நேற்று இரவு நானும் என் நெருங்கிய உறவினரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 ஐப் பார்த்தோம். என் நெருங்கிய உறவினர் என்னை விட இளைஞர். அவருக்கு கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்களிடம் அலாதியான அபிமானம் உண்டு.
நான் தியேட்டரில் போய் சினிமாப் பார்ப்பதைப் பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் தியேட்டரில் சினிமா பார்ப்பதில்லை. வெறுப்பு என்பதை விட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நான் இருப்பதாக நான் தோன்றும்.
எனக்கும் கமலுக்கும் ஒரே வயது. என் உறவினர் இதைச் சுட்டிக்காட்டும்போது, உண்மை என்று ஆமோதித்தேன். ஆனால் கமலின் உருவம் திரையில் வேறு விதமாகத் தோன்றியது.
இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து எனக்குச் சற்றும் புரியவில்லை. அவர்கள் பேசும் வசனங்கள் செயற்கையாக இருப்பதாகப் பட்டது. ஒரு தமிழ் படத்தை முதன் முறையாகப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தது இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் நான் விஸ்வரூபம் 1 ஐப் பார்த்துவிட்டுத்தான் இதைப் பார்த்தேன்.
எப்படி இந்தப் படம் சற்றும் புரியாமல் ஆனால் வன்முறையின் லட்சணமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி யோசித்தேன். கதாபாத்திரங்களுக்குள் ஏதோ குறை இருப்பதுபோல் பட்டது. ஏதோ ஒன்ற முடியாதத் தன்மை சுழன்று கொண்டிருப்பதுபோல் பட்டது.
இரவு தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு பார்த்தது வேற கடுப்பாக இருந்தது.
இந்தச் சமயத்தில்தான் எனக்குத் தோன்றியது. இதுமாதிரி தமிழ் சினிமாக்களை தியேட்டரில் பார்ப்பதை விட ஒரு தமிழ் சிறுகதையைப் படித்தால் என்ன என்று.
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை இங்கே பட்டியல் இட விரும்புகிறேன்.
தமிழ்ச் சிறுகதை : எந்தக் கதையை வேண்டுமானாலும் படிக்கலாம். குறிப்பிட்ட நேரம் என்பது கிடையாது. பாதி படித்துவிட்டு திரும்பவும் இன்னொரு பாதியை மெதுவாகப் படிக்கலாம்.
தமிழ் சினிமா : தியேட்டரில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க வேண்டும். பாதியில் போக முடியாது. முழுவதும் பார்த்தே தீர வேண்டும.
தமிழ்ச் சிறுகதை: எந்தக் கதையை வேண்டுமானாலும் படிக்கலாம். தரம் மோசமாக இருக்காது. படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் வேற வழியில்லாமல் படிக்கிறோமே என்ற எண்ணம் தோன்றாது.
தமிழ் சினிமா : எப்படி எடுத்திருக்கிறானோ அப்படித்தான் தமிழ்ப்படம். நெருக்கமாக அருகில் பலர் புடைசுழ படம் பார்க்க வேண்டும. பெரும்பாலும் தமிழ் சினிமாக்கள் சிறப்பாக இருப்பதில்லை. வேற வழியில்லாமல் இருக்க வேண்டும்.
தமிழ்ச் சிறுகதை : சினிமாவைப் போல் நம்மைப் பாடாய் படுத்தாது. படிக்கிறவர் கற்பனையில் கதை நகர்ந்து கொண்டிருக்கும்.
தமிழ் சினிமா : எல்லாம் செயற்கையான வசனங்கள். செயற்கையான ஜோடனைகள்.
தமிழ்ச் சிறுகதை : கதை நம்முள் நடக்கிறது. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் கதை உடனே நகர்ந்து விடும்.
தமிழ் சினிமா : தியேட்டரில் பார்த்தால் வெட்டி செலவு.
தமிழ்ச் சிறுகதை : ஒரு செலவும் இல்லை. நூல் நிலையத்திற்குப் போனால் ஏகப்பட்ட சிறுகதைகளைப் படிக்கலாம். அல்லது விருட்சம் போன்ற பத்திரிகையை வாங்கினால் ரூ.20தான் ஆகும்.
தமிழ் சினிமா : சினிமா பார்ப்பதால் நம்மால் கற்பனை செய்ய முடியாது.
தமிழ்ச் சிறுகதை : படிப்பவரின் கற்பனை வளத்தைத் தூண்டும்.
தமிழ் சினிமா : மொத்தத்தில் வீண்.
தமிழ்ச் சிறுகதை : வீணல்ல. எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் படித்து ரசிக்கலாம். அல்லது மூடி வைத்துவிடலாம்.