திருக்குறள் சிந்தனை 20

இரண்டு நாட்களாரய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கவில்லை. நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன். யாருமே சரியாக உச்சரித்து கவிதை வாசிக்கவில்லை. மேலும் என் பத்திரிகை புது அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. உண்மையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. எதிர்காலத்தில் யார் இனி தமிழ்ப் புத்தகங்கள் படிப்பார்கள் என்ற கிலி உணர்வு ஏற்பட்டது. புத்தகங்கள் விற்காவிட்டாலும் எனக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு காரில் சென்ற அனுபவம் கிடைத்தது.
நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் பாரதியார் கட்டுரைகளைப் படித்தேன். தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரும்ரை மின்சார வண்டியில் தூரன் கொண்டு வந்த பாரதியார் கட்டுரைகளை வாசிப்பேன். அதே நினைவோடு வந்ததால் நான் எப்போதும் வாசிக்க விரும்பும் திருக்குறளை இப்போதுதான் வாசிக்கிறேன்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுங்கு

உலகமே நீரை நம்பித்தான் இருக்கிறது. அந்த நீரும் மழைபெய்யாவிட்டால் கிடைக்காது. மழை இல்லாவிட்டால் மனிதரிடத்தே ஒழுக்கம் என்பது இல்லை.
நான் முன்பு இருந்த இடத்தில் தண்ணீருக்காக ஒருவருடன் ஒருவர் சண்டைப் போட்டுக்கொள்வோம். இத்தனைக்கும் தண்ணீருக்காகச் செலவிடும் தொகையைப் பகிர்ந்துகொள்வதில்தான் பெரிய சண்டையே இருக்கும். ஒரு குடியிருப்பில் ஒருவர் மட்டும் இருப்பார். இன்னொரு குடியிருப்பில் ஐநூறு பேர்கள் குடியிருப்பார்கள். அந்த ஒருத்தர் நான் ஏன் அவ்வளவு பணம் தண்ணீருக்காகக் கொடுக்க வேண்டும் என்று சண்டைக்கு வருவார். இங்குதான் திருக்குறள் ஞாபகம் வருகிறது. üவான்இன்று அமையாது ஒழுங்குý என்கிறார் வள்ளுவர். மாம்பலத்தில் ஒரு காலத்தில் நான் பட்ட அனுபவத்தைப் பார்த்ததுபோல் சொல்கிறார் வள்ளுவர்.
நவீன கவிஞரின் ஒரு கவிதையை இங்குத் தர வேண்டுமென்று நினைக்கிறேன். ப மதியழகன் என்பவர் எழுதி உள்ள கவிதை. கவிதையின் தலைப்பு üமழை மோகினி.ý

கருமேகங்கள் கருவை சுமக்கும்
தாய் போல
தண்ணீரை சுமந்து வந்தன
அருகாமையில் பெய்யும்
மழைக்கு அறிகுறியாய்
காற்றில் மண்வாசம் அடித்தது
வானொலியின் ராகங்கள்
மழைமோகினியை
வரவேற்குமாறு இருந்தன
கதிரவன் மேற்கில் மறையாமல்
மேகத்திற்குள் மறைந்து கொண்டான்
முனிவர்கள் தவம் செய்து
சிவனை எதிர்பார்ப்பது போல
மரங்கள் மழையை எதிர்பார்த்து நின்றன
சில மழைத்துளிகள் மண்ணில்பட்டவுடன்
பூமித்தாய்
சாபவிமோசனம் அடைந்தாள்
மேகங்களுக்குள் சிறைப்பட்ட தண்ணீர்
பூமியை அடைந்ததும்
அதன் சுதந்திர தாகம் தணிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன