கவிதைப் படிமமும் அழகியலும் என்ற தலைப்பில் நாளை விருட்சம் இலக்கியச் சந்திப்பில் ஸ்ரீராம் குரூப் அலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 பேசப் போகிறவர் வேணு வேட்ராயன். அவர் மருத்துவர். கவிஞர். அவருடைய முதல் புத்தகமான அலகில் அலகு விருட்சம் வெளியீடாக வருகிறது.
மூன்று படைப்பாளிகளை அவரால் மறக்க முடியாது என்கிறார். ஒருவர் ஜெய மோகன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் தேவதேவன்.
72 கவிதைகள் அடங்கியத் தொகுப்புதான் அலகில் அலகு. இவருடைய கவிதைகள் வித்தியாசமானவை. இவர் கவதைகளைப் படிக்கும்போது இவரே ஒரு படிமக் கவிஞராக எனக்குத் தோற்றம் தருகிறது. இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.
இந்த ஞாயிறு இளம் காலை
ஏன் நீலம் தரித்து நிற்கிறது.
நீண்ட நெடும் இரவெல்லாம் தோய்ந்த
நெஞ்சின் அடர்நீலம்
கடலலை மேல் மென்வானில் பாரித்து கிடக்கிறது.
மெல்ல சாலையில் ஊர்ந்து சென்றால்
எங்கு காணினும் நீலமடா !
(பழ சாறு கடையில் மொசம்பி பழங்களிலும்
நீலம் வழிகிறது)
இவருடைய எந்தக் கவிதையிலும் தலைப்பு இல்லை. 78 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை .60 தான். நாளை மாலை 6 மணிக்குக் கூட்டம். மழை வராது என்று நினைக்கிறேன். அவசியம் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.