வழக்கம்போல சீத்தாலட்சுமி அபார்ட்மெண்டிலிருந்து கிளம்பினேன். பிளஷர் வண்டியில். அப்போது ஒரு குரல் கேட்டது. ‘இதோ முப்பது’ என்று. ‘இதோ முப்பதா’ என்னவென்ற புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். கோவிந்தன் ரோடைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனேன். திரும்பவும் குரல் : இதோ முப்பது. ஏய் சும்மாயிரு என்று என்னைக் கடிந்து கொண்டேன். ஆனால் இதோ முப்பது என்ற வார்த்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
என் நண்பருடன் தினமும் ஒரு பூங்காவில் வாக் செய்வேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவரும் என்னுடன் வாக் செய்ய கிளம்பினார். ‘இதோ முப்பது’ என்று குரல் கேட்டது. நண்பரிடம் கேட்டேன், ‘உங்களுக்கு எதாவது குரல் கேட்டதா?’ என்று.
‘இல்லையே?’ என்று சொன்னார்.
நானும் நண்பரும் தினமும் வாக் செய்வதை ஒரு கடமையாக வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் உரசிக் கொள்ளும் இடமும் கூட. நான் எதாவது சொல்வேன். அவர் எதாவது சொல்வார் இரண்டு பேரும் சண்டைப் போடுவோம்.
கொஞ்சதூரம் வாக் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, அவரும் சொன்னார். ‘ஆமாம். இதோ முப்பது என்று குரல் கேட்கிறது,’ என்று.
‘என்னது முப்பது என்று தெரியவில்லை.
காலையிலிருந்து இந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது,’
‘புரியவில்லை. உங்கள் வயதை எதற்காவது குறிப்பிடப்படுகிறதா?’
‘இல்லை. எனக்கு 64வயது. அப்படியென்றால் முப்பது என்று ஏன் சொல்ல வேண்டும்?’
வாக்கிங்கை முடித்துவிட்டு நாங்கள் இருவரும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். ஒரு காப்பி வாங்கிக் குடித்தோம். ஆனால் இதோ முப்பது கேட்காமல் இல்லை.
“ஏன் இப்படி ஒரு குரல் கேட்கிறது என்று எனக்கும் புரியவில்லை,” என்றார்.
நான் தீவிரமாக யோசித்தேன்.
“இப்போது புரிந்துவிட்டது,” என்று உற்சாகமாகக் கத்தினேன்.
“ஏன் கத்துகிறீர்கள்? சாதாரணமாக சொல்லக் கூடாதா?” என்றார் நண்பர்.
“உண்மைதான் சாதாரணமாகச் சொல்லலாம்,”
“சரி என்ன கண்டுபிடித்தீர்கள்?”
“அதுதான் விருட்சம். இந்த ஜøலை மாதம்தான் நான் விருட்சம் கொண்டு வந்து முப்பது வருடம் முடிகிறது,”
“விருட்சம் வந்து முப்பது வருடம் ஆகிவிட்டதா?”
“ஆமாம்.”
“பெரிய முயற்சி,”
“எனக்கே தெரியவில்லை. நான் கொண்டு வந்த பத்திரிகைக்கு முப்பது வருடம் முடிந்துவிட்டது.
முதல் இதழ் 1988ல் வந்தது…”
“என்ன செய்யப் போகிறீர்கள்?”
“ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்,”
“எங்கே?”
“ரைட்டர்ஸ் கேப்பில்.”
“எப்போது?”
“106வது இதழ் வந்த பிறகு.”
போஸ்டல் காலனியில் விருட்சம் லைப்ரரியில் அமர்ந்திருந்தபோது விருட்சம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அட்டைப் பெட்டிகள் நிறையா விருட்சம் இதழ்களை அடுக்கி வைத்திருக்கிறேன். இப்படி ஏகப்பட்ட அட்டைப் பெட்டிகள். ஒவ்வொரு முறையும் விருட்சம் அடிக்கும்போது இதழ்கள் மீந்து போய்விடும்.
ஒருமுறை சி சு செல்லப்பா அவர்களின் புதல்வனைச் சந்தித்தேன் பழைய இதழ்கள் எழுத்து கிடைக்குமா என்று அவரைக் கேட்டேன். எதுவுமில்லை என்றார். ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். நிறையா இதழ்கள் மீந்து போய் கிடந்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை. பேப்பர் கடையில் போட்டுவிட்டேன் என்றார் அவர். சி சு செல்லப்பா இருக்கும்போதே அது மாதிரி செய்ததாக அவர் சொன்னார்.
அவர் சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இதோ என் முன்னாலும் பல அட்டைப் பெட்டிகள் நிறையா விருட்சம் பழைய இதழ்கள். ஒவ்ùôவன்றாக எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் எப்படி இப்படியெல்லாம் கொண்டு வந்தோம் என்ற வியப்புதான் கூடிக்கொண்டே போகிறது.
என் கையில் 92வது இதழ் கிடைத்தது. அதில் ஒரு கவிதை செ சுஜாதா என்பவர் எழுதியது
நதி இலை எறும்பு
உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன்
நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்
அன்பை
காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை
வன்மத்தை
வெறுமையை
நிறைவை
கொழுத்த உன் கன்னத்தில்
திரண்டிருக்கும் அம் மச்சம்
என் கண்களில் விழுந்து உறுத்துவதை
அறியாமலேயே
இதோ அட்டைப் பெட்டிகள் நிறையா பழைய இதழ்களை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறேன். அட்டைப் பெட்டியில் இருக்கும் பழைய இதழ் என்னைப் பரவசப்படுத்தத் தவறவில்லை. கட்டாயம் எதிர்கால வாசகர்கள் வருவார்கள். என்னிடமிருந்து விருட்சம் பழைய இதழ்களைக் கேட்டு வாங்காமல் இருக்க மாட்டார்கள். அட்டைப் பெட்டிகளும் காலி ஆகி விடும்.