மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு

நேற்று மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
ஒவ்வொரு ஆண்டும் விமர்சனத்திற்காக மேலும் சிவசு விருது வழங்கி வருகிறார். தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
சிறப்பாகவே இக் கருத்தரங்கம் நடந்தது. 50 பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள்.
பிரதியியல் திறனாய்வில் தொல்காப்பிய பாதிப்புகள் என்ற தலைப்பில் முதல் அமர்வும், தமிழவன் நாவல்கள் தேவைப்படுத்தும் புதிய விமர்சனங்கள் என்ற தலைப்பில் இரண்டாவது அமர்வும், அமைப்பியல் தாக்கத்தோடு வரும் பிற விமர்சனப் போக்குகள் என்ற மூன்றாவது அமர்வும் வெற்றிகரமாக நடந்து முடிந்தன.
பூக்கோவும் தொல்காப்பியரும் என்ற தலைப்பில் ராஜா அவர்களும், குறியியலும் தொல்காப்பிய கவிதையியலும் என்ற தலைப்பில் பெ மாதையன் அவர்களும் பேசியதை கூர்ந்து கவனித்தேன்.
தொல்காப்பியத்தைப் பற்றி நான் பெரிதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அமைப்பியலை முன்னிறுத்தி விமர்சனம் செய்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அமைப்பியல் கோட்பாடு குறித்து தமிழவன், நாகார்ஜ÷னன் எழுதியவற்றைப் படித்துப் படித்து அது குறித்து இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டுவிட்டேன்.
திறனாய்வு ஒரு பொதுப்பார்வை என்ற தலைப்பில் எனக்கும் பேச வாய்ப்பு கிடைத்ததால், தூசிப்படிந்திருந்த அமைப்பியல் வாதப் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக தமிழவன் புத்தகங்களையும் நாகார்ஜ÷னன் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். நாகார்ஜ÷னன் புத்தகங்களான காலச்சாரம், அ-கலாச்சாரம், எதிர் கலாச்சாரம் , நளிர், மறைதுறை மூட்டம் என்ற மூன்று புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அதோடு அல்லாமல் படைப்பும் படைப்பாளியும், தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும், அமைப்பியல் வாதமும் தமிழ் இலக்கியமும், என்ற தமிழவன் புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு வாசித்தேன். இதைத் தவிர அமைப்புமையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக் காவிய இயல் என்று கோபி சந்த் நாரங்க் என்ற புத்தகத்தையும் வைத்துக்கொண்டேன். எனக்கு தமிழவன் மீதும் நாகார்ஜ÷னன் மீதும் மிகுந்த மரியாதை உண்டு.
ஆனால் தேர்வு எழுதுகிறபோது அவசரம் அவசரமாகப் படிக்கிற மனநிலையில்தான் சிலநாட்களாலய் இந்தப் புத்தகங்கள் படிக்கும்போது இருந்தேன். நாகார்ஜ÷னன் புத்தகத்தைப் படிக்கும் போது அங்கங்கே பளீர் பளீர் என்று வார்த்தைகளால் ஒரு சுளீர் அடி கொடுக்கிறார்.
மறுதுறை மூட்டம் என்ற புத்தகத்தில் 156 பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘நமக்கான கேள்வியென ஒன்று உருவாகாத வரை, எத்தனை நூல்கள் வாசித்தாலும் அதில் பொருளிருக்காது, உள்ளே செரிக்காது, தவிர, நீங்கள் கேட்கும் கேள்வி எப்படியிருக்க வேண்டும்? சம கால்தின் அதிதீவிரச் சிக்கல்கள் உங்களைக் கடத்திச் செல்வதன் வழி அது உருவாக வேண்டும்.’
இன்னொரு இடத்தில், ‘அதே இணையம் இன்று தனிமனித ஒலிஒளிபரப்பாக மாறி, பங்கேற்கும் ஒருவர் தாமே வலிந்து அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பிரகடனம் செய்து எல்லோருக்கும் விட்டுவதாக்கும் ஆபாஸ சாத்தியமாயிருக்கிறது. இதுதான் என்ன ஒரு அபத்தம்,’ என்கிறார். இவருடைய புத்தகத்தில் 153 பக்கத்திலிருந்து 240ஆம் பக்கம் வரை ஒருவர் பலமுறை படித்துப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
இப்போது நான் கோபிசந்ரத் நாரங்க் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன