மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 96

பதிவுகள்

தி சோ வேணுகோபாலன்

இன்று வாசலில்
சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது
நாளைக்கு
இறுகி விடும்.

காக்கையின் கால் விரல்
கழுதையின் குளம்படி
குழந்தையின் காலடி
பிச்சைக்காரன்
குடுகுடுப்பைக்காரன்
உஞ்சி விருத்தி பிராமணன்
தெரிந்தவர், தெரியாதவர்
ஸ்கூட்டர் சக்கரம்
இரவின் சுவர் நிழலில்
எவனுக்கோ
இரகஸியமாய் காத்து நின்ற
கால் மெட்டி நெளிவு

இளங்கன் றின் வெள்ளை மனம்
பசுவின் நிதானம்
காளையின் கம்பீரம்
நாயின் குலப்பகை
பூனையின் கபடம்
பன்றியின் அவலட்சணம்

இறு கிய தரையில்
நிரந்தரம்
விரிசல் கண்டு
தூள் ஆனாலும்
புதியவை பதியாது
பதிந்ததும் நிலைக்காது

உருண்டுவரும் கோலிகள்
நில்லாது போகலாம்
அல்லது
குழிக்குள் விழிக்கலாம்

நன்றி : மீட்சி விண்ணப்பம் – கவிதைகள் – தி சோ வேணுகோபாலன் – க்ரியா வெளியீடு – பக்க எண் குறிப்பிடப்படவில்லை – வெளிவந்த ஆண்டு : 1977 – விலை : ரூ.5

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன