அழகியசிங்கர்
எனக்கு இரு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவர் சினிமாவில். இன்னொருவர் நாடகத்தில். ஒரு காலத்தில் நாங்கள் மூவரும் வேற வேற வங்கிகளில் பணிபுரிந்தவர்கள். சினிமாவில் ஆர்வமாய் ஈடுபட்டவர், உலகச் சினிமாவே எடுத்துப் புகழ் பெற்றுவிட்டார். இன்னும் தொடர்ந்து சினிமாவைப் பற்றிய சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்.
இன்னொரு நண்பர் நாடகத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நாடகத்திற்காக ஒரு பத்திரிகையை துணிச்சலாக நடத்தியவர். அந்தப் பத்திரிகையின் மூலம் பல நாடகங்கள் தமிழுக்குத் தெரிய வந்துள்ளன. நாடகத்தில் பங்குகொண்டவர் தன் எண்ணத்தில் தீவிரமானவர்.
8ஆம் தேதி அவர் போன் செய்தார். இரண்டு நாடகங்களை அவர் வீட்டு மொட்டை மாடியில் அரங்கேற்றம் செய்யப் போவதாகக் குறிப்பிட்டார். 9ஆம் தேதி மாலை 7 மணிக்கு.
எப்படியும் அந்த இரு நாடகங்களைப் பார்த்தே தீருவது என்று தீர்மானித்திருந்தேன். கே கே நகரில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். மொட்டை மாடியில் ஒரு அகலமான இடத்தில்தான் நாடகங்கள் நடந்தன. எளிமையான முறையில் அரங்கேற்றம்.
சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். ஆனால் திருப்தி ஏற்படுவதில்லை. இரண்டு நாடகங்களைப் பார்த்தவுடன் சொல்ல முடியாத அளவிற்குத் திருப்தி. நம் நேரம் வீணாகப் போகவில்லை என்று தோன்றியது.
ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் இரு நாடகங்களும் நடந்து முடிந்து விட்டன. அந்த முறையும் எனக்குப் பிடித்திருந்தது.
ஒரு நாடகம் இத்தாலிய நாடகமான கொடுங்கோலர்கள்
என்ற நாடகம். இதை இத்தாலியில் எழுதியவர் மேரியோ பிராட்டி. தமிழில் புவியரசு செய்துள்ளார். வெளி பத்திரிகையில் பிரசுரமான நாடகம்.
இன்னொரு நாடகம் ஹங்கேரிய நாடகம். வாருங்கள் மயிரைச் சாப்பிடுவோம் என்ற தலைப்பு. இந்த இரண்டு நாடகங்களில் முதல் நாடகத்தை நான் ரொம்பவும் ரசித்தேன். எளிமையான முறையில் இந் நாடகங்கள் அரங்கேற்றம் ஆயின.
ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தடுமாற்றம் எதுவுமில்லாமல் சிறப்பாக நடித்தார்கள்.
மிகக் குறுகிய இடத்தில், அவ்வளவு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். இரண்டாவது நாடகத்தில் கொஞ்சம் அரட்டையான வசனங்கள் உள்ளன என்றாலும் என்னால் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கூத்துப்பட்டறையின் சார்பு அந்த நாடகத்தில் இருக்குமோ என்று தோன்றியது.
தன் முயற்சியில் சிறிதும் தளர்வடையாமல் தொடர்ந்து நாடக நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நண்பரை நான் அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியாது. அவர்தான் வெளி ரங்கராஜன்.
இந்த இரு நாடகங்களும், நாடகவெளியுடன், திணைநில வாசிகள் என்ற அமைப்புடன் சேர்ந்து நடத்தப்பட்டன.
இரண்டு நண்பர்கள் என்று குறிப்பிட்டேன். ஒரு நண்பர் வெளி ரங்கராஜன். சினிமாவில் தன் தீவிரத்தைச் செலுத்துபவரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவர்தான் அம்ஷன்குமார்.