நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..10

அழகியசிங்கர்

இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி 14 புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறேன். அப் புத்தகங்களைப் பற்றி சொல்வது முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். அது தவிர என் புத்தகக் (எண் : 403) விற்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய நூல்களையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. முதலில் விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களை முடித்து விடுகிறேன்.

‘எதையாவது சொல்லட்டுமா?’ என்பது என்னுடைய கட்டுரைத் தொகுதி. இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் 2012ஆம் ஆண்டு அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரைகள். என்னை உற்சாகப்படுத்தி பத்திரிகையில் எழுதி வைத்தா அம்ருதா ஆசிரியர் திலகவதிக்கும், என்னைத் தூண்டிய நண்பர் தளவாய் சுந்தரத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் கட்டுரை எழுதி 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் மறந்தே விட்டேன். பின் ஒருநாள் டிசம்பர் மாதத்தில் படுக்கையிலிருந்து தூங்கி எழுந்தபோது தோன்றியது அம்ருதாவில் நான் எழுதிய கட்டுரைகளைப் பற்றி. உடனே கணினியைத் தட்டினேன். அதில் வரிசையாக எழுதும்போதே பதிவு செய்து வைத்திருந்தேன். அத்தனையும் சேகரித்தேன். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நான் எழுதியிருக்கிறேன். அப்போது கட்டுரை எழுதுவது சாதாரண விஷயமில்லை என்று எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு மாதமும் என்ன எழுதுவது என்ற யோசனை ஓடிக்கொண்டிருக்கும்.

ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்றாலும் கட்டுரை எழுதும்போது ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். சொன்னதையே திரும்பிச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நம் வாழ்க்கை சாதாரண வாழ்க்கை. காலையில் எழுந்து கொள்கிறோம், ஏதோ புத்தகம் படிக்கிறோம். தூங்கி விடுகிறோம். பெரிய அதிசயம் ஒன்றும் நடப்பதில்லை. ஆனால் கட்டுரை எப்படி எழுதுவது? என் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைத்தான் கட்டுரையாக மாற்றினேன். இக் கட்டுரைகள் பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மணிவண்ணன். பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவர் வெளிப்படையாக மனதில் தோன்றுவதைச் சொல்லக் கூடியவர். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவருடைய ‘கேட்பவரே’ என்ற கவிதைத் தொகுதியைப் படித்துவிட்டு எழுத வேண்டுமென்ற நினைக்கிறேன். அவர்தான் என் கட்டுரைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதி உள்ளார். அவருக்கும் என் நன்றி.

இக் கட்டுரைகள் எழுதிய விதம் பற்றி சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக சரக்கரை நோயிற்காக ஒரு மாத்திரையை பல ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் பேப்பரில் ஒரு செய்தி. அந்த மாத்திரையைச் சாப்பிடக்கூடாது, கெடுதல் என்ற செய்தி. அந்த மாத்திரியை விற்கக் கூடாதென்று அரசாங்கம் உத்தரவு போட்டிருந்தது. பேப்பரில் தலையங்கமாகவே அதை எழுதியிருந்தார்கள். உடனே அந்த மாத்திரையை நிறுத்திவிட்டேன். ஆனால் அதை எடுத்துக்கொள்ளச் சொன்ன மருத்துவருக்கு இது தெரியவில்லையே என்று தோன்றியது. இதை ஒரு செய்தியை கட்டுரையாக மாற்றி எழுதினேன். ஆனாலும் 22 மாதங்களாக நான் எழுதியது பெரிய விஷயமாக எனக்குப் பட்டது.

அக் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 108 பக்கங்கள் கொண்ட புத்தகமாக எதையாவது சொல்லட்டுமா என்ற புத்தகம் உருவாகி உள்ளது. இதன் விலை : ரூ.90 தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன