நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..1

அழகியசிங்கர்

ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி புத்தகங்கள் கொண்டு வரும் வழக்கம் எனக்குண்டு. ஆரம்பத்தில் நான் ஒன்றோ இரண்டோ புத்தகம் கொண்டு வருவேன். சிலசமயம் அப்படிப் புத்தகம் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். புத்தகக் காட்சியை முன்னிட்டிதான் அப்படி புத்தகம் கொண்டு வருவேன். அதற்கு முன் வரை சும்மா வெட்டியாய் பொழுதைப் போக்குவேன். இப்போதெல்லாம் அச்சிடும் முறை மாறிவிட்டது. அளவறிந்து செயல் படுகிறார்கள்.
வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்துகொண்டு வரும்போது புத்தகக் காட்சி 4ஆம் தேதி என்று சொன்னார் என்னுடன் வரும் நண்பர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரமாக வந்து விட்டதே என்ற அதிர்ச்சி.
பூங்காவில் ஒரு பெரிய மரம் இருக்கிறது. பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மரத்திடம் போய் பேசினேன். “மரமே மரமே,”
“என்ன?”
“இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேச மாட்டேன்.”
“என்ன இரண்டு விஷயங்கள்”
“ஒன்று வந்து ஏன்?”
“ஓ ஓ ஏன்னா?”
“இன்னொன்று இன்னொரு ஏன்?”
“எனக்குப் புரிந்து விட்டது. உன்னால் முடியாது.”
எனக்கு மரம் மீது கோபம். நழுவி வந்து விட்டேன். என் கூட நடந்து வரும் நண்பர், “உம்மால் ஒருநாள் கூட அதைச் சொல்லாமல்
இருக்க முடியாது.”
“உண்மைதான்” என்றேன்.
வரும் ஆண்டிற்கான புத்தகங்களை டிசம்பர் மாதம்தான் அவசரம் அவசரமாக அடித்து முடித்தேன். இதோ என் முதல் புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

புத்தகம் 1 : ‘அலகில் அலகு’தான் முதல் புத்தகம். வேணு வேட்ராயனின் கவிதைத் தொகுப்பு. 72 கவிதைகள் அடங்கிய புத்தகம். வேணு வேட்ராயன் மூன்று பேர்களை அடையாளப்படுத்துகிறார். அவர் கவிதை ஆக்கத்திற்கு அந்த மூன்று படைப்பாளிகள்தான் காரணம் என்கிறார். ஜெயமோகன், பிரமிள், தேவதேவன்தான் அந்த மூன்று பேர்கள். அவர் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினால் பிரமிளோ தேவதேவனோ தென்படவில்லை.
வேணு வேட்ராயன் கவிதைகள் வித்தியாசமாக இருக்கின்றன. கவிதைகள் முழுவதையும் படிமத்தால் அழகுப் படுத்துகிறார். இவர் கவிதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் நண்பர் பிரபு மயிலாடுதுறை. இக் கவிதைகளைப் படிக்கும் போது இவர் கவிதைகளை முபீன் கவிதைகளுடன் ஒப்பிடலாமா என்று யோசித்தேன். ஆனால் நிச்சயமாக அது மாதிரி இல்லை என்று உடனே தோன்றி விட்டது.
இத் தொகுப்பில் உள்ள 72 கவிதைகளில் தலைப்பே இல்லை. அவரும் இக் கவிதைகளுக்கு எந்த முன்னுரையும் எழுதவில்லை. இதோ அவர் கவிதை ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
பக்கம் 27ல் இது மாதிரி ஒரு கவிதை எழுதி உள்ளார்.

சொல்லோ
சூத்திரமோ
சுட்டும் விரல்
நிலவோ
மௌனமோ
சூட்சுமமோ.

சுட்டும் விரலோ
நிலவோ
உன் ஒரு சொல்லோ
மௌனமோ
சூத்திரமோ
சூத்திரத்தின் சூட்சுமமோ.

83 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.60.

“நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..1” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன