பிரபு மயிலாடுதுறை
அந்நகரம்
ஒப்பனையாளர்களைக் குறைவாகவும்
சுயமாக ஒப்பனை செய்து கொள்பவர்களை அதிகமாகவும்
கொண்டு
பரபரப்பாக
ஒப்பனை செய்து கொண்டிருந்தது
எதிரேயிருக்கும் மனிதர்களை
ஆடிகளாய்ப் பெரும்பாலானோர்
எண்ண எண்ண
ஒவ்வொருவரின் பிம்பமும்
முடிவிலா சாத்தியங்களுடன் பெருகியது
நாடக மேடைகளின் பின்பக்கமென
அந்நகரில்
வஸ்திரங்களும் ஆபரணங்களும்
விரவிக் கிடந்தன
ஒரு சிறிய முக்கில்
பாலகர்கள் பத்து பேர்
ஒரு பாக்கெட் சீனி வெடியை
மெழுகுவர்த்தி
ஊதுவத்தி
வைத்துக் கொண்டு
வெடித்து வெடித்து
ஆரவாரித்தனர்
அவ்வப்போது
அவர்களைப் பார்த்து
மகிழ்ந்து மகிழ்ந்து
சிரித்தான்
சேலைத் தொட்டிலில்
உட்கார்ந்திருந்த குழந்தை