சில தினங்களுக்கு முன்னால் நான் தபால் கார்டைப் பயன்படுத்துவதைப் பற்றி எழுதியிருந்தேன். நான் பலருக்கு தபால் கார்டில் பேனாவால் எழுதி தபால் கார்டை அனுப்பிக்கொண்டிருந்தேன். யார் என்ன நினைப்பார்களோ தெரியவில்லை. சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சிலர் இது என்ன கூத்து என்று நினைத்திருக்கலாம். பொதுவாக கார்டில் எழுதுவதை நான் உள்படப் பலர் அலட்சியப் படுத்துகிறோம்.
முதலாவது சமீபத்தில் தமிரபரணி புஷ்கரத்திற்கு நெல்லைக்குச் சென்றோம். கள்ளிடக்குறிச்சியில் ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கே ஒரு பெரிய கம்பியில் வந்தக் கடிதங்களைக் குத்தி வைத்திருந்தார்கள். நாம் இதுமாதிரி செய்வதையெல்லாம் விட்டுவிட்டோம். உண்மையில் அதைப் பார்த்துவிட்டு வந்தபிறகு என் வீட்டில் ஒரு நீளமான கம்பியை வாங்கி வருகிற தபால்களை குத்தி வைத்துக்கொள்ளலாமென்று நினைக்கிறேன்.
இரண்டாவது நான் விருட்சம் பத்திரிகையை என் கையால் கைப்பட எழுதி தபாலில் செலுத்துகிறேன். அப்படி கையால் எழுதி தபாலில் சேர்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் டைப் அடித்து அதை கட் செய்து ஒட்டலாம். நான் அதைச் செய்ய விரும்பவில்லை.
மூன்றாவது கடிதம் மூலம் நாம் நம் மனதில் படுவதைக் கொட்டுவது. இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. அக் கடிதத்தைப் பெறுபவர்கள் நமக்குக் கிறுக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கலாம். அல்லது அலட்சியப் படுத்தலாம். உண்மையில் நம் எண்ணங்களை அறிவதற்கான தகுதிப் படைத்தவர்களாக அவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் நம் எண்ணங்களைக் கொட்டி விடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை நம் எண்ணங்களை காலி செய்வதுதான் முக்கியம். நம் கடிதங்களைப் பெறுபவர்கள் நமக்குப் பதில் அளிக்க வேண்டுமென்பதில்லை. எண்ணங்களை காலி செய்வது முக்கியமான செயல் என்று நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் செய்து கொண்டு வந்தால் இது அற்புதமான அனுபவத்தைத் தரும். முயற்சி செய்து பாருங்கள்.
என் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு முன் என்னிடம் வெளிநாடு செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு போனார். எனக்கு ஆச்சரியம் ஏன் என்னிடம் அவர் சொல்ல வேண்டுமென்று. ஆனால் அவர் வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு சொல்லவில்லை. ஒருநாள் யாருக்கோ போன் செய்தபோது அவர் போனில் என் கை பட்டுவிட்டது. போனில் அவர் எடுத்துப் பேசுகிறார். எனக்கு ஆச்சரியம். நீ எப்போது வந்தே என்று அவரைக் கேட்டேன். அவர் சென்னை வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன என்றார். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் போகும்போது சொன்னவர், வந்த விஷயத்தைச் சொல்லவில்லை என்று. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது தேவையில்லாத எண்ணம். இதனால் ஒரு பிரயோசனும் இல்லை. இந்த எண்ணத்தை ஒழிக்க என்ன செய்யலாம்? ஒரு கார்டு எழுதி அவரிடமே கேட்டுவிடலாம். அப்படி ஒரு கார்டு எழுதினால் என்னிடம் தொற்றிக்கொண்டிருக்கும் தேவையில்லாத எண்ணம் ஒழிந்து விடும் அல்லவா?
இப்படி எத்தனையோ அபத்தமான எண்ணங்களை ஒழிக்க நமக்கு போஸ்ட் கார்டு உதவி செய்யும். இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் பிரமிள் அந்தக் காலத்தில் அதிகமாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் உத்தேசித்துத்தான் போஸ்ட் ஆபிஸில் கார்டு வாங்கி வைத்திருக்கிறேன். கார்ட் மூலம் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை ஒழிப்பதுதான் என் திட்டம். ஆனால் பாருங்கள் நேற்று ஒரு பெரிய பெட்டியைத் தூக்கினேன். வலது தோள்பட்டையில் வலி. கார்டு எடுத்து எழுத முடியாத அளவிற்கு வலி. கார்டுகள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. டாக்டர் பாஸ்கரனுக்கு உடனடியாக ஒரு கார்டு எழுத வேண்டும்.