என் நண்பர் ஐராவதம் மேற்கு மாம்பலம் நாயக்கன்மார் தெருவில் வசித்து வந்தவர், 2014ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் ஒரு தமிழ் அறிஞர். கதைகள் எழுதுவார், கவிதைகள் எழுதுவார், கட்டுரைகள் எழுதுவார். அவர் படித்தப் புத்தகங்களைப் பற்றி விமர்சனம் செய்வார். மொழிபெயர்ப்பும் செய்வார். ஆனால் பத்திரிகை உலகம் அவர் திறமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
அசோகமித்திரனே ஐராவதம் மூலமாகத்தான் ஆங்கிலப் புத்தகங்களைத் தெரிந்துகொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட திறமையான படைப்பாளியைப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ள வில்லை. அவரிடமிருந்து ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு கட்டுரையோ ஒரு மொழிபெயர்ப்போ ஏதோ ஒன்றை வாங்கிப் பிரசுரம் செய்திருக்கலாம். யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்ட படைப்பாளி.
ஆனால் இது குறித்தெல்லாம் அவருக்கு வருத்தம் இருந்த மாதிரி தெரியவில்லை. அவர் வீடு இருந்த தெரு முனையில் உள்ள லென்டிங் லைப்ரரியில் போய் தீபாவளி மலர்களை வாடகைக்கு எடுத்து வாசிப்பார். அதாவது பழைய தீபாவளி மலர்கள். அவர் புதியதாக எந்தத் தீபாவளி மலரையும் காசு கொடுத்து வாங்கிப் படிக்க மாட்டார். பழைய புத்தகக் கடைகளில்தான் பத்திரிகைகள் புத்தகங்கள் வாங்குவார்.
2012ஆம் ஆண்டு வந்த தீபாவளி மலரை 2013 ஆம் ஆண்டு வாடகைக்கு எடுத்துப் படிப்பார். தன் படைப்புகள் எதுவும் வரவில்லை என்ற எண்ணம் இல்லாமல் அந்தத் தீபாவளி மலரில் வந்தவற்றைப் படித்து விமர்சனம் செய்வார்.
06.03.2013 அன்று அவர் தினகரன் தீபாவளி மலர் 2012ஐ விமர்சனம் செய்துள்ளார். அதை அப்படியே இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.
தினகரன் தீபாவளி மலர் 2012ம் ஆண்டு வெளியானது பார்க்கக் கிடைத்தது. பவானி ஜமக்காளம், பாகவத மேள கிராமம் மெலட்டூர், கொங்கு சமையல், தஞ்சாவூர் தாம்பூலம் என்று வித்தியாசமான கட்டுரைகள். சிறுகதைகளில் என்னைக் கவர்ந்தது எஸ். ராமகிருஷ்ணனின் வெறும் பிரார்த்தனை. குடிகார அப்பா. பொறுமைசாலியான அம்மா. மருத்துக்கடையில் வேலைப் பார்க்கும் காதம்பரி. (மருந்துக்கடை என்பதால் நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும். இயற்கை உபாதைக்குக் கூட பேருந்து நிலையத்திற்குள் உள்ள இலவச கழிப்பறைக்குத்தான் போக வேண்டும். அதற்குள் கால் வைக்கமுடியாதபடி அசிங்கமாக இருக்கும். அதனால் அடக்கி அடக்கி அவளுக்குப் பல நாள் அடிவயிற்றில் வலியாகியிருக்கிறது.) பள்ளியில் படிக்கும் ரமா. இவர்கள்தான் குடும்ப நபர்கள்.
அப்பாவிற்குள் ஒரு பாம்பு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது நினைத்தாற்போல் படமெடுத்து சீறுகிறது. அதற்கு இரை போட ஆள் தேவை. அதற்குத்தான் குடும்பம். கொத்திக் கொத்தி பாம்பின் விஷம் மெல்ல அவர் உடலில் கலந்து விட்டிருக்கிறது. குடிக்கு எதிராக போரிடும் தமிழகத் தலைவர்கள் வைகோ, மருத்துவர் ராமதாஸ், பழ நெடுமாறன், தமிழருவி மணியன் இந்தக் கதையை அவசியம் படித்து பிரதிகள் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும்.
ரமா ஒருநாள் ஆற்றாமை தாள முடியாமல் சொன்னாள். ‘அப்பா செத்த அன்னைக்குத்தான் அம்மா நிம்மதியா தூங்குவா. ஒரு வேளை அதுக்கு முன்னாடி அம்மா செத்துட்டா நாம எல்லாம் தெருவில்தான் நிக்கணும். அப்பா நம்பளை அடிச்சே கொன்னுடுவார்.’
வீரியமிக்க வரிகள். தீபாவளி மலர் கதையில் இத்தகைய வரிகளை ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற ஆசார பத்திரிகைகள் அனுமதித்திருக்குமா, தெரியவில்லை. தினகரனுக்கு ஹாட்ஸ் ஆப்.
ஐராவதத்தின் இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது அவருக்குள்ளே தீபாவளி மலர்களில் அவருடைய படைப்புகள் வந்திருக்க வேண்டுமென்ற ஏக்கம் இருந்திருக்க வேண்டுமா என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.