இன்று கூட நான் விருட்சம் 106வது இதழ் அனுப்பிக்கொண்டிருந்தேன். இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும் என்று நினைக்கிறேன். சந்தாதார்களுக்கு அனுப்புவதோடல்லாமல் இலவசமாகவும் அனுப்புகிறேன். நேற்று ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே விருட்சம் இதழ் கவர்களை தபால் தலை ஒட்டி தபால் அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரே ஒரு பெண்மணி மட்டும் தபால் அலுவலகத்தில் இருந்தார். அவர் கோந்து ஒட்டும் இடத்தில் நான் கொண்டுவந்த விருட்சம் பாக்கெட்டுகளை வைத்துவிட்டுப் போகச் சொன்னார். உண்மையில் அந்த இடத்தில் வைப்பதற்கு என் மனம் ஒப்பவில்லை. அது போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று தோன்றியது. நான் அனுப்பும் விருட்சம் இதழ்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்ததா என்ற தகவலே தெரியாது. யாரும் சொல்லமாட்டார்கள். இதுதான் பிரச்சினை. எந்தத் தகவலும் கிடைத்தவர்களிடமிருந்து வராது. இப்படித்தான் என் நெருங்கிய எழுத்தாள நண்பர்களிடம் நான் அனுப்பும் விருட்சம் பற்றி எந்தத் தகவலும் தெரியாது. வந்தது என்று கூட சொல்லமாட்டார்கள். நான் எங்காவது அவர்களைப் பார்த்தால்கூட அவர்கள் விருட்சம் என்ற பெயரைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். அதனால் நெருங்கிய எழுத்தாள நண்பர்களுக்கு விருட்சம் அனுப்புவதை கட் செய்துகொண்டு வருகிறேன். நான் போன முறை விருட்சம் அடித்த எண்ணிக்கையை விட 200 பிரதிகளைக் குறைத்துவிட்டேன். இதனால் எனக்கு ரூ.2000 வரை ஆகும் செலவு குறைந்து விட்டது. இந்த இடத்தில் திகசியையும் வல்லிக்கண்ணனையும் நினைத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நான் விருட்சம் அனுப்பினால் உடனே படித்துவிட்டு கார்டில் பதில் எழுதுவார்கள். என்னைப் பொறுத்தவரை இது மகத்தான செயலாகக் கருதுகிறேன். உடனே அவர்கள் அனுப்பும் அஞ்சல் அட்டைகள் மூலம் விருட்சம் போய்ச் சேர்கிறது என்று எனக்குத் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் இப்போது இல்லை.