நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்..

அழகியசிங்கர்

சில வாரங்களுக்கு முன் பா ராகவன் அவர்களை சங்கீதா ஓட்டலில் சந்தித்தேன். மதிய நேரம். பொதுவாக ராகவனை சந்திக்கும்போது அது உற்சாகமான பொழுதாகப் போகும். அது மாதிரி இன்னும் சில நண்பர்களைச் சந்திப்பதும் அப்படித்தான் இருக்கும். ராகவன் யதி என்ற நாவலை முடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.
நான் அவரைப் பார்த்துக் கேட்டேன். “நாவல் எழுதுவது எப்படி?”
அவர் சொன்னார் : “கணினி முன்னால் உட்கார்ந்து அடித்தா நாவல் வந்துவிடும்.”
நான் யோசித்தேன். எப்படி அதுமாதிரி முடியும். ஒரு முறை அசோகமித்திரனைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவரும் அப்படித்தான் சொன்னார். இதெல்லாம் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
என்னால் சிறுகதைகள் எழுத முடிகிறது, கவிதைகள் எழுத முடிகிறது. ஏன் கட்டுரைகள் கூட எழுத முடிகிறது. ஆனால் நாவல்?
நான் அசோகமித்திரன் நாவல்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். என்னால் அதுமாதிரி ஒரு நாவல் கூட எழுத முடியாது. பா ராகவனின் பூனைக்கதையை எடுத்துப் படித்தேன். ஒரு பிட்டு கூட எழுத முடியாது. எனக்கு சில மாதங்களுக்கு முன் படித்த கறையான் என்ற நாவலைப் போல் எழுத வேண்டுமென்று ஆசை. ஆனால் அதுவும் சாத்தியமில்லை. அல்பெர் கம்யூ எழுதிய அந்நியன் நாவல் மாதிரி கறையான் நாவல் இருந்தது. முடியாது அதுவும் சாத்தியமில்லை. இந்தத் தருணத்தில் நகுலன் நாவல்களை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அதுதான் சரியாக வரும்போல் தோன்றியது. நகுலன் நாவலின் முக்கியமான ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால் யாரும் விரும்பிப் படிக்க மாட்டார்கள். யாராவது அவருடைய முழு நாவலைப் படித்து எதாவது சொல்ல முடிந்திருக்கிறதா என்றால் அது பெரிய சவாலாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றிது. என்ன இருக்கிறது என்று கூட சொல்லி விடுவார்கள். காவ்யா என்ற பதிப்பகம் அவருடைய முழு நாவல்களை டிசம்பர் 2004ல் வெளியிட்டார்கள். இன்னும்கூட அந்தப் புத்தகம் விலைக்குக் கிடைக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு நாள் காலையில் நான் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் கணினியில் அம்ருதா பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகள் ஞாபகம் வந்தது. அந்தக் கட்டுரைகள் வெளிவந்து 8 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. அதைத் தூசி தட்டுவோம் என்று ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் அதற்கு முன் எழுதியவற்றைப் படிக்க நேர்ந்தது. படித்தபோது இது ஒரு நாவலுக்கான சமாச்சாரம் என்று பட்டது.
அப்படித்தான் இந்தத் தன் புனைவு நாவலை உருவாக்கினேன். கிட்டத்தட்ட நகுலன்தான் நான் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்கிறார்.
நகுலன் நாவலான, ‘நிழல்கள்’ நாவலில் நகுலன், கேசவ மாதவன், சாரதி மூவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். யாரை கேசவ மாதவன் என்று குறிப்பிடுகிறார்? யாரை சாரதி என்று குறிப்பிடுகிறார் என்ற குழப்பம் இருக்கும். இவர்கள் மூவரும் எழுதுவதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். நாவலை அவர் எழுதிய ஆண்டு 1965.
என் நாவலில் எல்லோரையும் பட்டவர்த்தமாக எழுதி உள்ளேன். யாரையும் புண்படும்படி எழுதவில்லை. நகுலன் நாவல் மாதிரி என் நாவலிலும் நான் முக்கியமான கதா பாத்திரம். அதனால் இந்த நாவலை நகுலனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். என்னைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள்தான் நாவல். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் அண்டு வரை நடந்த நிகழ்ச்சிகள். 180 பக்கங்கள் கொண்ட ‘ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்’ என்ற என் நாவலின் விலை ரூ.150தான். முகநூல் நண்பர்களுக்காக ரூ.100க்குத் தர விரும்புகிறேன். தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி எண் 9444113205.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன