அழகியசிங்கர்
புத்தகக் காட்சியில் நான் இருந்த பகுதியிலேயே எதிர் வெளியீடும் இருந்தது. எதிர் வெளியீடு கொண்டு வரப் போகும் ஒரு புத்தகத்தைப் பற்றி அறிவிப்பு முன்னதாகவே வந்திருந்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் கசார்களின் அகராதி. மிலோராத் பாவிச் எழுதிய புத்தகம். ஆண் பிரதி, பெண் பிரதி என்று இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகம்.
இந்தப் புத்தகம் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்று பலமுறை போய் கேட்பேன். எதிர் வெளியீட்டில் பெரும்பாலான புத்தகங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் சில புத்தகங்களை வாங்கலாம் என்று நினைத்தாலும் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து வாங்க வேண்டாமென்று தோன்றியது.
மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை க நா சு கொள்கையை நான் முழுவதும் விரும்புகிறேன். க நா சு ஒரு புத்தகத்தை மொழி பெயர்க்கும் முன் ஒரு முறை படிப்பார் பின் அப்படியே மொழி பெயர்த்து விடுவார். மொழிபெயர்க்கப்படும் புத்தகத்தின் ஆன்மாவைக் கொண்டு வருவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும்,
கசார்களின் அகராதி என்ற இரு பகுதிகள் கொண்ட புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ஸ்ரீதர் ரங்கராஜ்.
செர்பிய க்ரவோஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்ட பிறகு ஆண் பிரதியை முதலில் படிப்பதா பெண் பிரதியைப் படிப்பதா என்ற குழப்பம் இப்போது இருக்கிறது. அதே எதிர் வெளியீடில் இன்னும் சில புத்தகங்களையும் வாங்கினேன்.
உலகச் சிறுகதைகள் 3 பாகங்களை வாங்கினேன். மொழி பெயர்த்தவர் கார்த்திகைப் பாண்டியன். எருது, சுல்தானின் பீரங்கி, துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்ற தலைப்புகளில். நான் எதாவது ஒரு புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்கிவிட்டால் திரும்பத் திரும்ப அதே கடைக்குச் சென்று இன்னும் எதாவது புத்தகம் வாங்கச் சுற்றிக்கொண்டிருப்பேன். இந்த முறை எதிர் வெளியீட்டைச் சுற்றி சுற்றி வந்தேன். இன்னும் ஒரு புத்தகம் சூன்யப் புள்ளியில் பெண் நவல் எல் சாதவி எழுதியது. தமிழில் சசிகலா பாபு. இது ஒரு நாவல். கொய்ரா அருகில் உள்ள சிறு கிராமத்தில் 1931ல் பிறந்தவர் நவல் எல் சாதவி. அரேபியா பெண்களின் நலத்திற்காகப் போராடியவர்.
எதிர் வெளியீட்டில் எனக்குப் பிடித்த அம்சம். புத்தகங்களில் அமைப்பு. பார்த்தவுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அட்டை அமைப்பு. ஆலிஸ் வாக்கர் எழுதிய அன்புள்ள ஏவாளுக்கு என்ற புத்தகத்தையும் வாங்கி உள்ளேன். தமிழில் மொழி பெயர்த்தவர் ஷஹிதா அவர்கள். எதிர் வெளியீட்டிலிருந்து 7 புத்தகங்களை வாங்கிவிட்டேன்.
நான் இப்படி அந்நியாயமாக புத்தகங்கள் வாங்கிக் குவிப்பதைப் பார்த்து நீங்கள் மரத்திடம் போய் புகார் கொடுப்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்ல மாட்டேன். இன்னும் சில புத்தகங்களைப் பற்றி தொடர்வோம்.
சரி மேலே குறிப்பிட்ட நூல்களில் முதலில் நான் எதை எடுத்துப் படிக்க வேண்டும்?