கேள்வி கேட்பாளர் : ஏன் திருக்குறளை இப்போது படிக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதுவரை திருக்குறளைப் பற்றி ஞாபகம் இல்லாமல் இருந்தேன். அக் கூட்டத்திற்குப் பிறகு திருக்குறளைப் படிக்க வேண்டுமென்று படிக்கிறேன்.
கே.கே : திருக்குறள் என்ன சொல்கிறது?
அழகியசிங்கர் : திருக்குறளில் காணப்படும் சொல் நயமும், வார்த்தை ஜாலமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்தக் காலத்தில் அவர் எழுதியதை இப்போது பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.
கே.கே : தினமும் படிப்பீர்களா?
அழகியசிங்கர் : படிக்க முடியுமென்று நினைக்கிறேன்.
கே.கே : மேலோட்டமாகவா ஆழ்ந்தா
அழகியசிங்கர் : ஆழ்ந்துதான் படிக்க எண்ணி உள்ளேன். ஆழ்ந்துதான் திருக்குறளைப் படிக்க முடியுமென்று நினைக்கிறேன்.
கே.கே : உங்களை குறள் மாற்றியிருக்கிறதா?
அழகியசிங்கர் : ஒரு குறள் மாத்திரிம் என் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும். அது எந்த அதிகாரத்தில் வந்திருக்கிறது என்று தெரியாது.
கே.கே : குறளை சொல்ல முடியுமா?
அழகியசிங்கர் : முடியும். நான் ஞாபகத்திலிருந்து எழுதினால் தப்பாகக் கூட இருக்கும். அந்தக் குறளின் சாரம்சத்தைக் குறிப்பிடுகிறேன்.
கே.கே : கூறுங்கள்
அழகியசிங்கர் : உன் வரவை விடச் செலவு அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறள் சொல்கிறது.
கே.கே : இப்போது எந்தக் குறளைக் குறிப்பிடப் போகிறீர்கள்?
அழகியசிங்கர் : 19வது குறள்
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
மழை பெய்யாவிட்டால் இந்த உலகத்தில் செய்யப்படும் தானமும் தவமும் மனிதர்களால் செய்ய முடியாமல் போய்விடும். அடிப்படையில் மழைதான் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறது. வியன்உலகம் என்ற வார்த்தை பிடித்திருக்கிறது.
க நா சுவின் ஒரு கவிதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மின்னல் கீற்று
புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டு நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா இன்பம்
சட்டச்சட பத்துத் தூற்றல்கள். ஆஹா ஆஹா
பத்தே பத்துத் தூற்றல்தான – பின்னர் புழுதிய கிளறிய
காற்று விசிற மழை ஓடி நகர்ந்துவிட்டது கரியவானம்
பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று என்னைத் தேடிற்று
கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடையின் கீற்று
என்னைத் தொட்டியிருக்கும்; உலகை அழித்திருக்கும்;
தினசரிச் செய்திகள் சுற்றிருக்கும்; தூற்றல் இன்பம்
மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும், புழுதி
எழுந்து படர்ந்திருக்கும்; உலகம் ஒழிந்திருக்கும். நான்
தனியிருந்து என்ன செய்வதென்று கை நீட்டாதிருந்தேன்.
(க நா சு கவிதைகள்)