் ஓய்ந்துபோன
கால்கள் நடக்கின்றன மெதுவாய்
தலைகள் நிலத்தைப் பார்த்தபடி
நிமிர முடியாமல்.
நன்றி : சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் – டிஸ்கவரி புக் பேலஸ்,
கே கே நகர் மேற்கு, சென்னை 600 078 – தொலை பேசி : 044-65157525 – பக்கங்கள் : 350 – விலை : 330